வலைஞர் பக்கம்

ஜெயகாந்தன் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

ஞானபீட விருது பெற்ற தமிழ் படைப்பாளி

ஞானபீட விருது பெற்ற சிறந்த தமிழ் படைப்பாளியான ஜெயகாந்தன் (Jayakanthan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் விவசாயக் குடும்பத்தில் (1934) பிறந்தார். இயற்பெயர் முருகேசன். பள்ளிப் படிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லாததால், 5-ம் வகுப்போடு படிப்பு நின்றது. பிறகு விழுப்புரத்தில் மாமா வீட்டில் வளர்ந்தார்.

* பொதுவுடைமைக் கோட்பாடுகளை யும் பாரதியாரின் எழுத்துகளையும் மாமாவின் வாயிலாக அறிந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறினார். ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணியாற்றினார். அங்கு பல தலைவர்கள் பேசுவதைக் கேட்டு இலக்கியத்தில் நாட்டம் பிறந்தது.

* வேலை செய்துகொண்டே புலவர் க.சொக்கலிங்கத்திடம் தமிழ், இலக்கிய, இலக்கணங்கள் கற்றார். காமராஜரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடைகள், மாவு மில், தியேட்டர் என பல இடங்களில் வேலை செய்தார். கைவண்டி இழுத்தார். இதற்கிடையில், ஓய்வு நேரத்தில் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்.

* இவரது முதல் சிறுகதை 1950-ல் ‘சௌபாக்கியம்’ என்ற இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் எழுதினார். ‘சரஸ்வதி’ இதழில் இவரது படைப்புகள் வெளிவரத் தொடங்கிய பிறகு, ஓரளவு பிரபலமானார். ‘தாமரை’, ‘கிராம ஊழியன்’, ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’, ‘குமுதம்’ உள்ளிட்ட இதழ்களிலும் இவரது கதைகள் வெளிவந்து வரவேற்பை பெற்றன.

* 1958-ல் வெளிவந்த இவரது ‘ஒரு பிடி சோறு’ சிறுகதை இலக்கிய வாதிகளின் பரவலான பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு இதழ்களுக்கு அளித்த பேட்டிகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. தனது அரசியல், கலையுலக, இதழியல், ஆன்மிக அனுபவங்களைத் தனித்தனி நூல்களாகப் படைத்தார்.

* ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, ‘புதுச்செருப்பு கடிக்கும்’ ஆகிய திரைப்படங்களை இவரே இயக்கினார்.

* ஏறக்குறைய 200 சிறுகதைகள், 30-க்கும் மேற்பட்ட குறுநாவல்கள், 17 நாவல்கள், ஏராளமான கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என நிறைய எழுதினார். இவர் எழுதிய முன்னுரைகள் தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளியிடப்பட்டது. இவரது பல படைப்புகள் இந்திய மொழிகள் உட்பட உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

* ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, 1972-ல் சாகித்ய அகாடமி விருது, 2002-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது ஆகிய விருதுகளைப் பெற்றார். 2009-ல் பத்மபூஷண் விருது பெற்று இலக்கியத்துக்காக பத்மபூஷண் விருது பெற்ற முதல் படைப் பாளி என்ற பெருமை பெற்றார். ரஷ்ய விருதையும் வென்றார்.

* இவருக்கு நன்றாக வீணை வாசிக்கத் தெரியும். இலக்கியம், அரசியல், கலை, இதழியல் உள்ளிட்ட துறைகளில் 50 ஆண்டு காலம் தீவிரமாக செயல்பட்டவர். குடிசைப் பகுதி மக்களின் வாழ்வை தமிழ் இலக்கியத்துக்குள் முதன்முதலில் கொண்டுவந்தவர்.

* சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட படைப்பாளி. தனக்கு சரி என்று பட்டதை துணிச்சலாக வெளியிடும் தன்மை கொண்டவர். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்பட்ட ஜெயகாந்தன் 81-வது வயதில் (2015) மறைந்தார்.

SCROLL FOR NEXT