வலைஞர் பக்கம்

தியடோர் மைமன் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

தியடோர் மைமன் - லேசரை கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானி

லேசரை கண்டறிந்து வெற்றிகரமாக அதை செயல்படுத்திக் காட்டிய அமெரிக்க இயற்பியலாளர் தியடோர் ஹாரோல்டு டெட் மைமன் (Theodore Harold Ted Maiman) பிறந்த தினம் இன்று (ஜூலை 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் (1927) பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோதே குடும் பம் கொலராடோவில் குடியேறியது. சிறுவயதிலேயே அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

* மின்பொறியாளரான தந்தை, வீட்டில் மின்னணு ஆய்வகம் வைத்திருந்தார். மாணவப் பருவத்திலேயே, தந்தை செய்யும் சோதனைகளுக்கு உதவியாக இருந்தார். இந்த அனுபவம் மூலம் மின் கருவிகள், வானொலி ஆகியவற்றைப் பழுதுபார்த்து வருமானம் ஈட்டினார்.

* நேஷனல் யூனியன் ரேடியோ நிறுவனத்தில் 17 வயதில் பொறியாளராக நியமிக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின்போது, கடற்படையில் பணிபுரிந்தார். கொலராடோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* ஆற்றலால் தூண்டப்பட்ட ஹீலியம் அணுக்களின் நுண்ணலை - ஒளியியல் அளவீடுகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஆய்வுக்கூடத்துக்கு தேவையான பல கருவிகளை உருவாக்கினார்.

* கலிபோர்னியா மாநிலம் மலிபு நகரில் உள்ள ஹ்யூஸ் ஆய்வகத்தில் பணிபுரிந்தார். விஞ்ஞானி ரால் அட்சின்சன் மேம்படுத்திய செயற்கை சிவப்பு ரத்தினக் கல் அல்லது கெம்பு படிகத்தைக் கொண்டு கதிர்வீச்சின் தூண்டு உமிழ்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒளி என்கிற சீரொளி (லேசர்) கருவியை உருவாக்கினார். அதை 1960-ல் வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார். இதன் அறிவியல், தொழில்நுட்பத்தை விளக்கி பல கட்டுரைகள் எழுதினார்.

* லேசரை கண்டறிந்தது யார் என்று சர்ச்சைகள் எழுந்தாலும், முதன்முதலில் கண்டறிந்து, செயல்படுத்திக் காட்டியது இவர்தான் என உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திரவ லேசர், வளி லேசர், வேதியியல் லேசர், அரைகடத்தி லேசர் என பலவகை லேசர்கள் உருவாக்கப்பட்டன.

* ஹ்யூஸ் ஆய்வகத்தில் பணியாற்றிய பிறகு, குவான்டட்ரான் நிறுவனத் தில் இணைந்து லேசர் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டார். தடிமனான இரும்பை அறுப்பது, அலுமினிய குழாய்களை ஒட்டவைப்பது முதற்கொண்டு, கணினி, டிவிடி, அச்சு இயந்திரங்கள், ஸ்கேனர்கள் என பல துறைகளில் லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

* யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு சொந்தமான கொராட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். மைமன் அசோசியேட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். மேஸர், லேசர், லேசர் காட்சிகள், ஆப்டிகல் ஸ்கேனிங் என ஏராளமான கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெற்றார். ‘லேசர் ஆடிசி’ என்ற நூலை எழுதியுள்ளார்.

* நோபல் பரிசுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டார். அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு அமைப்புகளின் உறுப்பினராக செயல்பட்டார். ஆலிவர் பக்லி பரிசு, ஜப்பான் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றார். பல பல்கலைக்கழகங்கள் இவரை கவுரவித்து டாக்டர் பட்டம் வழங்கின.

* லேசர் தொழில்நுட்பத்தின் முன்னோடியான தியடோர் மைமன் 80-வது வயதில் (2007) மறைந்தார். மரணத்துக்குப் பிறகு இவருக்கு ‘ஸ்டான்ஃபோர்டு இன்ஜினீயரிங் ஹீரோ’ என்ற பெயரை சூட்டி கவுரவப்படுத்தியது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்.

SCROLL FOR NEXT