பேரிடர் காலத்தில் இணையம் போல உதவிக்கு வரும் தொழில்நுட்பம் வேறில்லை என்பதற்கான நெகிழ்ச்சியான உதாரணம் இது. ஹையான் சூறாவளியால் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்காக போராடி வரும் பெண்ணின் சிகிச்சைக்காக இணையம் மூலம் உதவிகள் குவிகின்றன.
கடந்த நவம்பர் 7-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ஹையான் சூறாவளி தாக்கியது. வரலாற்றின் மிக மோசமான சூறாவளி என்று சொல்லப்படும் இந்த சூறாவளியால் சின்னாபின்னமான நகரங்களில் ஆர்மோக்கும் (Ormoc) ஒன்று.
பிலிப்பைன்சை சூறாவளி தாக்கிய செய்தி கேட்டு கனடா நாட்டில் இருந்த ஹசம் ஹம்மோடி (Houssam Hammoudi) பதறினார். அவர் திருமணம் செய்துகொள்ள இருந்த இளம்பெண் கிரேஸ், ஆர்மோ நகரில் வசிப்பதே இதற்கு காரணம். கிரேசுக்கு என்ன ஆச்சு என்று தெரிந்துகொள்ள முடியாத நிலையில் பதறியபடியே பிலிப்பைன்சுக்கு பயணமானார்.
அர்மோ நகரமே நிலைகுலைந்து போயிருந்தது. கிரேஸ் வசித்த வீடு மேற்கூறை இடிந்து பரிதாபமாகக் காட்சி அளித்ததைப் பார்த்ததுமே அவருக்கு இதயத்துடிப்பு நின்றுவிடும் போல இருந்தது. நல்லவேளையாக கிரேஸ் சூறாவளியில் தப்பிப் பிழைத்து, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கிரேசின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவருடைய முகத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தன. முழங்கை மற்றும் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.
மேல்சிகிச்சை மூலமே கிரேசை காப்பாற்ற முடியும் என முடிவு செய்த ஹம்மோடி, அவரை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து, அருகே உள்ள செபு தீவிற்கு அழைத்துச்சென்று பெரிய மருத்துவமனையில் சேர்த்தார். அவர் நினைத்தை விட கிரேசின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிரேசின் கண்கள் பாதிக்கப்பட்டிருந்தன. கை மற்றும் மணிக்கட்டு மட்டும் அல்லாமல் விலா எலும்புகளும் பாதிக்கப்பட்டிருந்தன. காலிலும் கிருமி தொற்று ஏற்பட்டிருந்தது. பல் எல்லாம் உடைந்திருந்ததால் முகத்தை முழுவதும் சீரமைக்க வேண்டியிருந்தது.
சிக்கலான இந்த சிகிச்சைக்கு பெரும் தொகை தேவைப்படவே ஹம்மோடிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது தான் அவருக்கு இணையம் மூலம் உதவி கோரும் எண்ணம் ஏற்பட்டது. டம்பளர் (tumblr) வலைப்பதிவு சேவையை பயன்படுத்தி 'ஆப்பரேஷன் : சேவிங் கிரேஸ்' எனும் வலைப்பதிவை துவக்கி, உதவி தேவை என வேண்டுகோள் வைத்தார்.
'தயவு செய்து உதவுங்கள், எனக்கு தெரிந்தவர்கள் யாரேனும் 10 டாலர் நன்கொடை அளித்தால் அவளை என்னால் காப்பாற்ற முடியும், என்னிடம் 1,800 டாலர்களே உள்ளன' என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். கிரேஸ் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் கிரேஸ் பேசமுடியாமல் பேசும் வீடியோ காட்சியையும் இணைத்திருந்தார். இந்த வேண்டுகோளை பார்த்ததும் அவருக்கு தெரிந்தவர்கள் மட்டும் அல்லாமல் முன்பின் அறியாதவர்களும்கூட தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்தனர். உயிர் காக்கும் சிகிச்சைக்காக உதவி கோரும் இந்த வலைப்பதிவை மற்றவர்களுக்கும் பரிந்துரைத்தனர். விளைவு, மேலும் பலர் நிதி உதவி அளிக்க முன்வந்தனர்.
இதனிடையே பத்திரிகைகளிலும் இந்த நெகிழ்ச்சியான முயற்சி பற்றி செய்திகள் வெளியாகி மேலும் பலர் கிரேசின் பரிதாப நிலைய அறிந்து உதவினர். இதுவரை 6,700 டாலர்கள் நிதியுதவி கிடைத்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு மொத்தம் 15,000 டாலர்கள் தேவை.
நண்பர்கள் மற்றும் முன் பின் அறியாத இணையவாசிகளின் உதவி இல்லாவிட்டால் இப்போது இருக்கும் நிலையில் இருந்திருக்க முடியாது என்று நெகிச்சியோடு கூறும் ஹம்மோடி தொடர்ந்து கிரேசின் நிலை மற்றும் சிகிச்சை குறித்து வலைப்பதிவு செய்து வருகிறார்.
நெருக்கமான நண்பர்களிடம் தகவல் சொல்வது போல அவர் கிரேசின் நிலையை இணைய நண்பர்களுடம் பகிர்ந்து கொண்டு வருகிறார். இதன்மூலம் ஏற்கனவே உதவியவர்களுக்கு கிரேஸ் எப்படி இருக்கிறார் என தெரிவித்து வருவதோடு அவர் சிகிச்சைக்கு மேலும் தேவைப்படும் நிதி உதவியையும் திரட்ட முற்பட்டு வருகிறார். கிரேசின் சிகிச்சை பற்றிய குறிப்புகளோடு மருத்துவமனை பில்களையும் ஸ்கேன் செய்து இணைத்து வருகிறார். கிரேஸ் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான் என்றும் அவர் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
வலைப்பதிவு முகவரி:>http://operationsavinggrace.tumblr.com/