பொதுவாகவே, வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தால்தான் எந்த வியாபாரமும் செழிக்கும். தரம் இருந்தால் தாமே தேடி வருவார்கள். இரண்டாம் தடவை தேடி வர வேண்டும் என்பதால் வியாபாரத்தில் கவனமும் கூடிவிடும். ஒரு முறை போலிப் பொருட்கள் சந்தை குறித்த ஆய்வொன்றைச் செய்தேன். அத்தனை சோப்புகளிலும் சீப்புகளிலும் டூப்ளிகேட் உண்டு. கிட்டத்தட்ட எல்லா பொருட்களிலும் உண்டு என்று தெரிந்தது. இதுமாதிரியான பொருட்கள் விற்கப்படும் பாரீஸ் கார்னர் குறுக்குச் சந்துகளில் நுழைந்து, எனக்கு ஒரு லோடு சோப் வேண்டும் என்றால், உடனடியாக ‘அசலா, அட்டா?’ என்பார்கள். அட்டு என்பது போலி. அசல் பொருளின் விலையில் பாதிக்கும் கீழ். அச்சு அசலாக அசல் போலவே இருக்கும்.
நிறையப் பேர் வந்து போகும் சுற்றுலாத் தலங்களில்தான் அட்டுகளைப் பெரும்பாலும் விற்பார்கள். ஏனெனில், அவற்றை வாங்குபவர்கள் அதை ஒரு முறை பயன்பாட்டுக்காக வாங்குகிறார்கள். தவிர, பழுதென்றால் புகார் பண்ண வர மாட்டார்கள். ஊருக்குக் கிளம்புகிற அவசரத்தில் மறந்தே போவார்கள். ஆனால், ஏமாந்துவிட்டோம் என்று ஒரு உறுத்தல் மட்டும் அவர்கள் மனதில் இருக்கும். அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அதேமாதிரி, மக்கள் கூட்டம் அதிகமாகச் சேரும் இடங்களான கோயில்கள், ‘ஷாப்பிங் ஏரியா’க்கள் போன்ற இடங்களில் உள்ள உணவகங்களிலும் இதே கதைதான்.
போலிப் பொருட்கள் வணிகத்தில் இயங்குபவர்களால் ஒருபோதும் நிறுவனமாக மாற முடியாது. 10 வருடங்களுக்கு முன்பு ஒரு உணவு நிறுவனத்தைத் துவக்கிய நண்பனொருவன், அதைத் தரமாக நடத்திய வகையில் அதில் உச்சம் தொட்டிருக்கிறான். அவனிடமும் பணம் இருக்கிறது. ரெண்டாம் நம்பர் அட்டு வியாபாரம் செய்கிறவர்களிடமும் பணம் இருக்கிறது. ஒரே பணம்தான். காந்தி பொக்கைச் சிரிப்பையும் ஒரேமாதிரிதான் வழங்குகிறார். என்ன பெரிய வித்தியாசம்? பணமாக இருந்தாலும் அதிலும் தரம் இருக்கிறது. சிக்கல் இல்லாத பணம்தான் எப்போதும் சுகமானது.
எனக்குத் தெரிந்து, இந்த அட்டு வியாபாரத்தில் இருந்த ஒருவர் ‘ஒரிஜினல் சோப்’ கொண்டு அந்த வியாபாரத்தைக் கழுவித் தொலைக்க நினைத்தார். மறைவு வியாபாரம் தந்த பதற்றம் அவரை விரைவில் நோயாளியாக்கியது. மனப் பதற்றம் அவரைக் குடி நோயாளியாக்கியது.
பொதுவாகவே, தமிழ் வணிகமே இப்படி இரண்டாகப் பிளந்து கிடக்கிறது. அசலுக்கும் அட்டுக்கும் இடையிலான போராட்டத்தில், தமிழ் வணிகம் அதன் அடிப்படை நேர்மையைத் தொலையக் கொடுத்துவிட்டதா எனக் கேள்வி எழுப்பி விவாதிக்க வேண்டிய தருணம். அசல் பொருட்களுக்கான சந்தைக்கு நிகராக போலிகளின் சந்தையும் தோளுக்கு நிகராக வளர்ந்து நிற்கும் இந்தச் சூழலில் நாம் என்ன செய்யப்போகிறோம்?