மெட்றாஸ் வர்த்தக உலகில் பெய ரும் புகழும் பெற்ற ‘வி.பெருமாள் செட்டி அண்ட் சன்ஸ்’ காகிதம், எழுதுபொருள் வர்த்தக நிறுவனம் 2002 மார்ச் இறுதியில் தன்னு டைய பயணத்தை முடித்துக் கொண்டது. அந்த நிறுவனத்துக்குச் சொந்த மான ‘ஹோ & கோ டயரி’ நிறுவனம் முதலில் மூடப்பட்டது. பிறகு, அதனுடைய மெட்றாஸ் பென்சில் ஃபேக்டரி மூடப்பட்டது. இந்த மூன்று நிறுவனங்களும் அன்றைய தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம்.
இந்தத் தொழிலில் முன்னோடியான இந்த நிறுவனம் 1840-ல் ஸ்டிரிங்கர் தெருவில் மிகச் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. வி. பெருமாள் செட்டி இதைத் தொடங்கினார். ஐரோப்பியர்கள் வசித்த ஜார்ஜ் டவுன் கோட்டையை ஒட்டிய பகுதி ‘ஒயிட் டவுன்’ என்றும் இந்தியர்கள் வசித்த பகுதி ‘பிளாக்ஸ் டவுன்’ என்றும் அழைக்கப்பட்டது. அந்த பிளாக்ஸ் டவுனில்தான் சைனா பஜார் ஏற்பட்டது. இப்போது அந்த வீதி நேதாஜி சுபாஷ் சந்திர (என்.எஸ்.சி.) போஸ் சாலை என்று அழைக்கப்படுகிறது.
பெருமாள் செட்டி தனது நிறுவனத்தை சில்லறை வியாபார நிறுவனமாகத்தான் தொடங்கினார். வியாபாரம் பெருகியதும் மொத்த வியாபாரியாக மாறினார். அன்றைய தென்னிந்தியாவின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் வந்து அவரிடம் வாங்கிச் சென்றனர். 19-வது நூற்றாண்டில் அந் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் ஒன்று, “தென்னிந் தியாவிலேயே மிகப் பெரிய எழுது பொருள் விற்பனையகம்” என்று பெருமாள் செட்டி நிறுவனத்தைப் பற்றிக் கூறுகிறது.
எழுது காகிதம், அச்சிடுவதற் கான காகிதம், நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள், பேனாக்கள், ஸ்டைலோ மற்றும் ஃபவுண்டன் பேனாக்கள், காகித உறைகள், அளவிடுவதற்கான டேப்புகள் உள்ளிட்ட கணித சாதனங்கள், ஓவியம் வரைவதற்கான வண்ணங்கள், தூரிகைகள், டைப்-ரைட்டர்கள், நகல் எடுக்கும் சாதனங்கள், தோல் பைகள், கணக்குப் புத்தகங்களையும் பேரேடு களையும் வைப்பதற்கான பெட்டிகள், அலுவலக ரொக்கம் வைப்பதற்கான கல்லாப் பெட்டிகள், கடிதப் பெட்டிகள், கிளாட்ஸ்டன் பைகள், இரும்புப் பெட்டிகள் இதர எழுது பொருள் சாதனங்கள் அனைத்தும் தங்களிடம் கிடைக்கும் என்று அந்த விளம்பரம் நீண்ட பட்டியலைத் தெரிவிக்கிறது.
இந்த நிறுவனத்தை மேலும் விரிவு படுத்துவதற்கான வாய்ப்பு 1886-ல் அதற்குக் கிடைத்தது. அதே வீதியில் ‘ஹோ அண்ட் கோ’ என்ற பெயரில் சிறிய அச்சுக் கூடம் செயல்பட்டுக் கொண்டிருந் தது. அதை நடத்தியவர் ஒரு பிரிட்டிஷ் காரர் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், ஒரு சீனர்தான் அதை நடத்திக் கொண்டிருந்தார். வியாபாரத்தில் ஏற் பட்ட பண முடை காரணமாக அவரால் அந்த அச்சுக்கூடத்தைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.
அதை விற்க விரும் பினார். அந்த சீனருக்கு உதவுவதற்காகவே வி. ஆழ்வார் செட்டி, வி. ராமானுஜம் செட்டி என்ற இரு சகோதரர் களும் அதை வாங்க முடிவு செய்தனர். அவ்விருவருடன் வி. திருவேங்கடநாதன் செட்டி என்பவரும் அதில் பங்குதாரர் ஆனார். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்ற அவர் அங்கிருந்த அச்சகங்களின் நவீன அம்சங்களை இங்கும் புகுத்தத் தூண்டுகோலாக இருந்தார். இதன் விளைவாக தென்னிந்தியாவின் முன் னணி அச்சகங்களில் ஒன்றாக ‘ஹோ அண்ட் கோ’ மாறியது.
‘பெருமாள் செட்டி அண்ட் சன்ஸ்’ நிறுவனம் அடுத்து வாங்கியது ஒரு பென்சில் தயாரிப்பு நிறுவனத்தை. 1914-ல் முதலாவது உலகப் போர் தொடங்குவதற்கு முன்னதாக இந்த நிறுவனம் வாங்கப்பட்டது. ‘மெட்றாஸ் பென்சில் ஃபேக்டரி’ என்று பெயரிடப் பட்ட அந்த நிறுவனம் ‘ஸ்டார் ஆஃப் இன்டியா’என்கிற பெயரில் பென்சில் களைத் தயாரித்தது. முதல் உலகப் போருக்கும் இரண்டாவது உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட பிராண்டு பென்சில்களைத் தயாரித்து விற்றது. அஜந்தா, ஸ்பெக்ட்ரம், கோஹி னூர் என்ற பெயரில் தயாரான பென்சில் கள் பழைய தலைமுறையினரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவை.
பெருமாள் செட்டி நிறுவனத்தின் 3 பிரிவுகளும் ஒன்றையொன்று ஆதரித்த துடன் தத்தமது பிரிவில் முன்னோடியாக வளர்ந்தன. இதனால் ‘பெருமாள் செட்டி அண்ட் சன்ஸ்’ நிறுவனம் ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடியது. நான்காவதாக அப்போதைய தென்னிந் திய ரயில்வே துறைக்கு துபாஷாகவும் நிறுவனம் பணியாற்றத் தொடங்கியது. தென்னிந்திய ரயில்வேக்கு தேவைப்பட்ட அனைத்தையும் வாங்கியும் தயாரித்தும் விற்கும் உரிமையைப் பெற்றது.
தென்னிந்திய ரயில்வேயின் அனைத்து ஊழியர்களுக்கும் தேவைப்படும் சீருடை களைத் தைத்துக் கொடுக்கும் பணி அதனிடம் ஒப்படைக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயில் பயணிகள் விட்டுச் சென்று பிறகு உரிமை கோராமல் சேகரிக்கப்படும் பொருட்களை ஏலத்தில் விற்பது, ரயில்வே துறையின் கழிவு இரும்புகள், மரங்கள் போன்றவற்றை விற்பது ஆகியவையும் அதனிடம் விடப்பட்டது. அத்துடன் தென்னிந்திய ரயில்வேக்குத் தேவைப்பட்ட காகிதம், அச்சிட்ட விண் ணப்பங்கள், எழுதுபொருட்கள் ஆகிய வற்றையும் வழங்கும் வியாபாரமும் அதற்குத் தரப்பட்டது.
‘ஹோ அண்ட் கோ’ நிறுவனம் அன்றைய தென்னிந்திய ராஜதானி யின் எல்லா நகராட்சிகளுக்கும், ஜில்லா போர்டுகளுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும் தேவைப்பட்ட காகி தங்கள், எழுதுபொருட்கள், நமூனாக் களை வழங்கும் உரிமை பெற்றது. அத்துடன் மெட்றாஸ் மாகாண ஆலுநர் அலுவலகத்துக்குத் தேவைப் படுவனவற்றை அளிக்கும் பெருமையும் அதற்கு சேர்ந்துகொண்டது.
1956-ல் இந்திய ரயில்வே தேச உடமையானது. ரயில்வே துறையின் செயல்பாட்டு விதிகளும் வர்த்தக நடை முறைகளும் மாறின. சுதந்திர இந்தியா வில் எழுதுபொருட்கள் உள்ளிட்ட பலவற்றை வெளிநாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. 1960-களில் அரசுக்குத் தேவைப்பட்ட காகிதம், எழுதுபொருட்கள் போன்ற வற்றை விற்க உள்நாட்டு வர்த்தக நிறு வனங்களிடையே கடும் போட்டி ஏற்பட் டது. தென்னிந்திய ரயில்வே மூலம் கிடைத்த வியாபாரம் கையை விட்டுப் போனது.
நகராட்சிகள், ஜில்லா போர்டுகள் போன்றவைத் தங்களுக்குத் தேவைப் பட்டதை உள்ளூரிலேயே கொள்முதல் செய்யும் உரிமை பெற்றன. பால்பாயிண்ட் பேனா அறிமுகமாகி பிரபலம் ஆனது. அதன் விற்பனை பெருகிக்கொண்டே போனது. ஆஃப்செட் பிரிண்டிங் இயந் திரங்கள் புழக்கத்துக்கு வந்ததால் பழைய அச்சு இயந்திரங்கள் மவுசு இழந்தன. இதனால் முதலில் ‘ஹோ அண்ட் கோ’ நிறுவனம் மூடப்பட் டது. அடுத்ததாக ‘மெட்றாஸ் பென்சில் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிப்பு களை நிறுத்தியது. இறுதியாக வி. ’பெருமாள் செட்டி அண்ட் சன்ஸ்’ நிறுவனமே மூடுவிழா கண்டது.
இந்த சகாப்தம் முடிவதற்கு முன்ன தாகவே மெட்றாஸ் மாநகரம் தனது பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான ‘ஹோ அண்ட் கோ’ டயரிகள் தயாரிப்பை நிறுத்த நேரிட்டது. 1912-ல் தான் இந்த டயரிகள் முதலில் தயாரிக் கப்பட்டன. அதில் தரப்பட்ட நிறுத்தல், முகத்தல், அளத்தல் வாய்ப்பாடுகளும் மைல்களை கிலோ மீட்டர்களாக மாற்றுவது, பவுன்களை ரூபாய்களாக மாற்றுவது, நகை எடை வகைகள் போன்றவை மக்களிடையே மிகவும் பிரபலம். அன்றைய அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்விக் கூடங்கள் மட்டுமல்ல; பெரிய மனிதர் களும் அந்த டயரியை வாங்கிப் பயன்படுத்துவதைப் பெருமையாகவும் சடங்காகவும் கடைப்பிடித்தனர்.
அதன் பிறகு டயரியில் தங்களுக்குத் தேவைப் படும் ஓரிரு தகவல்கள் மட்டும் இருந்தால் போதும் வாய்ப்பாடுகள் போன்றவை தேவையில்லை என்று மக்கள் நினைக் கத் தொடங்கினர். அவை இடம் பெறாத டயரிகள் அளவில் கச்சிதமாக இருந்ததுடன் விலையும் கணிசமாகக் குறைந்தது. எனவே ‘ஹோ அண்ட் கோ’வின் டயரிகள் தயாரிப்பை நிறுத்த நேரிட்டது. பிற அச்சகங்களின் டயரிகள் விற்பனை அதிகமானது. எனவே, டயரி தயாரிப்பைக் கைவிட்டு அச்சகத்தை மூடும் நிலை ஏற்பட்டது. இறுதியாக அந்த நிறுவனமே வியாபாரத்திலிருந்து விலகிக் கொண்டது.
- சரித்திரம் பேசும்…