சரவணன் சந்திரன்
கம்பத்திலிருந்து தேனியை நோக்கி வந்துகொண்டிருக்கும்போது ஆளற்ற சாலையொன்றில் இருந்த புளிய மர நிழலில் பத்து இருபது கிராமத்து மக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளுடன் அமைதியாக அமர்ந்திருந்தனர். எல்லாப் போராட்ட வகைகளும் கவனிக்க வைப்பதற்காகத்தான். ஆனால் ஆளற்ற நெடுஞ்சாலைகளிலும், மக்கள் கவனிக்க பெருவாரியான ஆட்கள் இல்லாதபோதும் அமர்ந்திருக்கிறார்கள். இயல்பான வெளிப்பாடுகள் தொடர்கின்றன. போராட்டம் கூர்மைப்பட்டிருக்கிறது.
செல்வேந்திரன்
கோவை வ.உ.சி மைதானமே குலுங்கிக்கொண்டிருக்கிறது. அலை அலையாக மக்கள் குழந்தைக் குட்டிகளுடன் அறப்போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். பொது அடைப்பினால் உணவகங்கள் இல்லை. போதிய குடிநீர் வசதி இல்லை. உள்ளூர் அடுக்ககங்களில் பெண்கள் கூட்டாகச் சேர்ந்து சமைத்து கலந்த சாதம் பொட்டலம் கட்டி எடுத்துவந்து விநியோகிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் மலையாளிகள், குஜராத்திகள், பஞ்சாபிகள் உள்ளிட்ட இன்ன பிற மாநிலத்தவர்கள். பனி விலகாத காலையில் வட இந்திய கட்டிடத் தொழிலாளர்கள் நீண்ட பேரணியாக நடந்து வந்து போராட்டத்தில் கலந்துகொண்டதைப் பார்த்தேன்.
நீதி: ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டைக் காக்க கை நீட்டும். இந்தத் தேசத்தின் பண்பாட்டை எவரும் ஒற்றைப் புட்டியில் அடைத்து வைக்க முடியாது!
அருள் எழிலன்
பன்னீர் தயாரித்த அவசரச் சட்டத்தை உள்துறை அமைச்சகம் திருத்தங்கள் இன்றி ஜனாதிபதிக்கு அனுப்பியது. ஆனால் சட்ட அமைச்சகம் 25,000 ரூபாய் துவங்கி, பல லட்சம் ரூபாய் வரை அதில் அபராதம் எனும் விதியைச் சேர்த்து, தமிழக அரசுக்கு அனுப்பிவிட்டது. தமிழக அரசு நிறைவேற்றியுள்ள அவசரச் சட்டத்தில் ஜனாதிபதியின் ஒப்புதலோ, கையெழுத்தோ இல்லை. நாளை ஜல்லிக்கட்டு நடக்கலாம். ஆனால், அது வெற்றியாகி விடாது. பன்னீர் அவசரச் சட்ட நகலை மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவாரா?
ஆர்.ஷாஜஹான்
நிரந்தரச் சட்டம் இயற்றும் வரை போராட்டத்தைக் கைவிடாதீர்கள் என்று பதிவுகளைப் பார்க்கிறேன். எப்போது போராட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம். உணர்ச்சிவயப்பட்ட இளைஞர்களுக்குச் சரியான வழி காட்டுங்கள். தூண்டி விடாதீர்கள்.
ராஜன் குறை
அரசு அவசரச் சட்டம் கொண்டுவரலாம்; அவசரமாக ஜல்லிக்கட்டை நிகழ்த்திக்காட்ட வேண்டியதில்லை. தாங்கள் உருவாக்கும் சட்டத்தை அந்த சட்டம் வெளிவந்து அனைவரும் உள்வாங்கும் முன்னர் தாங்களே மதிக்காமல் செயல்படுவதெல்லாம் மிக மலினமான அரசியல். வானதி சீனிவாசன் ஜல்லிக்கட்டை ஒரு கிராமத்தில் தொடங்கி வைத்துவிட்டால், உடனே அத்தனை லட்சம் மக்களும் தாமரைக்கு ஓட்டுப் போட்டு விடுவார்களா? இந்த மலினமான ஸ்டண்டுகளை அடித்து நொறுக்கினார்கள் மக்கள்.
மக்கள் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை என்ற பதற்றத்தில் சுத்தமாக அவர்கள் நம்பிக்கையினை இழக்கும் முயற்சியில்தான் ஓ.பி.எஸ் - பாஜக கூட்டணி செயல்படுகிறது. இதில் ‘மாண்புமிகு சின்னம்மா’ என்று சசிகலாவையும் இடையிடையே சேர்த்துக்கொள்கிறார். தனக்குக் கிடைக்கும் வசையில் ஒன்றிரண்டாவது அவருக்கும் கிடைக்கட்டுமே என்று. அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கூப்பிடுங்கள்; ஒரு வண்டியில் அனைவரும் ஏறி கரங்களைக் கூப்பிக்கொண்டு மெரினா செல்லுங்கள். விளக்குங்கள்; வாக்குறுதி கொடுங்கள். நீங்கள் அவர்களை மதித்தால், அவர்களும் உங்களை மதிப்பார்கள்.
இது ஒட்டுமொத்தமாக ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு விடப்பட்டுள்ள சவால். இணைந்து எதிர்கொள்ளுங்கள். புறக்கணிப்பதோ, வன்முறையால் அடக்குவதோ மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
சுகர் ஜெயபாலன்
போராட்ட களத்தில் ஒரு காட்சி: அமோகம் ஜோர்!
பசங்க: மீசையை முறுக்கு...
கூட்டம்: பீட்டாவை நொறுக்கு.
பொண்ணுங்க: ஓய்ய்ய்ய்ய்ய்... இன்னா... அப்ப மீசை இல்லாத நாங்க என்ன தக்காளி தொக்கா..?
உடனே, செம சிரிப்பு சத்தம். சட்டென்று ஒரு பையன் மைக்கைப் பிடித்தான்: "கூந்தலை கட்டு..."
பொண்ணுங்க (ஆர்ப்பரிப்புடன்): "பீட்டாவை வெட்டு."
சுபகுண ராஜன்
நிரந்தரச் சட்டம் என்று ஒன்றை உருவாக்க முடியாது. அனைத்துச் சட்டங்களும் நீதிமன்ற அவதானிப்புக்கு உட்பட்டவை மட்டுமே. நாளை தமிழக சட்டமன்றம் நிறைவேற்றப் போவதான சட்டமும் உச்ச நீதிமன்றப் பரிசீலனைக்கு உள்ளாகும். அதனை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வேலையெல்லாம் சாத்தியமில்லை.
ஊடக வெளிச்சமும், கவனமும் இவர்களை ‘நிதானமிழக்க’ச் செய்துவிடக் கூடாது. ‘அரசியலற்ற’, ‘தலைமையற்ற’ எல்லாம் ‘கொண்டாட்டம்’வரை சரி. அதுவே ‘காதுகளற்ற’ கூட்டமாய் இவர்களை மாற்றிவிடக் கூடாது. ‘அரசின் செல்லங்க’ளாய் போராடியது வரை சரி. அடுத்து ‘மெய்யான அர’சின் உக்கிரத்துக்கு ஈடு கொடுக்கும் கூட்டமல்ல இது.
யாரோடும் பேச முடியாத நிலை மிக ஆபத்தானது. ஆட்டம் கைமீறுவதற்குள் முடித்துக்கொள்வது புத்திசாலித்தனம்.
ஆழி செந்தில் நாதன்
போராட்டத்தை எப்படி முடிப்பது? போராட்டத்தைத் தொடங்கி நடத்தியவர்கள் அதற்கும் வழிகாண்பார்கள். மற்றவர்கள் அமைதியாக இருங்கள்.
பூர்ணசந்திரன்
அறிவுரை சொல்லாதே
ஆட்டத்தை மட்டும் பார்.
விஜயசங்கர் ராமசந்திரன்
இது புதிதுதான்
புரிபடவில்லைதான்
ஆனாலும் பழையதுகள்
இவ்வளவு
பயப்படக் கூடாது.
********
போராட்டமே ஒரு போதைதான்
அரசியல் பேரணிகள் நடக்கும்போது, மெரீனாவுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் தள்ளுமுள்ளாக இருக்கும். ஒரு வாரகாலமாக மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடியபோதும், இந்தக் கடைகளில் கூட்டமே இல்லை.
போராட்டமே ஒரு போதைதான்!
தண்ணீர் பாக்கெட்டுகள் மூட்டைகளில் குவித்து சாலையோரத்தில் வைத்திருக்கின்றனர். தேவைக்கு மேல் யாருமே எடுக்கவில்லை.
போக்குவரத்தைத் தடை செய்து பிரம்மாண்டம் என்று சந்தோஷப்படாமல், இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் போலீஸைவிட நேர்த்தியாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர்.
புதிய இந்தியா பிறக்கப்போகிறது என்று சொன்னார்கள்.
பிறந்திருப்பது புதிய தமிழகம் போலத்தான் தெரிகிறது!
நாடோடி இலக்கியன்
ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பைக் காட்டிவிட்டோம் என்று இன்னும் அதைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டுமா? பல விஷயங்களில் அழுத்தம் கண்டிருந்த மக்கள் இப்போது வெடித்திருக்கிறார்கள். ‘நம்ம உரிமைகளை நாம்தான் மீட்டெடுக்கணும்’ என்று தெருவில் முதன்முறை துணிச்சலாய் இறங்கியிருக்கிறார்கள். தங்கள் அறிவுஜீவித்தனத்திற்குப் பங்கம் வந்துவிடுமோ என்று பதறி அவர்களின் எழுச்சியை இன்னும் பகடி கருத்து சொல்லும் ஆட்கள் கொஞ்சம் தங்கள் ‘ஈகோ’வைச் சாந்தப்படுத்திவிட்டு சற்றே யோசிக்கலாம்.
கிருஷ்ண குமார் அப்பு
நடிகர்கள் எல்லாம் ஓரிடத்தில் ஒன்று கூடும்போது தொலைக்காட்சிகளில் லைவ் ஸ்ட்ரீம் போகாத ஒரே நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்!