வலைஞர் பக்கம்

பார்வையற்றோருக்கான விழியான கர்ணா வித்யா அமைப்பு

இந்து குணசேகர்

"BLIND LEADING THE BLIND என்பது ஒருகாலத்தில் எதிர்மறையாக இருந்தது. ஆனால் தற்போது உடைக்கப்பட்டிருகிறது"

புத்தகக் கண்காட்சியின் மைய நுழைவுவாயிலின் ஓரத்தில் கவனிக்கத்தக்க வகையில் இருந்தது 'கர்ணா வித்யா' அமைப்பின் அரங்கு. மாணவர்கள் கணினியிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு, குறிப்பேடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அம்மாணவர்களின் மையத்தில் கருப்புப் கண்ணாடியை அணிந்திருந்தவர் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார் 'கர்ணா வித்யா' அமைப்பின் செயலாளர் ரகுராம்.

கடந்த மூன்று வருடங்களாக பார்வையற்ற மாணவர்களுக்கு கற்றல் வழியை எளிதாக்கிக் கொடுத்திருப்பத்துடன், அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது 'கர்ணா வித்யா' அமைப்பு.

ரகுராமிடம், 'கர்ணா வித்யா' அமைப்பு எந்த வகையில் பார்வையற்ற மாணவர்களுக்கு உதவி செய்கிறது?... என்ற கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் படபடவென பேசத் தொடங்கினார்.

கர்ணா வித்யா அமைப்பின் செயலாளர் ரகுராமிடம் நிகழ்ந்தப்பட்ட உரையாடல்

"முதலில் இந்த பெயருக்கான விளக்கத்தை அளித்து விடுகிறேன். கர்ணா என்றால் கேட்பது. வித்யா என்றால் படிப்பது இதுதான் இந்த பெயரின் பொருள். முன்பெல்லாம் பார்வையற்ற மாணவர்களுக்கு புத்தக வாசிப்புகளுக்கும், எழுதுவதற்கும் பிறரின் உதவி தேவைபட்டது. ஆனால் தற்போதுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தன்னிச்சையாக அவர்கள் இயங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

பார்வையற்ற மாணவர்களுக்கு எந்த வகையில் 'கர்ணா வித்யா' எளிய கற்றலையும், வேலை வாய்ப்புகளையும் உருவாகியுள்ளது?

"நாம் அனைவரும் பயன்படுத்தும் கணினியுடன் கூடுதலாக, NVDA (NON VISUAL DISKTOP ACCESS) என்ற சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த சாஃப்ட்வேர் ஸ்கிரீன் ரீடரில் வரக்கூடியதை பார்வையற்ற மாணவர்களுக்கு படித்துச் சொல்லும்.

அதைக் கேட்டு நாங்கள் படிக்க எழுத மட்டுமின்றி வேலை செய்யவும் முடிகிறது. இதன் மூலம் பார்வையற்ற மாணவர்களும் மற்றவர்களைப் போல எல்லாத் தளங்களிலும் இயங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கான பயிற்சியைத்தான் நாங்கள் அளித்துக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம், ஒரு பார்வையற்ற மாணவனோ, மாணவியோ தேவையான புத்தங்களை தாங்களே படித்துக் கொள்வார்கள்.

மேலும் வீட்டிலிருந்தே அவர்கள் படித்துக் கொள்ளலாம். இதற்காக அவர்கள் சிறப்பு மையங்களை நோக்கி அலைய வேண்டிய தேவை ஏற்படாது.

என்று உற்சாகத்தில் பேசிக் கொண்டிருந்த ரகுராம், ஒரு முக்கிய கோரிக்கையும் முன் வைத்தார்

"தமிழ்நாடு டெக்ஸ்ட் புக் சொஸைட்டி , புத்தகப் பதிப்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் இன்குஷன் பப்ளிஷிங் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.

அச்சடிக்கப்பட்ட புத்தங்களை 'பிரிண்ட் டிஸ்ஏபில்ட்' மக்கள் படிப்பதற்கான வகையில் உருவாக்க வேண்டும்.

அச்சடிக்கப்பட்ட விஷயங்களை யார் படிக்க சிரமப்படுகிறார்களோ அவர்களை 'பிரிண்ட் டிஸ்ஏபில்ட்' என்று அழைகிறார்கள்.

பதிப்பாளர்கள் புத்தகங்களை அச்சடிக்கும் போதே, சிறப்பு மாணவர்களும் படிக்கும் வகையில் உருவாக்குவீர்கள் என்றால், அவர்கள் படிப்பதற்கு அவை உதவியாக இருக்கும்.

பதிப்பாளர்களுக்கு அது சிரமம் என்றால்? BOOK SHARE என்ற இணைய லைப்ரரி உள்ளது. இந்தத் தளம் அமெரிக்காவில் சிறப்புக் கல்வி நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. அவர்களிடம் உங்களது படைப்புகளை கொடுத்தீர்கள் என்றால், அவர்கள் டைசி என்ற பார்மேட்டில் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து 'பிரிண்ட் டிஸ்ஏபில்ட்' மாணவர்கள் படிக்கும் வகையில் அதனை வெளியிடுவார்கள்.

'பிரிண்ட் டிஸ்ஏபில்ட்' என்று கூறும்போது, அதில் பார்வை குறைபாடுடையவர்கள், கற்றல் குறைபாடுடையவர்கள், வயதானவர்கள் என அனைவரும் அந்த வட்டத்தில் வருவார்கள். எனவே பெரிய எண்ணிக்கையில் அடிப்படையில் இந்தக் கோரிக்கை உருவாகியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சில புத்தகங்கள் மட்டுமே மேற்சொன்ன முறையில் சிறப்பு மாணவர்களுக்கு கிடைக்கிறது. அதுவும் முக்கியமான புத்தகங்களும், போட்டித் தேர்வை எதிர் கொள்ளும் புத்தகங்களும் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தால் நாங்கள் படிப்பதற்கு எளிமையானதாக இருக்கும். இதற்கான ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட பதிப்பாளர்கள் 'BOOK SHARE' அமைப்புடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார் ரகுராம்.

கர்ணா வித்யா வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்கித் தருகிறது?

'படித்து முடித்துவிட்டேன். அரசு வேலை கிடைப்பதற்கு நீண்ட நாள் ஆகும்' என்று நினைக்கும் பார்வையற்றவர்களுக்கு ஏராளமான தனியார் வேலை வாய்ப்புகளுகான பயிற்சிகளையும், வேலை வாய்ப்புகளையும் 'கர்ணா வித்யா' நிறுவனம் அளிக்கிறது. இந்தப் பயிற்சிக்காக மாணவர்களிடமிருந்து குறைந்த கட்டணம் பெறப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு திறமையின் அடிப்படையில் போதுமான பயிற்சிகளை அளித்து அவர்களுக்கான வேலையை பெற்றுத் தருகிறது. இது எல்லாவற்றுக்கும் நாங்கள் உறுதுணையாய் இருக்கிறோம்.

டி.வி. ராமன் என்பவர் கூகுளில் பணி செய்கிறார். ஸ்ரீகாந்த் போலாந்தே என்பவர் ஐபிஎம்மில் வேலை செய்கிறார்கள் இருவருமே பார்வையற்றவர்கள். இவர்கள் போன்றவர்கள்தான் பார்வையற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணங்களாக உள்ளனர்.

இதுவரை 40 பேர் கர்ணா வித்யா அமைப்பின் மூலம், டிசிஎஸ், அமேசான் போன்ற நிறுவனங்களில் வேலையில் இணைந்திருக்கிறார்கள். இதில் 18 பேர் பெண்கள். இது தமிழகத்தில் முதல் முறையாகும்.

இதற்கு முன்னரும் இதுபோன்ற நிறுவனங்களில், தனி முயற்சியினாலும் 2,3 நபர்கள் பணிக்குச் சென்றிருக்கிறார்கள் நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நான் கூறுவது அதிக எண்ணிகையில் பணிக்குச் சென்றவர்கள் பற்றி.

அதுவும் இங்கிருந்து வேலைக்குச் சென்றவர்கள் எல்லாம் நேர்காணல் கண்ட பிறகு அவர்களின் திறமையின் அடிப்படையிலேயே பணியைப் பெற்றுள்ளனர். அரசு வேலைக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு இங்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு அவர்களை போட்டித் தேர்வுகளுக்காக உருவாக்கி வருகிறோம். இங்குள்ள மாணவர்கள் பலருக்கு வங்கிகளில் பணி கிடைத்துள்ளது.

சென்னை புத்தக கண்காட்சியில் கர்ணா வித்யா அமைப்பினர்

கர்ணா வித்யா அமைப்பில் பயிற்சி பெற குறைந்தபட்ச ஒரு பட்டப் படிப்பையாவது பெற்றிருக்க வேண்டும். அல்லது 12-வது வகுப்பு படித்திருந்தாலும் மனவுறுதியுடன் உள்ளார்களா என்பதுதான் மிக அவசியம். ஏனெனில் வேலை வாய்ப்புக்கு பயிற்சி பெறுவது என்பது வித்தியாசமானது. கடின உழைப்பு இருக்க வேண்டும். ஆறு மாத காலப் பயிற்சி என்றால் ஆறு மாதமும் பொறுமையுடன் பயிற்சிகளைப் பெற்று தங்களை மெருகேற்றிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

பார்வையற்றவர்கள் என்றால் இசைப் பெட்டியை வைத்துக் கொண்டு, பாட்டு சொல்லித் தருவார்கள். இல்லையேல் ஆசிரியராக இருப்பார்கள். அடிகளை எண்ணிக் கொண்டு நடப்பார்கள் போன்ற வழக்கமான க்ளிஷேகளை எல்லாம் நாங்கள் உடைக்கிறோம். இது யதார்த்தம் அல்ல. திரைப்படங்களில் காட்டுவதெல்லாம் பொய் என்று நாங்கள் (கர்ணா வித்யா நிறுவனம்) நிரூபித்திருக்கிறோம். blind leading the blind என்பது ஒருகாலத்தில் எதிர்மறையாக இருந்தது. ஆனால் தற்போது உடைக்கப்பட்டிருகிறது" என்பதை பெருமை கலந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

'கர்ணா வித்யா' அமைப்பில் பயிற்சி மாணவராக உள்ள அனுஷியா கூறும்போது, "நான் பிஎட் முடித்துள்ளேன். இங்கு வருவதற்கு முன்னர் எனக்கு கணினி பற்றி ஏதும் தெரியாது. நான் எங்கு வேலைக்குச் சென்றாலும் கணினியில் பணி செய்ய முடியுமா என்றுதான் கேட்பார்கள். அதன் பிறகு கர்ணா வித்யா அமைப்பு பற்றி நான் தெரிந்து கொண்டேன் இங்கு ஆறு மாதம் எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது என்னால் கணினியில் மற்றவர்களைப் போல நானும் பணி செய்ய முடியும். அதற்கான பயிற்சியை இந்த அமைப்பு வழங்கியுள்ளது.

அதுமட்டுமில்லாது எனது திறமைகேற்ற பணியை எனக்கு பரிந்துரை செய்கிறார்கள். சிலர் பயிற்சியை விரைவாக கற்றுக் கொள்வார்கள், சிலர் கற்றுக் கொள்ள தாமதம் ஆகலாம். அதற்கு ஏற்றதுபோல் மிக பொறுமையாக எங்களுக்கான பயிற்சியை அளிக்கிறார்கள்" என்று கூறினார்.

கர்ணா வித்யாவை பார்வையற்ற மாணவர்கள் தொடர்பு கொள்ள >http://karnavidyafoundation.org/

மின்னஞ்சல்: kvfboard2016@gmail.com

தொலைபேசி எண்கள்: 90032 91673, 98400 18012, ஃபேஸ்புக் பக்கம்: karna vidya foundation

தொடர்புக்கு> indumathy.g@thehindutamil.co.in

SCROLL FOR NEXT