வலைஞர் பக்கம்

ஆஸ்வால்டு ஏவரி 10

செய்திப்பிரிவு

மரபணுவின் குணங்களை ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு வருவது டி.என்.ஏ.தான் என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானி ஆஸ்வால்டு தியடோர் ஏவரியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

# கனடாவில் பிறந்தவர். அமெரிக் காவின் நியூயார்க் நகரில் உள்ள தேவாலயத்தில் தந்தைக்கு வேலை கிடைத்ததால் குடும்பத் தோடு குடிபெயர்ந்தார். சிறுவ னாக இருந்த ஏவரியின் கார்னட் வாத்திய இசை, தேவாலய பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திறமை அவருக்கு உதவித் தொகை யையும் பெற்றுத் தந்தது.

# 1904-ம் ஆண்டில் மருத்துவக் கல்வி முடித்து மருத்துவ ராகப் பணியாற்றினார். சக மனிதன் குறித்த இவரது கவலை, மருத்துவ ஆராய்ச்சியாளராக களமிறக்கியது.

# குணப்படுத்த முடியாத நோய்கள் தொடர்பாக இவருக்குள் இருந்த அடுக்கடுக்கான கேள்விகள், பாக்டீரியா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தூண்டியது.

# ப்ரூக்ளினில் உள்ள ஹோக்லாண்ட் மருத்துவ ஆய்வுக்கூடத்தின் இணை இயக்குநர் பொறுப்பை 1907-ல் ஏற்றார். இங்கு நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் ரசாயன மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

# காசநோய்க்குக் காரணமான பாக்டீரியா குறித்து இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை, ராக்ஃபெல்லர் மருத்துவ ஆய்வு மைய இயக்குநர் ருஃபஸ்கோலை மிகவும் கவர்ந்தது. அவரது அழைப்பை ஏற்று, அங்கு பணியில் சேர்ந்தார். 1948-ல் ஓய்வு பெறும் வரை ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

# நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியா தொடர் பான முக்கிய ஆய்வை வேறு இரண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் மேற்கொண்டார். சுமார் 20 காலன் பாக்டீரியாக்களை ஒவ்வொரு கட்டமாகத் தூய்மைப்படுத்தி ஆய்வு நடத்தியபோது, டிஆக்ஸி ரைபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் டி.என்.ஏ. ரகசியத்தைக் கண்டறிந்தார்.

# மரபணுக்கள் புரோட்டீன்களால் மட்டுமே ஆனவை என்று அதுவரை மருத்துவ உலகம் ஆணித்தரமாக நம்பியிருந்ததை இந்த கண்டுபிடிப்பு தகர்த்தது.

# பரம்பரை அடிப்படையிலான மரபணுவின் குணங்களை ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு வருவது டி.என்.ஏ.தான் என்பதைக் கண்டுபிடித்தார். ஆனாலும் இதை பகிரங்கமாக அறிவிக்காமல், நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்துகொண்டார்.

# 1944-ல் டி.என்.ஏ. குறித்து இவரும் இவருடைய சகாக்களும் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. டி.என்.ஏ. குறித்த ஏவரியின் வேறொரு ஆராய்ச்சிக் கட்டுரையால் ஈர்க்கப்பட்ட ஜோஷுவா லெடர்பெர்க் என்ற மருத்துவ மாணவர், பாக்டீரியா அடிப்படையிலான மரபணுவியல் குறித்து ஆய்வு செய்து 1959-ல் நோபல் பரிசு பெற்றார்.

# ஏவரி மேற்கொண்ட டி.என்.ஏ. ஆராய்ச்சியை அடித்தளமாக கொண்டு அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் இவரது வரலாற்றுப் பெருமைவாய்ந்த கண்டுபிடிப்பை உறுதி செய்தன. மரணத்துக்குப் பிறகுதான் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

SCROLL FOR NEXT