இந்திய நவீன ஓவியங்களின் தந்தை எனப் போற்றப்படும் வங்காள ஓவியர் அவனீந்திரநாத் தாகூர் (Abanindranath Tagore) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கல்கத்தாவில் (1871) பிறந்தவர். இவர் ரவீந்திரநாத் தாகூரின் சகோதரி மகன். படைப்பாளிகள், கலைஞர்கள், ஓவியர்களைக் கொண்ட கலைக் குடும்பம் என்பதால், இவருக்கும் இயல்பாகவே ஓவியக் கலை, எழுத்தில் ஆர்வம் பிறந்தது.
* கல்கத்தாவில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் சமஸ்கிருத கல்லூரியில் பயின்றார். பவானிபூரில் இருந்த சக மாணவரான சிறந்த ஓவியக் கலைஞர் அனுகூல் சட்டர்ஜியிடம் ஓவியம் கற்றார். கல்கத்தா அரசு கலைக் கல்லூரியின் துணைத் தலைவரான பிரபல இத்தாலியக் கலைஞர் கில்ஹார்டியிடம் பெயின்டிங் நுணுக்கங்களைக் கற்றார்.
* சார்லஸ் பால்மர் என்ற ஆங்கில பெயின்டரின் ஸ்டுடியோவில் சில ஆண்டுகள் பயின்று, ஆயில் பெயின்டிங், உருவப்படம் வரைவதில் நிபுணத்துவம் பெற்றார். பிறகு, கல்கத்தா கவின்கலைக் கல்லூரியில் பயின்றார். 25 வயதில் அஜந்தாவுக்குச் சென்றது இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
* மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக முழு வளர்ச்சியடைந்த மகத்தான ஓவிய மரபு நமக்கும் உண்டு என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டார். முகலாய, ராஜபுத்திர ஓவிய பாணிகளையும் கற்றார். சுவாமி விவேகானந்தரால் பெரிதும் கவரப்பட்டார். ஜப்பானில் இருந்து விவேகானந்தருடன் இந்தியா வந்த ஒகாகுரா என்ற ஓவியரிடம் ஜப்பானிய ஓவியக் கலைகளைக் கற்றார்.
* கல்கத்தா கவின்கலைக் கல்லூரியில் நுண்கலைகளுக்கான துறையை தொடங்கிவைத்தார். தேசிய அளவில் தனது ஓவிய பாணியை அறிமுகம் செய்ய ‘பெங்கால் ஸ்கூல்’, ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் ஓரியன்டல் ஆர்ட்’ என்ற அமைப்புகளைத் தொடங்கினார்.
* முதன்முதலாக 1905-ல் பாரதமாதா உருவத்தை வரைந்தார். நான்கு கைகள் கொண்ட இந்த பாரதமாதா ஓவியம் நாடு முழுவதும் பிரபலமடைந்தது. அஜந்தா போன்ற சுவரோவிய மரபு, மொகலாய மற்றும் ராஜபுத்திரர்களின் சிற்றோவிய மரபு, வழிபாட்டுக்கான ஓவியக் கோலங்களின் மரபு என்ற 3 இந்திய ஓவிய மரபுகளை ஒன்றிணைத்து புதிய பாணியை உருவாக்கினார்.
* இந்திய ஓவியக் கலையில் சுதேசி மதிப்பீடுகளை அறிமுகம் செய் தார். இவரது ‘விநாயகர்’, ‘தி லாஸ்ட் ஜர்னி’, ‘புத்தா அண்ட் சுஜாதா’, ‘கிருஷ்ணலால்’ போன்ற ஓவியங்கள் மிகவும் பிரபலமானவை.
* இந்திய நவீன ஓவிய மரபை உருவாக்குவதுதான் இவரது வாழ்நாள் நோக்கமாக இருந்தது. மேற்கத்திய ஓவிய மரபு, பொருள்மைய நோக்கு-உடல்மைய நோக்கு கொண்டது என்றும் இந்திய ஓவிய மரபு ஆன்மிக மைய நோக்கு கொண்டது என்றும் கருதினார்.
* கல்கத்தா ஓவியக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த எர்னஸ்ட் பின்பீர்ட் ஹாவெல் இவரது ஓவிய முறையால் கவரப்பட்டு அவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். 1913-ல் லண்டன், பாரீஸிலும், 1919-ல் ஜப்பானிலும் இவரது ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது.
* 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தீட்டியுள்ளார். வங்கமொழியில் குழந்தைகளுக்கான நூல்கள் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தலைசிறந்த ஓவியரும் எழுத்தாளருமான அவனீந்திரநாத் தாகூர் 80-வது வயதில் (1951) மறைந்தார்.