தமிழிசை மேம்பாட்டுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பண் ஆராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசன் (P.Sundaresan) பிறந்த தினம் இன்று (மே 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் (1914) பிறந்தார். வறுமை காரணமாக 4-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி செல்ல முடிந்தது. அதன் பிறகு, பெற்றோர் இவரை நகைக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டனர். கையில் கிடைத்த அனைத்து நூல்களையும் கற்று, அறிவை வளர்த்துக்கொண்டார்.
* தமிழ் இலக்கியங்கள் குறித்து பல விஷயங்களை அறிந்தார். அக்கம்பக்கத்தினர் பலரும் சைவ சமய ஈடுபாடு கொண்டவர்களாகவும், இசை அறிவு மிக்கவர்களாகவும் இருந்தனர். இதனால், அங்கு இயல்பான இசைச்சூழல் நிலவியது. இவரது வீட்டருகே இருந்த தேவாரப் பாடசாலையும், சைவ மடத்து துறவியர் தொடர்பும், சைவத் திருமுறைகள் மற்றும் சாஸ்திர நூல்களில் பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்கியது.
* தமிழ், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் தெரிந்துகொண்டார். ஏராளமான இசைத்தட்டுகளைக் கேட்டு இசை அறிவை வளர்த்துக்கொண்டார். ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிர்த சாகரம்’ மற்றும் பேராசிரியர் சாம்பமூர்த்தியின் இசைநூல்களைப் பயின்று இசை அறிவை செம்மைப்படுத்திக் கொண்டார்.
* திருவனந்தபுரம் லட்சுமணப் பிள்ளையிடம் தனது இசை ஆர்வத்தை எடுத்துச் சொல்லி உதவி கேட்டார். அவரது சிபாரிசின்பேரில், குடந்தை கந்தசாமி தேசிகரிடம் முறையாக இசை பயின்றார். பின்னர் வேப்பத்தூர் பாலசுப்பிரமணியத்திடமும், வேதாரண்யம் ராமச்சந்திரனிடம் 17 ஆண்டுகளுக்கு மேலாகவும் செவ்விசை பயின்றார்.
* சிலப்பதிகாரம், திருமுறைகள், சிற்றிலக்கியங்களில் சிறந்த இசைப் பயிற்சி பெற்றார். தமிழ் இலக்கியங்களில் பொதிந்துகிடந்த அரிய இசை நுட்பங்களை, குறிப்பாக சிலப்பதிகாரத்தின் இசைக் கூறுகளை, தமிழ் அறிஞர்களின் அற்புத இசைப் புலமையை எளிய தமிழில் எடுத்துரைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
* ஊர் ஊராகச் சென்று பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களைப் பாடி விரிவுரைகள் ஆற்றினார். மூவர் தேவாரத்தைப் பாடி அதில் புதைந்து கிடக்கும் பண் அழகையும், பண் இயல்பையும் எடுத்துக்காட்டினார்.
* விபுலானந்த அடிகள், ‘யாழ்’ நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றம் செய்தபோது, அதற்கு இவர் பண் இசைத்தார். கல்வி நிறுவனங்கள், பொது அரங்குகள், மக்கள் மன்றங்களில் இசைப் பேருரைகள் நிகழ்த்தினார். தமிழகம் முழுவதும் இவரது புகழ் பரவியது.
* ஆடுதுறை அப்பர் அருள்நெறிக் கழகம், நாகை தமிழ்ச் சங்கம் என பல்வேறு ஊர்களில் இருந்த தமிழ் அமைப்புகள் இவரை இருகரம் நீட்டி வரவேற்றன. அங்கெல்லாம் சென்று இசையோடு உரை நிகழ்த்தினார். தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் உண்டாக்கினார்.
* சிறந்த எழுத்தாற்றலும் படைத்த இவர், இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், முதல் ஐந்திசைப் பண்கள், முதல் ஐந்திசை நிரல், முதல் ஆறிசை நிரல் உள்ளிட்ட நூல்களையும் நித்திலம், இசைத் தமிழ் நுணுக்கம் உள்ளிட்ட கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளார். பஞ்சமரபு என்ற இசை நூலைப் பதிப்பித்தார்.
* இவரைப் பற்றிய ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு உள்நாட்டில் மட்டுமல்லாது, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் திரையிடப்பட்டது. பண் ஆராய்ச்சி வித்தகர், ஏழிசைத் தலைமகன், திருமுறைச் செல்வர் என்றெல்லாம் போற்றப்பட்ட ப.சுந்தரேசன் 1981 ஜூன் 9-ம் தேதி 67-வது வயதில் மறைந்தார்.