நஞ்சையில்
சில நடுகற்கள்
பெயர் தெரியாத விவசாயியின்
பாரம் சுமந்து நிற்கிறது.
இனி வயலும் வயல் சார்ந்த
இடமும் பாலை என
ஐந்திணை திருத்தப்படலாம்
ஏறு பிடித்த உழவன்
சிலுவை சுமந்த யேசுவாய்
பாவம் சுமக்கிறான்
சூல் கொண்டு தலை சாய்ந்த
கதிர்கள் இப்பொழுது
குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தபடி
சம்பா, குருவை எல்லாம்
இனி புரியாத வார்த்தைகளாய்
அகராதியில் மட்டுமே..
கடன் பட்ட பூமியிடம்
தவணை முறையில்
வாழ்ந்துகொண்டிருக்கிறான் இவன்
பயிர் காப்பீட்டுக்கு முன்
இவர்கள் உயிர் காப்பீட்டுக்கு
வழி செய்யுங்களேன்
புலம் பெயர வழியில்லாமல்
மழைக்காக வாய் பிளந்தபடி
பூமியும் காத்திருக்கிறது
வெடித்த பூமியானது
இவன் நிலைகண்டாவது
ஈரம் கசிந்திருக்கலாம்
திராணியற்று கேள்விக்குறியாக
குனிந்தவன் வாழ்வும்
இப்பொழுது கேள்விக்குறியாய் !