சமூக சேவகியும், எழுத்தாளருமான சுதா நாராயணமூர்த்தி (Sudha Narayana Murthy) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கர்நாடக மாநிலம் ஷிகான் நகரில் (1950) பிறந்தவர். தந்தை மருத்துவர். ஹூப்ளி பிவிபி பொறியியல் கல்லூரியில் மின்பொறியியல் பயின்றார். மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறி தங்கப் பதக்கம் வென்றார். பெங்களூரு இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் கணினி அறிவியலில் எம்டெக் பயின்றார். அதிலும் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கம் பெற்றார்.
* டாடாவின் 'டெல்கோ' நிறுவன வேலைவாய்ப்பு விளம்பரத்தில் 'பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம்' என்று போடப்பட்டிருப்பதைப் பார்த்தவர், 'டாடா போன்ற முன்னணி நிறுவனத்தில் பாலினப் பாகுபாடு காட்டலாமா?' என்று விளக்கம் கேட்டு, அஞ்சல் அட்டையில் டாடா குழுமத் தலைவர் ஜேஆர்டி டாடாவுக்கு கடிதம் எழுதினார்.
* திறமை இருந்தால் இவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளுமாறு தேர்வுக் குழுவிடம் கூறினார் டாடா. நேர்முகத் தேர்வில் பங்கேற்று, பணியிலும் சேர்ந்தார் சுதா. டாடா நிறுவனத்தின் முதல் பெண் பொறியாளர் இவர்தான். புனே, மும்பை, ஜாம்ஷெட்பூரில் பணிபுரிந்தார்.
* கணவர் நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிறுவனம் தொடங்க, சுதா சேர்த்து வைத்திருந்த ரூ.10 ஆயிரம்தான் முதல் மூலதனம். இன்போசிஸ் நிறுவன வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். பெங்களூரு பல்கலைக்கழகம், கிறிஸ்ட் கல்லூரியில் கணினி அறிவியல் ஆசிரியர், துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
* கணவருடன் இணைந்து இன்போசிஸ் அறக்கட்டளையை 1996-ல் தொடங்கினார். இதன்மூலம், சமூகத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார். கல்வி, கிராமப்புற முன்னேற்றம், சுகாதாரம், மருத்துவம், கலைகள், கலாச்சார மேம்பாட்டு என பல்வேறு துறைகளில் இந்த அமைப்பு சேவை செய்து வருகிறது.
* கர்நாடகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி, நூலக வசதிகள் ஏற்படுத்தித் தர தீவிர முயற்சி எடுத்தார். அங்கு இதுவரை 50,000 நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 10,000 பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
* நாட்டின் பல மாநிலங்களிலும் சுனாமி, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டபோது, வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பில்கேட்ஸ் பவுண்டேஷனின் சுகாதாரப் பிரிவு உறுப்பினராகவும் உள்ளார். பெண் கல்வியைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
* இவர் நல்ல எழுத்தாளரும்கூட. பயணக் கட்டுரை, தொழில்நுட்ப நூல்கள், நாவல்கள் உட்பட கன்னடம், ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். தான் கன்னடத்தில் எழுதிய 'டாலர் சோஸே' நூலை, 'டாலர் டாட்டர்-இன்-லா' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இது தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டது.
* பத்மஸ்ரீ விருது, கர்நாடக ராஜ்யோத்சவ் விருது, சிறந்த ஆசிரியருக்கான ரோட்டரி கிளப் விருது, ஓஜஸ்வினி விருது, மில்லினியம் மகிளா சிரோமணி, ராஜலட்சுமி விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கவுரவ முனைவர் பட்டம் பெற்றார்.
* மராத்தி திரைப்படத்திலும் ஒரு கன்னடத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இன்று 66 வயதை நிறைவு செய்யும் சுதா நாராயணமூர்த்தி, இன்போசிஸ் அறக்கட்டளை மூலமாக பல்வேறு சமுக நலத்திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.