வலைஞர் பக்கம்

ஒரு நிமிடக் கதை: குறையொன்றுமில்லை

செய்திப்பிரிவு

டாக்டர் அழைக்க, உள்ளே நுழைந்த பகவதியம்மாவுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும்.

“சொல்லுங்கம்மா..! இன்னைக்கு உங்களுக்கு என்ன பிரச்சினை ..?”

டாக்டரின் கிண்டல் புரிந்தாலும் பொருட் படுத்தாமல், “டாக்டர்..! எனக்கு ரெண்டு நாளாவே யூரின் சரியா போகலை. நிறமும் மஞ்சளா இருக்கு. மஞ்சள் காமாலையா இருக்குமோ..?” என்றார் பகவதியம்மா.

“இது வெயில் காலம்.. நிறைய தண்ணி குடிங்க.. உஷ்ணத்துக்கே யூரின் மஞ்சளாத்தான் போகும்..” என்று டாக்டர் சமாதானம் சொன்னாலும் கேட்க மாட்டார். டெஸ்ட் எடுக்கச் சொல்லி பார்த்து விட்டுத்தான் போவார்.

பகவதியம்மாவை ஆறு மாதமாகத்தான் டாக்டருக்கு பழக்கம். வாரத்துக்கு மூன்றுமுறையாவது மருத்துவமனைக்கு வந்துவிடுவார்.

“டாக்டர்..! எனக்கு அடிக்கடி தலைவலி வருது. மூளையில் ஏதாவது கட்டி இருக்குமோ. ஸ்கேன் பண்ணி பார்த்திடுங்க...” என்பார் ஒருநாள்.

“எனக்கு கையை தூக்கி வேலை செய்ய முடியலை. நெஞ்சு வேற வலிக்கிற மாதிரியே இருக்கு. டெஸ்ட் எடுத்திடுங்க.”

“எனக்கு சரியாவே ஜீரணம் ஆக மாட்டேங் குது. வயத்துல ஏதும் பிரச்னையோ. ஸ்கேன் எடுங்க” என்பார்.

பகவதியம்மாவின் மகன் அமெரிக்காவில் இருக்கிறார். இவர் இங்கே தனியே சொந்த வீடு, வசதி என்று நன்றாகத்தான் இருக்கிறார். இருந்தாலும், சின்னத் தலைவலி, சுளுக்கு, காயம் என்று அடிக்கடி டாக்டரைத் தேடி வருவது கொஞ்சம் அதிகமாகத்தான் பட்டது.

அன்றும் டாக்டரைப் பார்க்க மகனுடன் வந்தார். “அமெரிக்காவிலிருந்து வந்திருக் கான்” என்று அறிமுகப்படுத்தியவர், “இவ னோட நாலு இடத்துக்கு போக முடியலை. கால்வலி” என்றார்.

“எலும்பு தேய்மானமா இருக்கும்.. கால்சியம் மாத்திரை எழுதித் தர்றேன்.” என்று எழுத ஆரம்பித்தார்.

“பிரவீன். நான் வெளியே இருக்கேன்.. நீ மாத்திரை வாங்கிட்டு வா...” என்றபடி எழுந்து போக, “உங்க அம்மாவுக்கு கோளாறு உடம்பில இல்லை. மனசில தான். தினமும் ஒரு வியாதியை சொல்லிட்டு வர்றாங்க” என்றார் டாக்டர்.

அதற்கு பிரவீன், “இல்லை, டாக்டர்..! அவங்களுக்கு மனசுலேயும் ஒரு கோளா றும் கிடையாது. அவங்க இறந்த பிறகு தன் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுக்கணும்னு உயில் எழுதி வச்சிருக்காங்க. தானம் கொடுப்பது எதுனா லும் குறையில்லாமல் இருக்கணும்னு நினைக்கிறாங்க. அதனால் தான் ரொம்ப ஜாக்கிரதையா தன் உடம்பை பார்த்துக்கிறாங்க...” என்றான்.

அவன் விளக்கத்தைக் கேட்டதும் மலைத்துப் போன டாக்டர், தன் நினைவுக்கு வர வெகுநேரமாயிற்று.

-----------------------------------------------------

நீங்களும் வாங்களேன்!

வாசகர்களும் இந்த ரிலாக்ஸ் பக்கத்துக்கு பங்களித்து ஜமாய்க்கலாம். relax@thehindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 044-28552215 என்ற தொலைநகல் எண்ணுக்கோ உங்கள் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் படைப்புகளை அனுப்புங்கள். பிரசுரமானால் சிறு பரிசு காத்திருக்கிறது.

SCROLL FOR NEXT