க ரா தே (கவிதைகள்)
ராணிதிலக்
அடவி பதிப்பகம் வெளியீடு
தொலைபேசி: 9994880005
விலை: ரூ.20
நாகம்
இந்தப் பிரதேசத்தில்
ஒரு காலத்தில் பாம்புகள் அலைந்தனவாம்.
இப்பொழுதெல்லாம்
கட்டிடங்களுக்கிடையே
காங்கிரீட் சாலைகள் அலைகின்றன
இரவில்
அதன்மேல் தனியாக நடப்பது பயம்
என்பது வேறு கதை.
மகுடி வாசிப்பவன்
அதிகாலையில் வந்துவிட்டான்.
பாம்பு இல்லை என்றாலும்
நாதமே பாம்பாக மாறிவிட்டதுபோலும்.
அவர் அவர் கதவை அவரவர் அடைக்க
நான் கொஞ்சம் வெளியே வந்து
நாதத்தை வாசலில் நிறுத்திக் காசிட்டேன்.
மகுடிக்காரன் கையை நீட்டினான் மீண்டும்
யாசிக்கும் மகுடிக்காரனின் கை ஒரு படம் எடுக்கும் நாகம்
எனில், தட்சணையிடும் என் கரமும் ஒரு படம் எடுக்கும் நாகமே.
ஒன்றையொன்று
ஒன்று முத்தமிடும் நாகம்.