சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர், காங்கிரஸ் கட்சியைச் சேராதவர் என்றாலும் காந்தியின் பரிந்துரையால் முதல் நிதியமைச்சராக நேருவால் நியமிக்கப்பட்ட ஒரே தமிழர் என்ற சிறப்புகளையெல்லாம் கொண்டவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்.
நீதிக் கட்சியில் இருந்த சண்முகம் செட்டியார், 1920-ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினரானார். பிறகு, சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தார். 1924-ல் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டு மத்திய சட்டசபை என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரானார். மத்திய சட்ட சபையின் துணைத் தலைவர், தலைவர் ஆகிய இரு பதவிகளையும் இவர் வகித்திருக்கிறார். முதல் நிதியமைச்சராக இருந்தபோது இவர் தயாரித்த முதல் பட்ஜெட் அனைவரின் வரவேற்பையும் பெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேராதவர் என்றாலும், அவருடைய நிதித் துறை நிர்வாகத்தை காங்கிரஸ் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
பெரியாருடைய சீர்திருத்தக் கருத்துகளால் கவரப்பட்டு, தனது பதவிக் காலத்தில் அவற்றை அமல்படுத்தினார். காந்தி, தாகூர், அன்னி பெசன்ட், சித்தரஞ்சன் தாஸ், அவ்வை டி.கே. சண்முகம், சி.என். அண்ணாதுரை என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களுடனும் சண்முகம் செட்டியார் நட்புகொண்டிருந்தார்.
டெல்லி தமிழ்ச் சங்கம், லண்டன் தமிழ்ச் சங்கம் போன்றவற்றைத் தோற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர். கோவையில் பஞ்சாலைகள் உருவாகவும் கோவை மாபெரும் தொழில் நகரமாகவும் அவருடைய பங்களிப்புகள் ஏராளம்.