வலைஞர் பக்கம்

துப்பாக்கித்தனத்தை வீழ்த்தும் உடல்

ஆசை

அன்றொரு துப்பாக்கி நீண்டது

உலகின் மிகமிக எளிய

இலக்கொன்றை நோக்கி.

துப்பாக்கித்தனத்தையும் தாண்டி

தன் இலக்குக்கு

முறையாக மரியாதைகள்செய்துவிட்டே

நீண்ட துப்பாக்கிதான் அது.

எவ்வளவு நல்ல துப்பாக்கி அது

என்று இன்றும் சிலாகிக்கப்படுவதுண்டு.

இலக்கின் உடல் மீது

தனிப்பட்ட கோபம் ஏதுமில்லை துப்பாக்கிக்கு

ஆனால் அவ்வுடலின்

விரிந்த கைகள்…

'உனக்கு விரிந்த கைகளில்லை’

என்றல்லவா

இடைவிடாமல் சொல்கின்றன

துப்பாக்கிக்கு.

எந்த அளவுக்கு முடியுமோ

அந்த அளவுக்குச் சுருங்கி

எந்த அளவுக்கு முடியுமோ

அந்த அளவுக்கு இறுகிப்போய்த்

தன்னைப் பற்றியிருக்கும் கைகளையே

என்றும் விரும்பும் துப்பாக்கி.

அதுமட்டுமா

‘துப்பாக்கியை என்றுமே நான் வெறுத்ததில்லை

துப்பாக்கித்தனத்தையே வெறுக்கிறேன்.

வா, துப்பாக்கியே உன்னை அணைத்துக்கொள்கிறேன்’

என்று சொல்லிக்கொண்டு

அணைக்க முயல்கின்றன அந்தக் கைகள்.

துப்பாக்கிக்கும் கருணைசெய்வதான

கடவுள் பிம்பத்தை

அந்த எளிய இலக்கின் உடலுக்கு

அதன் விரிந்த கைகள்

எப்போதும் வழங்கிக்கொண்டிருப்பதை

எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்

ஒரு துப்பாக்கியால்?.

இப்படியெல்லாம்

பிரபஞ்சம் அளாவும்

விரிந்த கைகளின் பாசாங்கு

துப்பாக்கிக்கு இல்லை

ஒரே புள்ளி

பிரபஞ்சத்தை இல்லாமலாக்கிவிடும்.

இலக்கு நோக்கி நீள

இதற்கு மேலா காரணம் வேண்டும்?.

ஒன்று

இரண்டு

மூன்று…

உலகின் துப்பாக்கித்தனத்தைக் குறிவைத்து

வீழ்ந்துகொண்டிருக்கின்றன அன்றிலிருந்து

உலகின் மிகமிக எளிய இலக்கின்

விரிந்த கரங்கள்.

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

SCROLL FOR NEXT