வலைஞர் பக்கம்

ரோலண்ட் கேரோஸ் 10

பூ.கொ.சரவணன்

பிரபல பிரெஞ்ச் விமானப் படை வீரர் ரோலண்ட் கேரோஸின் பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• டிராகன்ஃபிளை வகை விமானங்களில் பறக்கும் பழக்கம் கொண்டவர் கேரோஸ். ப்ளேரியோட் வகை விமானங்களை ஓட்டக் கற்றவர் ஐரோப்பா முழுவதும் நடந்த விமானப் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளினார்.

• பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் இருந்து துனிசியா வரை தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு மத்திய தரைக்கடலைக் கடந்த முதல் நபர் கேரோஸ். அப்போது வயது 25.

• முதல் உலகப் போரின்போது, பிரெஞ்ச் ராணுவத்தில் இணைந்த கேரோஸ், வான்வெளியில் ஒரு விமானி இன்னொரு விமானத்தை சுட்டு வீழ்த்தும் சாதனையை முதல்முறையாக நிகழ்த்தினார். 18 நாட்களுக்குள் இன்னும் 2 விமானங்களையும் வீழ்த்தினார்.

• விமானத்தின் ப்ரொப்பல்லர் வழியாக சுட்டு வீழ்த்தும் இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்தார். விமானத்தின் குறுகலான தட்டுகளில் எஃகு பிளேடுகளை இணைத்து குண்டுகள் தாக்கும்போது அவற்றை விலகவைத்தும் சாதித்தார்.

• l3-வது விமான வீழ்த்தல் நிகழ்ந்த அன்றே, தனது விமானத்துடன் ஜெர்மன் படைகளிடம் பிடிபட்டார். விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா, ஜெர்மன் படை சுட்டு வீழ்த்தியதா என்பது உறுதிசெய்யப்படவில்லை.

• ஜெர்மனியில் 2 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர், சிறையில் இருந்து தப்பி பிரான்ஸுக்கு வந்து, மீண்டும் ராணுவத்தில் சேர்ந்தார்.

• அவரது 30-வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக விமானத்தோடு சுட்டு வீழ்த்தப்பட்டு இறந்தார்.

• அவர் பிடிபட்டபோது, ஜெர்மன் வீரர்கள் அவர் வடிவமைத்த இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்டிருந்த விமானத்தைக் கொண்டுபோயிருந்தனர். அதன் உதவியுடன் ‘ஃபாக்கர் டி-7’ என்ற விமானத்தை வடிவமைத்தனர். அதுவே, போர்க் களத்தில் கேரோஸ் மரணத்துக்குக் காரணமானது.

• பிரான்சில் டென்னிஸ் விளையாட்டுக்கு புகழ் பெற்ற ‘ஸ்டேட் பிரான்ஸ்’ கிளப்பில் கேரோஸ் இளம் வயதில் உறுப்பினராக இருந்தார். பின்னர், சர்வதேச டென்னிஸ் போட்டிக்காக 7 ஏக்கர் நிலத்தை வழங்கிய கிளப் நிர்வாகம், அந்த மைதானத்துக்கு ரோலண்ட் கேரோஸ் பெயரை வைக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தது.

• அந்த மைதானத்திலேயே பின்னர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடக்க ஆரம்பித்தன. பிரெஞ்சு ஓபனின் அதிகாரபூர்வ பெயராகவும் அதுவே மாறியது. அவர் பிறந்த ரீயூனியன் தீவில் உள்ள விமான நிலையத்துக்கும் கேரோஸ் பெயர் சூட்டப்பட்டது.

SCROLL FOR NEXT