பிரபல தெலுங்கு எழுத்தாளர்
ஞானபீட விருது பெற்ற பிரபல தெலுங்கு படைப்பாளி விஸ்வநாத சத்யநாராயணா (Viswanatha Satyanarayana) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நந்தமுரு கிராமத்தில் (1895) பிறந்தார். தந்தை சிறந்த அறிஞர், சிவபக்தர், சத்யநாராயணா உள்ளூரில் பள்ளிப்படிப்பை முடித்தார். சமஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றார்.
*14 வயதிலேயே எழுத ஆரம்பித்தார். மசூலிப்பட்டினம் தேசியக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அப்போது, பல அறிஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. செல்லப்பில்லா வெங்கட சாஸ்திரியிடம் வேத, சாஸ்திரங்கள் பயின்றார். துளசிதாசரின் ராமசரிதமானஸ் காவியம் இவரை மிகவும் கவர்ந்தது.
*சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். குண்டூர், விஜயவாடா, மசூலிப்பட்டினம் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், கரீம்நகர் அரசுக் கல்லூரித் தலைவராக பணியாற்றினார். இப்பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, முழு நேரத்தையும் எழுதுவதற்காக செலவிட்டார்.
*வரலாறு, தத்துவம், மதம், சமூகவியல், மொழியியல், உளவியல் பிரக்ஞை குறித்த ஆய்வுகள், வேதங்கள், சாஸ்திரங்கள், அழகியல், ஆன்மிகம் என பல்வேறு துறைகளில் ஏராளமாக எழுதினார். ‘துரும்பு முதல் பிரபஞ்சம் வரை எதைப் பற்றியும் எழுதக்கூடியவர்’ என்று போற்றப்பட்டார்.
*200 காவியங்கள், 70 கட்டுரைகள், 60 நாவல்கள், 50 வானொலி நாடகங்கள், 35 சிறுகதைகள், 30 கவிதைகள், 20 நாடகங்கள், 10 விமர்சன நூல்கள், ஆங்கிலத்தில் 10 கட்டுரைகள், சமஸ்கிருதத்தில் 10 நூல்கள், 3 மொழிபெயர்ப்பு நூல்கள், 100-க் கும் மேற்பட்ட நூல் அறிமுகங்கள், முன்னுரைகள், வானொலி உரைகளை எழுதியுள்ளார்.
*‘ஸ்வரங்கினிகி நிச்சென்னாலு’, ‘ஸ்ரீகிருஷ்ண சங்கீதமுலு’, ‘மா பாபு’, ‘வீர வல்லடு’, ‘அனார்கலி’ உள்ளிட்ட படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது கவிதைகள் பாரம்பரிய பாணியில் அமைந்தவை. நவீன பாணியிலும் பல கவிதைகளைப் படைத்தார். பல படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், உருது, சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
*ஆயிரம் பக்கங்கள் கொண்ட இவரது புகழ்பெற்ற ‘வெயிபடகாலு’ என்ற நூல் ஆந்திர நிலப்பரப்பு, மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் ஆகியவற்றின் கலைக்களஞ்சியம் என போற்றப்படு கிறது. இந்நூலை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், ‘ஸஹஸ்ரஃபண்’ என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்த்தார்.
*பத்மபூஷண் விருது, ‘கலா ப்ரபூர்ணா’, ‘கவி சாம்ராட்’ ஆகிய பட்டங்கள் பெற்றவர். இவரது ‘ராமாயண கல்ப விருட்சமுலு’ நூலுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. ஞானபீட விருது பெற்ற முதல் தெலுங்கு படைப்பாளி இவர்தான். 6 தொகுதிகளாக வெளிவந்த இந்த நூலை எழுத இவருக்கு 30 ஆண்டுகளாகின.
*ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. கேந்திரீய சாகித்ய அகாடமி பரிசும் பெற்றார். இவரது முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்திருக்கும் என்று சக எழுத்தாளர்கள், அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
*எழுத்துப் பணியில் 60 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டு, தெலுங்கு இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய விஸ்வநாத சத்யநாராயணா 81-வது வயதில் (1976) மறைந்தார்.