இந்தியா என்கிற நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாடத்தை அக்பரின் ஆட்சியில் இருந்தே நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
அக்பரின் அப்பா ஹுமாயுன் கேளிக்கைகளில் ஈடுபடுவதில் அதிக கவனம் செலுத்தி தன் ஆட்சியை இழந்தார்.. ஷெர்ஷாவிடம் இழந்த ஆட்சியை மீண்டும் மீட்க முயற்சித்த காலத்தில் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தார் அவர். அப்பொழுது பாலைவனத்தில்
வாடிக்கொண்டு இருந்தபொழுது அவரின் பதினைந்து வயது மனைவி ஹமீதா, “மாதுளம் பழம் வேண்டும்!” என்று கேட்டார். எப்படி கிடைக்கும் இங்கே என்று திகைத்துக்கொண்டு இருந்தார் அவர். ஒரு வியாபாரி ஒட்டகத்தில் அந்த பக்கம் வந்தார். அவரின் கூடையில் அவ்வளவு மாதுளம் பழங்கள். ஹமீதாவின் வயிற்றில் இருந்த பிள்ளை அக்பர்!
அக்பர் கல்வியறிவை பாடநூல்களில் இருந்து பெற்றதில்லை. அவருக்கு வாசிக்க தெரியாது. என்றாலும், கற்ற அறிஞர்களிடம் இருந்து ஏகத்துக்கும் கற்றுக்கொண்டார். நிறைய வாதங்களும் செய்பவராக அவர் இருந்தார். எண்ணற்ற நூல்கள் அவரின் நூலகங்களில் இருந்தன. நூலகப்படிகளில் தவறி ஹுமாயுன் இறந்ததும், பதினான்கு வயதில் அரியணை ஏற வேண்டிய கட்டாயம் அக்பருக்கு வந்தது. பைராம் கானின் பாதுகாப்பில் வளர்ந்த அக்பர், பானிபட் போரில் ஆதில்ஷாவின் தளபதி ஹேமு கைப்பற்றி இருந்த டெல்லியை மீட்டார்.
பைரம் கானை, அவரை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்த வளர்ப்பு அன்னையின் தொல்லையை எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்த பின் அக்பர் செய்தது நல்லாட்சி. அக்பரின் காலத்தில் மத நல்லிணக்கம் உச்சத்தில் இருந்தது. மற்ற மதத்தினர் மீதான ஜிசியா வரி நீக்கப்பட்டது. மதுரா போயிருந்தபொழுது இந்துக்கள் மீது வரிவிதிப்பு இருக்கிறது என்று அறிந்து அதை உடனே நீக்கினார். பொது சிவில் சட்டம் வேறு அமலுக்கு வந்தது.
அதுவரை போரால் வெல்லலாம் என்று மட்டுமே கருதப்பட்ட ராஜப்புத்திரர்களை அன்பால் வென்றார் அக்பர். திருமண உறவுகள் கொண்டார். எந்த அளவுக்கு இது போனது என்றால், அரண்மனையில் தீபாவளி, ஹோலி முதலிய பண்டிகைகள் கொண்டாடுவது,
அக்பர் இந்து நோன்புகள் இருப்பது, கூடவே சைவமாகிற அளவுக்கு. சீக்கியர்கள் தங்களுக்கான புனித தலம் கட்டிக்கொள்ள அக்பர் கொடுத்த நிலத்தின் மீது எழுந்ததுதான் சீக்கிய பொற்கோயில்.
சித்தூரை வென்றபொழுது அங்கே வீரம் காட்டிய ராஜபுத்திர தளபதிகளுக்கு சிலை வைக்கவும் செய்தார் அக்பர். காஷ்மீரை வென்ற பொழுது அங்கே பெரும்பஞ்சம் உண்டானபொழுது, கச்சிதமாக நிலைமையை கையாண்டார். தானியங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. உழைப்பவர்களின் சம்பளம் ஏற்றப்பட்டது. பஞ்சம் பறந்தோடியது.
அக்பரின் காலத்தில் பதேஃபூர் சிக்ரி எனும் அழகிய தலைநகர் உருவானது. அக்பரின் மத ஒற்றுமையின் உச்சமாக 'தீன் இலாஹி' என்கிற மதத்தை அன்பின் வழி அவர் உருவாக்கினார். பேரரசர் என்று சொல்வதற்கான எல்லாத் தகுதிகளும் கொண்ட அக்பர் 49 ஆண்டுகள் ஆண்டார். அவரின் இறுதிக் காலத்தில் முக்கியமான நண்பர்கள் முன்னமே இறந்துவிட, அக்பர் தனிமையில் வாடினார். மகன் சலீமின் செயல்கள் வாட்ட, வேதனையோடு மரணமடைந்தார் அந்த மாமனிதர்.
அக்.14 - அக்பர் பிறந்த நாள்.