“குமரி மாவட்ட மருங்கூர் நூலகத்தில் தான் பாரதியின் ‘இந்தியா’, ‘விஜயா’ இதழ்களின் பிரதிகள் ஆய்வாளர் அ.கா. பெருமாள் போன்றவர்களால் கண்டெடுக்கப்பட்டன” என்று ஜெயமோகன் எழுதுகிறார் (‘அந்தக் காலத்தில் நூலகம் இருந்தது’, ‘தி இந்து’, 28 அக்டோபர் 2013).
1921-ல் பாரதி மறைந்த காலத்திலிருந்து அவர் நடத்திய இதழ்களைப் பாரதி அன்பர்கள் தேடிவருகிறார்கள். ரா.அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன், பெ. தூரன், ஏ.கே. செட்டியார், ஸி.எஸ். சுப்பிரமணியம், இளசை மணியன், ஆ.இரா. வேங்கடாசலபதி, பா. இறையரசன் என்று இந்தப் பட்டியல் நீளும். சென்னை, புதுச்சேரி, கொல்கத்தா, பாரீஸ் என்று பல ஊர்களில் பாரதியின் பத்திரிகைகள் கிடைத்துள்ளன. மருங்கூரில் ‘விஜயா’ இருப்பது தெரிந்திருந்தால் நான் பிரான்ஸிற்கு ஓடியிருக்க மாட்டேன்.
இவ்வளவு பேர் இத்தனை இடங்களில் தேடியும் ‘இந்தியா’வின் அறுபதுக்கும் மேற்பட்ட இதழ்கள் கிடைக்கவில்லை. சற்றொப்ப நூற்றைம்பது நாள்கள் வெளியான ‘விஜயா’ நாளேட்டின் இருபது இதழ்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மருங்கூரிலோ, வேறு எங்குமோ தான் பார்த்ததில்லை என்று அ.கா. பெருமாள் என்னிடம் தொலைபேசியில் உறுதிப்படுத்துகிறார்.
மறைந்துபோன நூலகங்களில் கற்பனை நூற்தொகுப்புகளும் அடங்கும் போலும்!
ஜெயமோகன் பன்மையில் சொல்வது போல் ‘அ.கா. பெருமாள் போன்ற ஆய்வா ளர்கள்’ தமிழ்நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். துரதிர்ஷ்ட வசமாக அ.கா. பெருமாள் ஒருவர்தான் இருக்கிறார்.
பஞ்சதந்திரக் கிழவியைப் போல் தொலைத்த மோதிரத்தை வெளிச்சம் உள்ள இடத்தில் தேடிப் பயனில்லை. பாரதி நடத்திய பத்திரிகைகள் இனி கிடைத்தால் அந்தச் செய்தி இடைப்பிறவரலாக அல்ல, முதல் பக்கத்தில் கட்டம் போட்டு வர வேண்டும்.
ஆ.இரா. வேங்கடாசலபதி - தொடர்புக்கு: arvchalapathy@yahoo.com