‘கெளபாய் படங்கள்’ என்று அழைக்கப் படும் வெஸ்டர்ன் திரைப்படங்களில் வரும் ரயில் கொள்ளைக் காட்சிகள் ரசிகர்களிடையே பிரசித்தம். இந்திப் படமான ‘ஷோலே’யில் இதுபோன்ற காட்சியைப் பார்த்திருப்போம்.
ஓடும் ரயிலில் முதன்முதலாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் 1866-ல் இதே நாளில் நடந்தது.
அதற்கு முன், ரயில் நிலையங்களில் நின்றிருக்கும் ரயில்களில் சவுகரியமாகத் திருடிச் சென்ற சம்பவங்கள் உண்டு. ஓடும் ரயிலில் உயிரைப் பணயம் வைத்து நடத்தப்பட்டதாக அறியப்பட்ட முதல் கொள்ளைச் சம்பவம் இதுதான்.
இதை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய துடன், தொடர்ந்து பல ரயில் கொள்ளைகளில் ஈடுபட்டு, அந்தக் கால அமெரிக்க ஷெரீஃபு களுக்குத் ‘தண்ணி காட்டிய’ நான்கு கொள்ளையர்களும் சகோதரர்கள். ‘ரினோ கேங்’ என்று அழைக்கப்பட்ட அந்தக் குழுவில், பிராங்க், ஜான், சிம் மற்றும் வில்லியம் ஆகிய சகோதரர்களும் அவர் களது நண்பர்களும் இடம்பெற்றனர். இண்டியானா மாகாணத்தின் ஜாக்சன் கவுன்ட்டியில் ஓஹியோவிலிருந்து மிசிசிபி சென்றுகொண்டிருந்த ரயிலில், சக பயணிகள் போல் பயணம் செய்த அந்தக் குழு, ரயிலில் இருந்த ரூ. 9 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றது.
இப்படியெல்லாம் கொள்ளைச் சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்த்திராத அமெரிக்கக் காவலர்கள், அந்தக் குழுவைக் கைதுசெய்ய முடியாமல் தவித்தனர். பல கொள்ளைச் சம்பவங்களுக்குப் பின்னர், 1868-ல் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களது செயலால் ஆத்திரமடைந் திருந்த மக்களில் சிலர், அவர்கள் வைக்கப்பட்டிருந்த இண்டியானா சிறைக்குள் நுழைந்து பிராங்க், சிம் மற்றும் வில்லியமைத் தூக்கிலிட்டுக் கொன்றனர். வேறொரு சிறையில் இருந்ததால் ஜான் உயிர் தப்பினார். சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையும் சட்ட விரோதமாக இருந்தது தான் விநோதம்!