நோபல் பெற்ற தென்னாப்பிரிக்க இயற்பியலாளர்
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆலன் மெக்லியோட் கர்மக் (Allan McLeod Cormack) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஜோஹன்னஸ்பெர்க் நகரில் பிறந்தவர் (1924). தந்தை 1936-ல் மறைந்தார். ஆசிரியராகப் பணியாற்றி வந்த அம்மா குடும்பத்துடன் கேப் டவுனில் தங்கிவிட்டார்.
* பள்ளியில் பயின்றபோது விவாத மேடைகளில் ஆர்வத்துடன் பங்கேற் றார். வானியலில் நாட்டம் பிறந்தது. இது தொடர்பான நூல்களுடன் கணிதம், இயற்பியலையும் ஆர்வத் துடன் கற்றார்.
* பள்ளிப் படிப்புக்குப் பின்னர் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மின்பொறியியல் பயின்றார். பின்னர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, இயற்பியலுக்குத் திரும்பிவிட்டார்.
* 1944-ம் ஆண்டில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அங்கேயே படிகவியலில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்றார். 1950-ல் நாடு திரும்பிய இவர், கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அணு இயற்பியலிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
* ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்கா மிகச் சிறந்த களமாக இருக்கும் என்பதாலும் அமெரிக்கப் பெண்ணான தன் மனைவிக்காகவும் அமெரிக்கா சென்றார். 1957-ல் மசாசூசெட்ஸ், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு இயற்பியல் துறைத் தலைவராகவும் செயல்பட்டார்.
* 1966-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். அங்கே முக்கியமாக துகள் இயற்பியல் (particle physics) துறை மற்றும் அணு இயற்பியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஒரு மருத்துவமனையின் கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் பகுதிநேர இயற்பியலாளராக பணியாற்றியபோது எக்ஸ்-ரே தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினார்.
* மென்மையான திசுக்களின் தட்டையான பகுதிகளில் எக்ஸ்-ரே இமேஜ்களின் அடர்த்தி மாறுபடுவதால் பிரச்சினைகளைத் துல்லியமாக கண்டறிய முடியாமல் இருந்தது. எனவே வெவ்வேறு கோணங்களில் எக்ஸ் கதிர்களை செலுத்தி, மென்மையான திசுக் களின் தட்டையான பகுதிகளைத் துல்லியமாகக் கணக்கிட முடியும் என்பதை விளக்கினார். இதன்மூலம் சி.ஏ.டி. ஸ்கேனுக்கான கணித நுட்பத்தை வழங்கினார். இந்த நுட்பம், கோட்பாடு அடிப்படையிலான சி.டி. ஸ்கேனிங் முறையைக் கண்டறிய வழிகோலியது.
* இவரது ஆராய்ச்சி முடிவுகள் ஜர்னல் ஆஃப் அப்ளைட் சயின்ஸ் என்ற இதழில் இரண்டு கட்டுரைகளாக வெளிவந்தன. ஏற்கெனவே தான் ஈடுபட்டு வந்த ஆராய்ச்சிகளிலும், கற்பித்தலிலும் தொடர்ந்து கவனம் செலுத்தத் தொடங்கினார். 1971-ல் இங்கிலாந்தின் பொறியாளரான காட்ஃப்ரே ஹவுன்ஸ்ஃபீல்ட் மற்றும் அவரது சகாக்கள் முதல் சி.டி. ஸ்கேனரை உருவாக்கிய பின்னரே, இவரது கோட்பாடு கணக் கீடுகளின் முக்கியத்துவம் வெளிப்பட்டு, நிஜ பயன்பாட்டுக்கு வந்தது.
* இவரது கோட்பாடு மூலம் கணினி உதவியுடனான ‘எக்ஸ்-ரே கம்ப்யுட்டட் டோமோகிராஃபி’ (CT) மூலம் எக்ஸ்-ரே கதிர்களை உடலில் செலுத்தி, உள் உறுப்புகளை முப்பரிமாண வடிவத்தில் கம்ப்யூட்டர் மூலம் திரையில் காணமுடிந்தது. இவரது இந்தக் கண்டுபிடிப்புக்காக காட்ஃப்ரே ஹவுன்ஸ்ஃபீல்டுடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு 1979-ல் இவருக்கு வழங்கப்பட்டது.
* அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கமும் பெற்றார். தென்னாப்பிரிக்காவின் உயரிய ‘ஆர்டர் ஆஃப் மபுங்குப்பே’ என்ற கவுரவம் இவரது மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டது. மருத்துவத் துறையில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆலன் மெக்லியோட் கர்மக் 1998-ம் ஆண்டு 74-வது வயதில் மறைந்தார்.