வலைஞர் பக்கம்

ஃபிராக் கோரக்புரி 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

விடுதலைப் போராட்ட வீரரும் தலைசிறந்த உருதுக் கவிஞர், எழுத்தாளர், விமர்சகரும் ஞானபீட விருது வென்றவருமான ஃபிராக் கோரக்புரி (Firaq Gorakhpuri) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* உத்தரபிரதேசத்தில், கோரக்பூரில் பிறந்தார் (1896). இவரது இயற்பெயர் ரகுபதி சஹாய் ஃபிராக். இவரது தந்தையும் ஒரு உருது கவிஞர், உருது, அராபி, பாரசீகம் மற்றும் சமஸ்கிருத அறிஞர். மகனும் தந்தையைப் போலவே பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

* அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். இந்தியன் சிவில் சர்வீசில் டெபுடி கலெக்டராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஆர்வம் கொண்டு களமிறங்கினார்.

* நேருவின் விருப்பத்துக்கு இணங்க இந்திய தேசிய காங்கிரசில் செயலாளராகப் பணியாற்றினார். ஆக்ரா சிறையில் இருந்தபோது ஹசரத் நியாஸ் ஃபதேஹ்புரை சந்தித்தது, சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு இந்தி இலக்கியத்தின் தூண்களில் ஒருவரான முன்ஷி பிரேம்சந்த், மஞ்னூன் கோரக்புரி ஆகியோரிடம் நெருங்கிப் பழகியது, ஆகியவற்றால் இவரது படைப்பாற்றல் விழித்துக் கொண்டது.

* இலக்கியத்தில் நாட்டம் பிறந்தது. எழுதத் தொடங்கிவிட்டார். தொடர்ந்து, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். உருது கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

* ஃபிராக் கோரக்புரி என்ற பெயரில் எழுதி வந்தார். அதுவே இவரது பெயராக இலக்கிய உலகில் நிலைத்துவிட்டது. முதன் முதலாக கஜல் எழுத ஆரம்பித்தார். ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்டப் புராண இதிகாசங்களைக் கற்றார். துளசிதாசரின் கவிதைகளில் மனம் பறிகொடுத்த இவர், கபீரின் நிர்குண பக்தி தத்துவத்தைப் பின்பற்றினார்.

* கஜல், நஸ்ம், ரூபாயீ, உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய முறையில் கவிதைகளை எழுதினார். ‘சஃபல் ஜீவன்’ ‘ஸச் கஹாங் ஹை’, ‘தஹி கா பர்த்தன்’, ‘ஸ்ர்ண் ஹிரண்’ உள்ளிட்ட பல சிறுகதைகளும், ‘ஆதி ராத் கோ’, ‘ஹிண்டோலா’, ‘தர்தி கீ கர்வட்’, ‘பிச்லி ராத்’, ‘ரேகிஸ்தான்’, ‘கஜலிஸ்தான்’, ‘ஹசார் தாஸ்தான்’ உள்ளிட்ட ஏராளமான கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்தன.

* குல்-ஏ.நக்மா என்ற கவிதைத் தொகுப்பு இவரது படைப்புகளில் மாஸ்டர் பீஸ் எனக் கருதப்பட்டது. இதற்காக இவருக்கு 1969-ல் ஞானபீட விருது கிடைத்தது. ‘சாது அவுர் குடியா’ என்ற ஒரு நாவலும் எழுதியுள்ளார்.

* இவரது உருது கவிதைகள் 12 தொகுதிகளாக வெளிவந்தன. இலக்கியம், கலாச்சாரம் தொடர்பாக ஆங்கிலத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்தன.

* 60 ஆண்டுகளுக்கு மேல் இலக்கிய சேவையாற்றி வந்த இவர், 40,000-க்கும் மேற்பட்ட ஷாயர்களை (ஈரடிக் கவிதை) இயற்றியுள்ளார். சோவியத் லாண்ட் நேரு விருது, பத்ம பூஷண் விருது, சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றார்.

* 1970-ல் சாகித்ய அகாடமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆராய்ச்சி பேராசியராகவும் நியமிக்கப்பட்டார். இந்திய நவீன உருது இலக்கியத்தின் முன்னணிப் படைப்பாளியாகப் போற்றப்பட்ட ஃபிராக் கோரக்புரி 1982-ம் ஆண்டு 86-வது வயதில் மறைந்தார்.

SCROLL FOR NEXT