ஆங்கில நாவலாசிரியர், பத்திரிகையாளர்
ஆங்கில இலக்கிய மேதையும், 19-ம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவருமான சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்தின் ப்ளூம்ஸ்பரி நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1812) பிறந்தார். தந்தை, கப்பலில் எழுத்தராகப் பணியாற்றினார். படிப்பில் படுசுட்டி. 4 வயதிலேயே அம்மாவிடம் புத்தகங்கள் படிக்கக் கற்றுக்கொண்டார். கையில் எது கிடைத்தாலும் படிப்பார்.
* வரவுக்கு மீறி செலவு செய்த தந்தை, கடனாளியாகி சிறை செல்ல நேர்ந்தது. அப்போது சார்லஸுக்கு 12 வயது. குடும்பம் வறுமையில் சிக்கியது. இவர் ஆர்வத்தோடு படித்த நூல்கள் மட்டுமல்லாது, இவரது படுக்கையைக்கூட விற்று சாப்பிடும் நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டது. இவரது பள்ளிப் படிப்பு நின்றுபோனது.
* காலணி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு, தான் சந்தித்த இன்னல்கள், விநோதமான மனிதர்கள் குறித்து தினமும் இரவில் குட்டி டைரியில் எழுதி வந்தார். இந்த அனுபவங்கள் பின்னாளில் அவரது படைப்புகளில் வெளிப்பட்டன. வறுமையில் வாடியபோதும், யாரிடமாவது புத்தகத்தைப் பார்த்துவிட்டால், கெஞ்சிக் கூத்தாடி வாங்கிப் படித்துவிடுவார்.
* சிறுவயதிலேயே கதைகள் எழுதும் ஆர்வம் ஊற்றெடுத்தது. அப்பா விடுதலையான பிறகு, மீண்டும் பள்ளியில் சேர்ந்தார். சக மாணவர்களும், அக்கம்பக்கத்தினரும் இவரைக் குற்றவாளியின் மகன் என கிண்டல் செய்தனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், டைரி குறிப்புகளின் துணையோடு ஆக்கபூர்வமாக எழுதத் தொடங்கினார்.
* சிறு சிறு கதைகளை எழுதி, தன்னோடு சகஜமாகப் பேசிப் பழகும் பள்ளி ஊழியர்களிடம் காட்டுவார். அவர்களுடன் பழகியதன் மூலம் சுருக்கெழுத்து எழுதும் முறை, பாட்டு பாடுவது, வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டார். தந்தையோடு சேர்ந்து நீதிமன்றம் உட்பட பல இடங்களுக்கும் சென்றதால், வெளியுலக அனுபவமும் பெற்றார்.
* சட்ட நிறுவனத்தில் 15-வது வயதில் எழுத்தராகச் சேர்ந்து, சட்ட நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றார். அப்போது, சில பத்திரிகைகளிலும் பணியாற்றினார். நாடாளுமன்ற செய்தியாளராகவும் சில காலம் பணியாற்றினார். 16-வது வயதில் முதல் நாவல் எழுதினார்.
* ஓர் இதழில் ‘பிக்விக் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதினார். இவை பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆங்கில இலக்கிய உலகில் இவரது ஒரு கட்டுரைக்காகவே அடுத்த இதழ் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் வாசகர்கள் காத்துக்கிடந்தது அதுவே முதல்முறை. உலகம் முழுவதும் பிரபலமானார். முழுநேர நாவலாசிரியராக மாறினார்.
* சொந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இவரது மாஸ்டர் பீஸ் நாவலான ‘ஆலிவர் ட்விஸ்ட்’, இன்றும் உலக அளவில் போற்றப்படும் அற்புதப் படைப்பாகும். இதுதவிர ஏராளமான சமூக, வரலாற்று நாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். இவரது அனைத்துப் படைப்புகளும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தன.
* எழுதுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை, குழந்தை தொழிலாளர்கள், பெண்களின் நலனுக்காக செலவிட்டார். விறுவிறுப்பான நடையும், நகைச்சுவை இழைந்தோடும் பாணியும், உயிரோட்டமான கதாபாத்திர அமைப்பும் இவரை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாற்றியது.
* சில இதழ்களைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராகவும் செயல்பட்டார். இறுதிவரை பத்திரிகையாளராகப் பணியாற்றினார். ரயில் விபத்தில் சிக்கி, உடல்நலம் பாதிக்கப்பட்ட சார்லஸ் டிக்கன்ஸ் 58-வது வயதில் (1870) மறைந்தார்.