வலைஞர் பக்கம்

நாடக மேடை: ‘தி இந்து நாடக விழா

செய்திப்பிரிவு

‘தி இந்து' நாடக விழாவில் முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று ஆங்கில நாடகங்கள் சென்னையில் சர் முத்தா வேங்கட சுப்பாராவ் ஹாலில் ஆகஸ்ட் 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றன. இந்த நாடக விழாவில் இடம்பெற்றிருந்த ‘டியர் லயர்’, ‘யதகராசு’, ‘தி காட் ஆஃப் கார்னேஜ்’ என்ற மூன்று நாடகங்களுமே தனித்துவமான நாடக அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கின என்று சொல்லலாம். கடந்த நூற்றாண்டின் கடித இலக்கியம், நவீன வாழ்க்கைமுறையில் தொலைந்துபோன நமக்கான தேடல், இன்றைய குடும்ப அமைப்பில் திருமணம், குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிக்கல்கள் போன்ற களங்களில் இந்த நாடகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஏழு மாணவர்களும், ஓர் அதிசய பறவையும்

‘யதகராசு’ நாடகம், இன்றைய கல்விமுறையில் பள்ளி மாணவர்கள் எப்படி தங்களைத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை நகைச்சுவை, நடனம் கலந்து விளக்கியிருந்தது. ஏழு மாணவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. ‘யதகராசு’ என்ற அதிசய பறவை அவர்களுக்கு அறிமுகமாகிறது. ‘உனக்குள் இருக்கும் உன்னை அடையாளம் கண்டுகொள்’ என்று அந்தப் பறவை அவர்களை வழிநடத்துகிறது.

அதன் வழிநடத்தலைப் பின்தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படும் துணிச்சலையும், ஞானத்தையும் பெறுகின்றனர். இந்த எளிமையான கதையைப் பின்னணி இசை, பாடல்கள், நடனம், தேர்ந்த நடிப்பு போன்ற அம்சங்களை இணைத்து ஓர் பிரம் மாண்டமான இசை நாடகமாக மாற்றியிருக்கிறது ‘யதகராசு’ நாடகக்குழு. ‘கெமிஸ்ட்ரி’ ஆசிரியர், ‘ஹிப்போ’வின் அம்மா, நூலகர் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்த ரேஷ்மாவின் நடிப்பு பார்வையாளர்களைப் பிரமிக்கவைத்தது.

அதிலும் குறிப்பாக, ரேஷ்மாவின் ‘பீரியாடிக் டேபிள்’ பற்றிய பாடல் எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்கவைத்தது. ‘ஹிப்போ’வாக நடித்திருந்த அஞ்சனாவின் உற்சாகமான நடனமும் நடிப்பும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகர் களும் மேடையை முழுக்க தங்கள் கட்டுப்பாட் டுக்குள் வைத்திருந்தனர். பார்வையாளர்களை நன்றாகச் சிரிக்க வைத்து, கடைசியில் ஆழமாகச் சிந்திக்க வைத்திருந்தது ‘யதகராசு’ நாடகம்.

நாடகஆசிரியர் : நிகில் கத்தாரா, யுகி எல்லியாஸ்

இயக்குநர் : யுகி எல்லியாஸ்

தயாரிப்பாளர் : ஜெலம் கோசாலியா

சொற்கள் நிகழ்த்தும் படுகொலைகள்!

இரண்டு குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களுடைய பள்ளிச் செல்லும் மகன்களின் சண்டையைப் பற்றி பேசித் தீர்ப்பதற்காகக் கூடுகிறார்கள். அவர்களுடைய உரையாடல் எப்படி பல தேவையான, தேவையற்ற விஷயங்களைப் பேசுவதால் ஒரு சொற்களின் போர்க்களத்தை உருவாக்குகிறது என்பதை விளக்கியிருந்தது ‘தி காட் ஆஃப் கார்னேஜ்’. இன்றைய பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் சந்திக்கும் சவால்கள், திருமண வாழ்க்கையின் சிக்கல்கள், சமுதாயத்துக்காகப் போடும் போலியான வேஷங்கள், தற்பெருமை எனப் பல அம்சங்களை இந்நாடகம் அவல நகைச்சுவையுடன் அழுத்தமாக விளக்கியிருந்தது.

சோஹ்ரப் அர்தெஷிர், ஜாஃபர் கராச்சிவாலா, அனு மேனன், ஷெர்னாஸ் பட்டேல் என இந்த நாடகத்தில் நடித்திருந்த நான்கு நடிகர்களுமே நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த எண்பது நிமிட நாடகத்தின் முக்கிய அம்சங்களாக அதனுடைய கதைக்களத்தையும், வசனங்களையும் சொல்லலாம். மேடை அமைப்பும், ஒளி அமைப்பும் இயல்பான ஒரு வீட்டின் வரவேற்பறையில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தின.

முடிவில், சொற்களால் நிகழ்த்தப்படும் படுகொலைகளைப் பார்த்த ஒரு தாக்கத்தை ‘தி காட் ஆஃப் கார்னேஜ்’ பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருந்தது.

நாடக ஆசிரியர் : யஸ்மினா ரெஸா, (பிரெஞ்சு) ஆங்கில மொழிபெயர்ப்பு - கிறிஸ்டோபர் ஹாம்ப்டன்

இயக்குநர் : நாதிர் கான்

தயாரிப்பாளர் : க்யூடிபி, விவேக் ராவ்

SCROLL FOR NEXT