வலைஞர் பக்கம்

இணைய களம்: தேசிய அவமானம்!

சரவணன் சந்திரன்

கடைசியில், இந்தியாவின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்துகிற நிலைக்கு வந்துவிட்டோம். இது உண்மையிலேயே தேசிய அவமானம். அங்கே போராடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் பேசிப் புரியவைக்க வேண்டிய தேவையில் இருப்பது எவ்வளவு அவமானம் தெரியுமா? 20 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களை எல்லாம் வசதியான விவசாயியாக வரித்துக்கொண்டால் என்ன செய்வது? கடுமையான வறட்சி நிலவுகிறது. ஏற்கெனவே சொன்ன மாதிரி பழங்கள், காய்கறிகள் எல்லாம் போதுமான நீரில்லாமல் செடியிலிருந்து உதிர்ந்துகொண்டிருக்கின்றன. அப்படி உதிர்கிறவற்றுக்குச் சந்தையில் விலை கிடைப்பதில்லை. கிலோ 60 ரூபாய் போய்க்கொண்டிருந்த கொய்யா, இப்போது 15 ரூபாய்க்குப் போனாலே அதிசயம். அதையும் எடுக்கவிடுவதில்லை.

தண்ணீர் இருந்தால் தப்பித்து விடலாம்? ஆனால் என்ன நடக்கிறது தெரியுமா? ஒரு இடத்தில் போர்வெல் தோண்டும்போது 800 அடியில்தான் தண்ணீர் வருகிறது. 800 அடி தோண்டு வதற்கு ஆகும் செலவு லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது. இவர்களின் கணக்குப்படி வைத்துக்கொண்டாலும்கூட 18 ஏக்கர் வைத்திருக்கிற விவசாயி ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய நிலத்தில் 15 போர் போட்டிருக்கிறார். அதில் ஒன்றில் மட்டுமே குறைந்த அளவு தண்ணீர் வந்திருக்கிறது. அதுவும்கூட அரை மணி நேரம் மட்டுமே ஓடுகிறது. போர் போட வசதி இருப்பவர்களின் நிலை இப்படி இருக்கையில், வசதி இல்லாதவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

அண்ணா யுனிவர்சிட்டியில் போய்க் கேட்டால், அறிவியல்பூர்வமாக உறுதியாக சொல்ல முடியாது என்கிறார்கள். எங்களால் நிலத்தடி நீர்மட்டத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாது. ரேண்டமாகத்தான் சொல்வோம் என்று கைவிரிக்கிறார்கள். வெறும் ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கிற விவசாயி ஒருவர் மனைவி மற்றும் உறவினர் நகைகளை எல்லாம் அடகு வைத்து (நகையிருந்தால் பணக்கார விவசாயி என்று சொல்வது குறித்துப் பேசுவதில் பயனில்லை) இப்படிப் பலர் சொன்னதைக் கேட்டுக் குத்துமதிப்பாக ஒரு இடத்தில் தோண்டினார். 1,100 அடி தோண்டியும் தண்ணீர் இல்லை. தமிழ்நாட்டில் பல இடங்களின் கதை இதுதான். போர்வெல் போடுகிறவர்கள் அந்த ஊரில் இப்படி நடந்தது, இந்த ஊரில் இப்படி நடக்கிறது எனக் கதை கதையாய்ச் சொல்கிறார்கள். அத்தனையும் 1,000 அடிக்கு மேல் போயும் தண்ணீர் வராத கண்ணீர்க் கதைகள். இதுதான் உண்மையிலேயே பெரும் பாலான தமிழக விவசாய நிலங்களின் நிலைமை.

தண்ணீரும் இல்லை. தண்ணீர் கொண்டு வர முதலும் இல்லை. முதல் இருந்தாலும் தோண்டினால் தண்ணீர் வருமா என்கிற உத்தரவாதமும் இல்லை. பயிர்கள் கருகுகின்றன. இந்த அழிவு ஏற்பட்டுவிட்டால், அதிலிருந்து மீள்வதற்கு ஒரு குறிப்பிட்ட பகுதி நிலங் களை விற்றுத்தான் ஆக வேண்டும். ஏற்கெனவே வாங்கிய கடனைக் கட்டு வதற்கும் வழியில்லை, அவர்களும் பாவம் என்னதான் செய்வார்கள்? அம்மண மாய் ஓடுகிற நிலை ஒரு மனித னுக்கு வருகிறதென்றால், உள்ளுக் குள் எவ்வளவு புழுங்கிக்கொண்டிருப் பார்கள்? ஒரு பேச்சுக்குச் சொல் வதென்றால் கூட ஆடி கார் வைத்திருப் பவர் அம்மணமாய் ஓடுவது அசிங்கம் தானே? ஆடி கார் வைத்திருப்பவர்கள் அப்படி ஓடுவார்களா என்ன.. அல்லது ஓட விட்டுவிடுவார்களா என்ன?

SCROLL FOR NEXT