வலைஞர் பக்கம்

இன்னொரு பார்வை: இளைஞர்கள் மனம் பண்பட எது தேவை?

செய்திப்பிரிவு

சுவாதி, நவீனா, விணுப்பிரியா, சோனாலி, பிரான்சினா இவர்கள் அனைவரது அகால மரணத்துக்குப் பின்னும் இருப்பதாக சொல்லப்படுவது ஒருதலை காதல்.

இத்தகைய கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்பது வேதனையான விஷயமே. ஒருதலை காதல் எனும் ஒருவகை மன பாதிப்பு பிரச்சினையை காட்டிலும் அதிகமாக காரணமாக முன்வைக்கப்படுவது சினிமா.

ஆனால், பெண் தோழி, காதலி இல்லாத இளைஞன் 'பழம்' 'மொக்கை' என்றெல்லாம் அழைத்து 'ஜாலி சகாக்கள்' தரும் அழுத்தம், ஒரு பெண்ணை எப்படிப் பார்ப்பது, அவளுடன் எப்படிப் பழகுவது, அவளை எப்படி மரியாதையுடன் நடத்துவது என்பதை கற்றுக்கொடுக்காத குடும்பமும் சாடப்பட வேண்டியவே.

இந்த கருத்தை முன்னெடுத்து வைக்கும் வகையில் இளைஞர்கள் மனதை பண்படுத்த பாலின சமத்துவ விழிப்புணர்வு தேவை எனக் கூறுகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், சமூக செயற்பாட்டாளருமான ஜோதிமணி.

ஜோதிமணியில் ஃபேஸ்புக் பதிவு: (அவரது முகநூல் பக்கத்தில் இருக்கும்படியே)

கரூரில் கல்லூரி மாணவி அடித்துக்கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தில் இருந்து இன்னும் மீளவே முடியவில்லை. மாணவர்கள் சொல்கிற தகவல்கள் குலைநடுங்கச் செய்கிறது.

கல்லூரி, பணித்தளம், பொது இடங்கள் எதுவுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் பெண்கள் என்னதான் செய்ய முடியும்?

ஒவ்வொரு பெண்ணும் தன்னை காதலிப்பதாகச் சொல்லும் ஆணை காதலித்துத்தான் ஆகவேண்டும் என்கிற பெரும்பான்மையான 'சினிமாக்களின்' எழுதப்படாத விதி, பெண்ணை வெறும் உரிமைப் பொருளாக ,உடலாக மட்டுமே பார்க்கிற தன்மை, அதை அடைவதற்காக அல்லது இல்லாமலாக்குவதற்காக எந்த எல்லைக்கும் போகிற சைக்கோ மனப்பான்மை இவற்றை என்ன செய்யப்போகிறோம்?

நம் பெண்கள், அவர்களின் பெற்றோர்கள் இதை எப்படி தினம்,தினம் எதிர்கொள்வார்கள்?

சுவாதி, நவீனா என்று காதலின் பெயரால் நீளும் கொடூரங்களுக்கு நமது எதிர்வினை என்ன?

இதை வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் சுருக்கித் தான் பார்க்கப் போகிறோமோ? ஒரு பெண்ணுக்கு நான் உன்னை காதலிக்கவில்லை என்று மறுக்கிற உரிமை கூட இல்லையா? அதற்குப் பரிசு கொடூரமான மரணமா? இதை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம்?

கண்ணுக்கு எட்டியவரை கேள்விகளே அடர்ந்து கிடக்கின்றன. இந்தக்கேள்விகளுக்கான பதில்களில் தான் நமது பெண்களின், தமிழ் சமூகத்தின் எதிர்காலம் இருக்கிறது.

உடனடியாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் துவங்கி உயர்கல்வி வரை பாலின சமத்துவம் தொடர்பான கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும். அந்தக் கல்வி பெண்களை சக மனுஷியாய் தனக்கென அறிவும், உணர்வும், விருப்பங்களும் உள்ளவர்களாய் புரிந்து,உணர்ந்துகொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.

குடும்பங்களும் இம்மதிப்பீடுகளை பிரதிபலிக்க வேண்டும். கடுமையான சட்டங்கள், விரைவான நீதிபரிபாலனம் இந்த அடிப்படைக்கு வலு சேர்ப்பதாக இருக்க வேண்டும்.

பாலின சமத்துவம் மிகுந்த சமுதாயமே இம்மாதிரியான கொடூரங்களில் இருந்து பெண்களையும், சமூகத்தையும் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இன்னொரு பார்வையும் கவனிக்கத்தக்கதே. ஒரு குற்றம் நிகழ்கிறது என்றால் அந்தக் குற்றத்துக்கு வேராக இருப்பது எது என ஆராயப்பட வேண்டும். வேருக்கும், காரணிக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு சில சினிமாக்களில் வரும் சில காட்சிகளும், பாடல்களும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுவதாக அமைந்திருக்கலாம். ஆனால் அத்தகைய காட்சிகள் கருவாவதற்கு வேர் சமுதாயத்தில் பாலின சமத்துவம் இல்லாததே. எனவே, இளைஞர்கள் மனதை பண்படுத்த பாலின சமத்துவ விழிப்புணர்வு தேவை.

SCROLL FOR NEXT