கணினியில் குறுவட்டு (சி.டி.) மூலம் மென் பொருட்கள் முதல் மெல்லிசை வரை சேமித்துப் பயன்படுத்தியிருப்பீர்கள். கணினியின் சேமிப்பு ஊடகமாக ஃப்ளாப்பி டிஸ்க்கும் அதன் பின்னர் சிடி ரோமும் இருந்ததும் அதன் பின்னர் பென் டிரைவ், எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் என்று பல ஊடகங்கள் இருப்பதும் நமக்குத் தெரியும். ஆனால், முதன்முதலில் சி.டி. உருவாக்கப்பட்டது கணினிக்காக அல்ல. இசையைப் பதிவுசெய்யும் ஒரு சாதனமாகத்தான் சிடி உருவாக்கப்பட்டது.
இசை, பாடல்களைப் பதிவுசெய்ய டிஸ்க்குகள் தான் முதலில் பயன்படுத்தப்பட்டன. எனினும், அவற்றில் பதிவு செய்யப்பட்ட பாடல்களைக் கேட்கும்போது, தேவையற்ற சத்தங்களும் கேட்கும். தேவையற்ற சத்தங்களை நீக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில், புகழ்பெற்ற ஆடியோ நிறுவனங்களான பிலிப்ஸும் சோனியும் 1970-களில், தனித்தனியே ஈடுபட்டிருந்தன. இந்த ஆராய்ச்சியில் லேசர் டிஸ்க் மற்றும் ஆப்டிகல் டிஸ்க் தொழில்நுட்பங்களை அந்த நிறுவனங்கள் பயன்படுத்தின. பின்னர், அந்த இரு நிறுவனங்களும் இணைந்து பணியைத் தொடர்ந்தன. ஒலிவட்டைப் பயன்படுத்தத் தேவையான சிடி பிளேயரும் தயார்செய்யப்பட்டது.
முதன்முதலாக, ரிச்சர்ட் ஸ்ட்ராஸ் என்ற ஜெர்மானிய இசைக் கலைஞரின் ‘அன் ஆல்பைன் சிம்பனி’என்ற இசைக் கோவை, 1979-ல் ஒலிவட்டில் பதியப்பட்டது. ஸ்வீடன் இசைக் குழுவான ‘அப்பா’ (ABBA) இசையமைத்த ‘தி விசிட்டர்ஸ்’ என்ற ஆல்பம் 1981-ல் பதிவுசெய்யப்பட்டது. எனினும், இவை வணிகச் சந்தைக்குக் கொண்டுவரப்படவில்லை.
1982-ல் இதே நாளில் பில்லி ஜோயல் என்ற அமெரிக்க இசைக் கலைஞர் இசைத்த ‘52-ண்ட் ஸ்ட்ரீட்’ என்ற ஆல்பம் தான் முதன்முதலாக ஒலிவட்டு வடிவில் வெளியிடப்பட்ட ஆல்பம்.
எனினும், இந்தியாவில் கேசட்டில் பதிவுசெய்து கேட்கும் காலம் 90-களின் இறுதிவரை நீடித்தது. அதன் பின்னர், இந்தியாவில் ஒலிவட்டு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் கணினியில் சிடி ரோமும் இங்கு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.