பளுதூக்கும் வீராங்கனை
பிரபல பளுதூக்கும் வீராங்கனையும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியுமான கர்ணம் மல்லேஸ்வரி பிறந்த தினம் இன்று (ஜுன் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளத்தில் பிறந்தவர் (1975). தந்தை ரயில்வே பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றினார். சிறு வயது முதலே விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். இவரது அம்மா தன் 4 பெண்களையும் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடுத்தினார்.
# அப்பாவின் பணி இட மாற்றத்தால், அமதலவலசா (Amadalavalasa) என்ற இடத்துக்கு குடும்பம் குடியேறியது. தனது பிள்ளைகளை அம்மை நாயுடு ஜிம்மில் சேர்த்தனர் பெற்றோர். இவரது அக்கா கிருஷ்ண குமாரி தேசிய அளவில் பிரபலமான பளுதூக்கும் வீரங்கனை. மல்லேஸ்வரி உலக அளவில் புகழ்பெற்றார். முதன் முதலாக 13 வயதில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார்.
# இசட்.பி.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளியிலிருந்து வெளியேறிய இவர் முழு மூச்சாகப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கி னார். அம்மா வேறு எதையும்விட தன் மகள்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதில் கவனம் செலுத்திவந்தார். தேசிய ஜூனியர் பளு தூக் கும் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றார்.
# 1990-ல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் நடைபெற்ற 52 கி. எடைப் பிரிவில் பட்டம். அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளிலும் பட்டங்களை வென்றார். தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 54 கி. எடைப்பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
# 1994-ல் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில் கொரியாவில், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங் கள் வென்றார். 1995-ல் தென் கொரியாவில், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 54 கி. எடைப் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். அதே ஆண்டு சீனாவில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதோடு உலகச் சாதனையையும் நிகழ்த்தினார்.
# 1996-ல் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார். 1998-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 54 கி. பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1999-ல் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் பெண்கள் பிரிவில் 3 சாதனைகளை ஏற்படுத்தினார். அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்ன விருது, பத்மஸ்ரீ விருதுகளை வென்றுள்ளார்.
# 2000-ல் சிட்னி, ஒலிம்பிக்கில் 69-கி. எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே பெண்மணி என்ற பெருமை பெற்றார். ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை இவர்தான்.
# பதக்கம் வென்ற பிறகு ஆந்திராவில் பளுதூக்கும் பயிற்சி அகாடமிக் ஒன்றைத் தொடங்கப்போவதாக அறிவித்தார். இவரது விருப்பத்துக்கு இணங்க ஆந்திர அரசு சார்பில் ஹைதராபாத்தில் நிலம் வழங்கப்பட்டது. அரசு செலவிலேயே கட்டிடம் கட்டித்தரப்படும் என்று மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவித்தது.
# 10 வருட கால இவரது சாதனைப் பயணத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது உட்பட 11 தங்கப் பதக்கங்கள் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
# 2004-ல் ஓய்வு பெற்றார். 2009-ல் இந்திய பளு தூக்குதல் கூட்டமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று 41-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘ஆந்திர பிரதேசத்தின் இரும்புப் பெண்’ என்று போற்றப்படும் கர்ணம் மல்லேஸ்வரி இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறார்.