வலைஞர் பக்கம்

நான் என்னென்ன வாங்கினேன்?- கோம்பை அன்வர், ஆவணப்பட இயக்குநர்

செய்திப்பிரிவு

இன்றுதான் புத்தகக் காட்சிக்கு வர முடிந்தது. சல்மா எழுதிய ‘மனாமியங்கள்’, தமிழினி எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்று இப்போதுதான் புத்தக வேட்டையைத் தொடங்கியிருக்கிறேன். புத்தகங்களின் மீதான காதல்தான் பல தளங்களில் இயங்க வலுவான ஆதாரமானது.

எல்லோரையும்போல், முத்து காமிக்ஸில் தொடங்கி வளர்ந்த வாசிப்புதான் என்னை இன்று ஒரு ஆளுமையாக்கியிருக்கிறது. பொன்னியின் செல்வனைக் கடக்காமல் நாம் எப்படி வளர்ந்திருக்க முடியும்? சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், ஜோடி குருஸின் ‘ஆழி சூல் உலகு’ என்னைத் தமிழின் பக்கம் மீண்டும் இழுத்துவந்தது. ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் ‘கடல் கூத்து ஓய்ந்தது’ என்றொரு வாசகம் வரும். அது என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. எத்தனையோ விஷயங்களைப் புரியவைத்தது. சோ.தர்மன் எழுதிய ‘கூகை’ நாவலில் தலித் மக்களின் வாழ்க்கையும், வலியும் வார்த்தைகளில் தெறித்ததை வாசித்தபோது சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்த நடை என்னைப் புரட்டிப்போட்டது. புத்தகக் காட்சியில் நிறைய இளைஞர்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் நிறைய இளைஞர்கள், சிறுவர்கள் வாசிப்பின் பக்கம் வர வேண்டும்!

SCROLL FOR NEXT