ஜெர்மனியை சேர்ந்த பிரபல கணிதவியலாளரும், இயற்பியலாளருமான ஃபிரான்ஸ் எர்ன்ஸ்ட் நியூமேன் (Franz Ernst Neumann) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஜெர்மனியில் பெர்லின் அருகே உள்ள ஜோவகிம்ஸ்தல் நகரில் (1798) பிறந்தார். தந்தை விவசாயி. நியூமேனின் சிறு வயதிலேயே அம்மா பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு, தாத்தா வீட்டில் வளர்ந்தார். கணிதத்தில் சிறந்து விளங்கினார். அடிக்கடி போர் நடந்ததால் கல்வி தடைபட்டது.
* படிப்பை 16 வயதில் நிறுத்திவிட்டு, ராணுவத்தில் சேர்ந்தார். போரில் காயம் அடைந்ததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில், ஒரு தீ விபத்தில் குடும்ப சொத்துகள் நாசமானதால், பண நெருக்கடியும் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்து, படிப்பைத் தொடர்ந்தார்.
* தந்தையின் விருப்பப்படி இறையியல் படிப்பில் சேர்ந்தார். ஆனாலும், கணிதம், அறிவியல் மீதான ஆர்வம் குறையவில்லை. பின்னர், ஜெனா பல்கலைக்கழகத்தில் கனிமவியல், படிகவியல் பயின்றார். படிகவியல் குறித்து ஆராய்ந்தார். கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார்.
* தந்தையின் மறைவால் ஓராண்டு காலம் படிப்பு தடைபட்டது. பிறகு, படிகவியலில் ஆராய்ச்சி செய்து கண்டறிந்த விஷயங்களை கட்டுரையாக எழுதி வெளியிட்டார். மீண்டும் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆராய்ச்சிகளும், கட்டுரைகளும் இவருக்கு கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணியைப் பெற்றுத் தந்தது.
* கனிமவியல், இயற்பியல் துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர் மருத்துவ ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். அங்கு மாணவர்களுக்கு ஆராய்ச்சி முறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் பிரபல விஞ்ஞானி ஜேகோபியுடன் இணைந்து கணித -இயற்பியல் பயிலரங்குகள் நடத்தினார்.
* மனைவி வழியில் கிடைத்த சொத்துமூலம், தன் வீடு அருகே ஒரு இயற்பியல் ஆய்வுக்கூடம் அமைத்துக்கொண்டார். பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வுக்கூடம் இல்லாததால், இவரது ஆய்வுக்கூடத்தையே மாணவர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.
* படிகவியல் குறித்த இவரது ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் ‘நியூமேன்ஸ் கோட்பாடு’ என குறிப்பிடப்படுகிறது. உலோகக் கலவைகளின் வெப்பநிலைகள், ஒளி அலைக் கோட்பாடு, இரட்டை விலகல் விதிகள் மற்றும் ஒளியியல், கணித ஆய்வுகளில் ஈடுபட்டார். மூலக்கூறு வெப்ப விதிகளை உருவாக்கினார்.
* இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் செயல்பாட்டில் மின் தூண்டலின் கணித கோட்பாட்டை முதன்முதலாக வரையறுத்தவர் இவர்தான். மின்னோட்டத்தின் தூண்டலுக்கான கணித விதிகள், ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்தார்.
* பல விஷயங்கள் குறித்து ஆராய்ந்தார். தனது ஆராய்ச்சிகள் பற்றி பெரும்பாலும் விரிவுரைகளாகவே வழங்கினார். அவற்றை விளக்கி கட்டுரைகளாக எழுதியது வெகு குறைவு. வெப்ப இயந்திர கோட்பாட்டைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர் என இவரது மகனும் விஞ்ஞானியுமான கார்ல் நியூமேன் குறிப்பிட்டுள்ளார்.
* கணிதம், ஒளியியல், மின்னியல், படிகவியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக டுபிங்கென், ஜெனிவா பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின. இயற்பியல், கணிதத் துறையை தனது மகத்தான ஆராய்ச்சிகள் மூலம் வளப்படுத்திய நியூமேன் 97-வது வயதில் (1895) மறைந்தார்.