வலைஞர் பக்கம்

வீனஸ் வில்லியம்ஸ் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

வீனஸ் வில்லியம்ஸ் - அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை

இளம் வயதில் பல சாதனைகள் படைத்த அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (Venus Williams) பிறந்த நாள் இன்று (ஜூன் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லின்வுட்டில் (1980) பிறந்தார். இவருக்கு 10 வயதானபோது, குடும்பம் ஃபுளோரிடாவில் குடியேறியது. தன் 5 மகள்களையும் டென்னிஸ் பயிற்சிக்கு அனுப்பினார் தந்தை. ஆனால் கடைக்குட்டிகள் 2 பேர் (வீனஸ், செரீனா) மட்டுமே சிறந்து விளங்கினர்.

* சகோதரிகளின் அபூர்வ திறனை கவனித்த பயிற்சியாளர், அவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்தார். ஓரிரு ஆண்டுகளில் சிறுமி வீனஸ் அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் 12 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் முதலிடம் பிடித்தாள். பள்ளிப்படிப்பு முடிந்ததும், புளோரிடா கலைக் கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் பயின்றார்.

* டென்னிஸ் பயிற்சி நிலையத்தில் இனப் பாகுபாடு இருப்பதாக சந்தேகித்த தந்தை, வீட்டிலேயே பயிற்சி அளித்தார். 14 வயதில் தொழில்முறை ஆட்டக்காரராக களமிறங்கினார். பல போட்டிகளில் கலந்துகொண்டு, உலக அளவில் கவனம் பெற்றார்.

* தரவரிசைப் பட்டியலில் 1997-ம் ஆண்டு தொடக்கத்தில் 100-வது இடத்தில் இருந்த வீனஸ், ஆண்டு இறுதிக்குள் 22-வது இடத்துக்கு உயர்ந்தார். அடுத்த ஆண்டில் 5-வது இடத்தைப் பெற்றார்.

* 2000-ல் தொடர்ச்சியாக 35 ஒற்றையர் ஆட்டம், 6 டோர்னமென்ட்களில் வெற்றிபெற்றார். அப்போது உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மார்ட்டினா ஹிங்கிஸை வென்று முதன்முதலாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றார்.

* உடல்நலக் குறைவு காரணமாக வேறு போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அதற்குள் 6 ஒற்றையர் பட்டங்களுடன் தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்திருந்தார். 2001-ல் முழங்கால் வலி பிரச்சினை இவரது முன்னேற்றத்துக்கு தடையாக இருந்தது. ஆனால், தரவரிசைப் பட்டியலில் 2-வதாக உயர்ந்தார்.

* புது வேகத்துடன் 2002-ல் களமிறங்கியவர், ஆஸ்திரேலியா மகளிர் போட்டி வெற்றியுடன் தன் கணக்கைத் தொடங்கினார். உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் முதலிடத்தைப் பிடித்த முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண் என்ற பெருமை பெற்றார். தங்கை செரீனாவுடன் பல மகளிர் இரட்டையர் போட்டிகளில் வென்றார்.

* பெய்ஜிங் - 2008 ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மிக வேகமான சர்வீஸ் வீசுபவர் என்ற சாதனையை தக்கவைத்துக் கொண்டுள்ளவர்.

* இரட்டையர் ஆட்டங்களில் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 7 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட மொத்தம் 72 வெற்றிகளை ஈட்டியுள்ளார். விம்பிள்டன் சாதனை ஆட்டக்காரர், டீன் சாய்ஸ் விருது, ‘எம்மா’ சிறந்த விளையாட்டு வீரர் விருது, ஸ்போர்ட்ஸ் ஸ்டார் விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

* இன்று 36 வயதை நிறைவு செய்திருக்கும் வீனஸ் வில்லியம்ஸ், டென்னிஸ் தவிர, ஃபேஷன் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். பல தடைகள், தடங்கல்கள், வெற்றி, தோல்விகளை எதிர்கொண்டாலும், உலகின் நம்பர் 9 வீராங்கனையாக இருந்து வருகிறார்.

SCROLL FOR NEXT