வலைஞர் பக்கம்

ஆடம் ஃபெர்குசன் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

ஸ்காட்லாந்து தத்துவவாதி

* ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த தத்துவவாதியும் ‘நவீன சமூகவியலின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான ஆடம் ஃபெர்குசன் (Adam Ferguson) பிறந்த தினம் இன்று (ஜுன் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஸ்காட்லாந்து நாட்டில் பெர்த்யைர் பகுதியில் உள்ள லோஜியரெட் என்ற கிராமத்தில் பிறந்தார் (1723). தந்தை மதகுரு. இவரும் ஆன்மிக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் லோஜியரெட் திருச்சபை பள்ளியில் சேர்க்கப்பட்டார். பெர்த் கிராமர் பள்ளியிலும் பயின்றார். பின்னர் எடின்பரோ பல்கலைக்கழகத்திலும் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.

* சிறுவயது முதலே மதகுருவாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததால் செயின்ட் ஆன்ட்ரூசில் மெய்யியல் கல்வி பயின்றார். ஆனால் கல்வியைப் பூர்த்தி செய்யவில்லை. 1745-ல் ராணுவத்தில் சேர்ந்தார். கெய்லக் என்ற மொழியை நன்கு அறிந்திருந்ததால், ராணுவத்தில் பிளாக்வாட்ச் எனப்படும் பிரிவில் துணைப் பாதிரியாராக நியமனம் பெற்றார்.

* விரைவில் தலைமைப் பாதிரியாராக உயர்ந்தார். ஆனால் வாழ்க்கைத் தரம் முன்னேறவில்லை என்பதால் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். எழுதும் திறன் பெற்றிருந்த இவர், இனி எழுதுவதுதான் தன் தொழில் என முடிவு செய்தார்.

* எடின்பரோவில் உள்ள வழக்கறிஞர்கள் நூலகத்தில் நூலகராக வேலை கிடைத்தது. பின்னர் 1759-ல் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் இயற்கைத் தத்துவப் பேராசிரியராக நியமனம் பெற்றார். 1764-ல் உளவியல் தத்துவம், தார்மீகம் சார்ந்த தத்துவப் பாடத் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

* சிறந்த எழுத்தாளருமான இவர், நிறைய எழுதி வந்தார். இவரது ‘எஸ்ஸே ஆன் தி ஹிஸ்டரி ஆஃப் சிவில் சொசைட்டி’ என்ற நூல் ஸ்காட்லாந்தில் மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதும் தலைசிறந்த நூலாகப் புகழ்பெற்றது.

* 1780-ல் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் இரண்டாவது பதிப்புக்காக ‘ஹிஸ்டரி’ என்ற கட்டுரையை எழுதினார். இதே தலைப்பில் முதலில் எழுதப்பட்ட ஒரே ஒரு பத்தி கொண்ட கட்டுரைக்குப் பதிலாக இவர் எழுதிய 40 பக்க கட்டுரை பிரசுரமானது. 1783-ல் வெளிவந்த இவரது ‘ஹிஸ்டரி ஆஃப் தி புரோகிரஸ்’ மற்றும் ‘டெர்னினேஷன் ஆஃப் தி ரோமன் ரிபப்ளிக்’ என்ற நூல் மிகவும் பிரபலமடைந்தது.

* ஐரோப்பிய நாடுகள் உட்பட பல வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சொற்பொழிவுகள் மூலம் சமூகம், தார்மீக நெறிகள், வரலாறு, மக்கள் வாழ்க்கைத் தரம், தத்துவம் குறித்த தனது சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.

* 1792-ல் தனது விரிவுரைகளைத் தொகுத்து, ‘பிரின்சிபல்ஸ் ஆஃப் மாரல் அன்ட் பொலிட்டிகல் சயின்ஸ்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். இதுவும் இவரது முக்கிய நூல்களில் ஒன்றாகப் புகழ்பெற்றது.

* 70-வது வயதில் தனது ‘ஹிஸ்டரி’ என்ற நூலை புதுப்பிப்பதற்காக இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கும் மீண்டும் பயணம் மேற்கொண்டார். சென்ற இடங்களில் எல்லாம் அறிஞர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

* ‘பெர்லின் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ அமைப்பின் கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்காட்லாந்தில் அறி வொளியைப் பிரகாசிக்கச் செய்தவர்களில் முதன்மையானவராகப் போற்றப்பட்டார். தத்துவமேதையாகவும் வரலாற்று ஆசிரியராகவும் புகழ்பெற்ற ஆடம் ஃபெர்குசன் 1816-ம் ஆண்டு 93-வது வயதில் மறைந்தார்.

SCROLL FOR NEXT