தியடோர் பாஸ்கரன்
வெளி. ரங்கராஜன் எழுதிய ‘வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்’, தொ.பரமசிவன் எழுதிய ‘தெய்வம் என்பதோர்’, வெங்கட் சாமிநாதனின் ‘சினிமா என்ற பெயரில்’, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள், ஆளுமைகள்’ போன்ற புத்தகங்களை வாங்கினேன். திரையாக்கமும் திரைக்கதையும் அடங்கிய மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ புத்தகத்தையும் வாங்கியிருக்கிறேன்.
உண்மையில், நம் கவனத்துக்கு வராமல் போன நல்ல புத்தகங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் தேடிப்பிடித்து, வாங்கிப் படிக்க வேண்டும். நான் அதைத் தொடர்ந்து செய்கிறேன். திரைப்படம் உட்பட பல விஷயங்கள் தொடர்பாக நிறைய நல்ல புத்தகங்கள் உண்டு. இளைஞர்கள் அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும். திரைப்படங்களுக்கும் புத்தகங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு ‘கற்பனை’. ஒரு வரி வாசிக்கும்போதே பல கற்பனைகள் மனதில் ஓடும். அந்தக் கற்பனை மிக அவசியம். வாசிப்புதான் அதைச் சாத்தியமாக்கும். புத்தகக்காட்சிகள் அதற்குப் பெரிய அளவில் உதவும்!