வலைஞர் பக்கம்

ஓபிஎஸ் அணி இப்படியும் கோரிக்கைகள் வைக்கலாம்

பி.எம்.சுதிர்

எடப்பாடி அணியிடம் ஓபிஎஸ் அணியினர் இப்படியும் சில கோரிக்கைகளை வைக்கலாம்.

1. தினகரன் அறிமுகப்படுத்திய சின்னமாக இருப்பதால், கட்சியில் உள்ள யாரும் இனிமேல் தொப்பி போடக் கூடாது. வேண்டுமானால் தலையில் துண்டு போட்டுக்கொள்ளலாம்.

2. அமைச்சர்களாக இருப்பவர்கள் அனைவரும் தினமும் அரை மணிநேரம் தியானம் செய்யவேண்டும். அதற்காக மெரினா கடற்கரையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

3. ஓபிஎஸ் மனம் இரங்கும்வரை அமைச்சர்கள் அனைவரும் தினமும் அவரது வீட்டு வாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்தவேண்டும். ‘அரை மொட்டை அடிப்பது’, ‘மண்சோறு சாப்பிடுவது’ என்று தினமும் பல்வேறு வழிகளில் அவரது மனதைக் கரைக்க முயற்சி செய்யவேண்டும்.

4. சசிகலாவை சின்னம்மா என்று அழைத்ததைப் போல ஓபிஎஸ்ஸை ‘பெரியய்யா’ என்று அழைக்கவேண்டும். அமைச்சர்கள் உடல் பழையபடி ‘பிட்’டாக இருக்க ‘பெரியய்யா’வை பார்க்கும்போதெல்லாம் சர்வாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

5. ஓபிஎஸ்ஸை ஆதரித்ததால் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கும் வாய்ப்பை சிலர் இழந்து ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை ஈடுகட்ட அவரது ஆதரவாளர்களை ஒருவாரம் கூவத்தூர் விடுதியில் தங்கவைத்து ‘கவனிக்க’ வேண்டும்.

6. சொந்த சித்தியைக்கூட சின்னம்மா என்று அழைக்கக்கூடாது.

7. மன்னார்குடியில் சிறப்பு மத்திய சிறை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம்.

8. பெயர்களில் ‘பி.எஸ்’ என்று (ஓபிஎஸ் ஈபிஎஸ்) இருப்பது அதிமுகவுக்கு ராசியில்லை. எனவே, ஜிபிஎஸ், யுபிஎஸ் போன்றவற்றுக்கு கட்சிக்குள் தடை விதிக்கலாம்.

9. வருங்காலத்தில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு இரவு 8.30 மணிக்கு மேல் யாரும் போகவோ, படாரென்று அடித்து சத்தியம், சபதங்கள் செய்யவோ தடை விதிக்கலாம். தியானத்துக்கு மட்டும் விதிவிலக்கு வழங்குமாறு பரிந்துரைக்கலாம்.

SCROLL FOR NEXT