இந்திய குத்துச்சண்டை வீராங்கனை
உலகப் புகழ்பெற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (Mary Kom) பிறந்தநாள் இன்று (மார்ச் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மணிப்பூர் மாநிலம் கங்காதேயி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் (1983) பிறந்தவர். முழுப்பெயர் மேங்க்டே சங்நெஜாங்க் மேரி கோம். சிறுவயதிலேயே வயல் வேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்தார். பள்ளிக்குச்சென்று படிப்பது, விளையாடுவதுடன் தம்பி, தங்கைகளையும் கவனித்துக்கொண்டார்.
* பள்ளியில் ஹாக்கி, கால்பந்து, தடகள விளையாட்டுகளில் பங்கேற்றார். வறுமையால் படிப்பை பாதியில் நிறுத்தினார். 1998 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மணிப்பூர் மாநிலத்தின் டிங்க்கோ சிங், தங்கம் வென்றதை அறிந்ததும், இச்சிறுமிக்கு குத்துச்சண்டையில் ஆர்வம் பிறந்தது.
* ஆண்களின் விளையாட்டாகவே கருதப்படும் பாக்ஸிங் பயிற்சியில் சேர்வது, பழங்குடியினப் பெண்ணான இவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. பல எதிர்ப்புகளை மீறி குத்துச்சண்டைப் பயிற்சி பெறுவதில் உறுதியாக இருந்தார்.
* இம்பால் சென்று எம்.நர்ஜித் சிங்கிடம் பயிற்சிப் பெற்றார். குத்துச்சண்டையின் நுணுக்கங்களை விரைவில் கற்றார். இரவு வெகுநேரம் வரை பயிற்சி செய்வார். வகுப்பில் அனைவரும் சென்றுவிட்டாலும்கூட இவர் தொடர்ந்து பயிற்சி செய்வார்.
* முதன்முதலாக 2000-ல் மணிப்பூரில் நடந்த மகளிர் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில், சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை விருதை வென்றார். மேற்குவங்கத்தில் நடந்த 7-வது கிழக்குப் பிராந்திய மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.
* அகில இந்திய பாக்ஸிங் அசோசியேஷன் போட்டியில் 2002, 2005,2006 என 3 முறை சாம்பியன் பட்டம் வென்றார். 2001-ல் இரண்டாம் பரிசு பெற்றார். உலக சாம்பியன்ஷிப் விளையாட்டுக் களத்தில் அடியெடுத்து வைத்த பின்னர், தன் பெயரை அனைவரும் உச்சரிப்பதற்கு வசதியாக மேரி கோம் என்று மாற்றிக்கொண்டார்.
* உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் தொடர்ந்து 5 முறை தங்கம் வென்ற முதலாவது இந்திய வீராங்கனை என்ற தனிப் பெருமை பெற்றவர். 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் ஒரே குத்துச்சண்டை வீராங்கனை இவர்தான். இதில் 51 கிலோ எடைப் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்றார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார்.
* ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 6 முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை, பத்மபூஷண் விருது பெற்ற முதல் அமெச்சூர் வீராங்கனை என பல சாதனைகளை முதன்முதலாகப் படைத்தவர்.
* சர்வதேச குத்துச்சண்டை வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். 2013-ல் ‘அன்பிரேக்கபிள்’ என்ற தன் சுயசரிதை நூலை வெளியிட்டார். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர் பின்னர் மீண்டும் படித்து, பட்டம் பெற்றார். சமுதாயத்தில் பின்தங்கிய இளம் பருவத்தினருக்கு இலவசமாக பாக்ஸிங் கற்றுத்தருகிறார்.
* அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, சஹாரா விளையாட்டு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துவரும் மேரி கோம் இன்று 35-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.