சபாநாயகர் தனபால் சட்டசபையில் அவர் நடத்திய ஜனநாயகப் படுகொலையை மூடி மறைக்கும் நோக்கில், திமுக உறுப்பினர்களால் சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாக ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டைக் கூறியதற்கு எதிர்வினையாகவே முகநூலில் நான், “திமுக இல்லையென்றால் நீங்கள் படித்து வந்திருக்க முடியாது” என்று எழுதினேன். அதன் அர்த்தம் சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் திராவிட இயக்கத்தின் வழியாகவே மேலெழுந்து வந்தார்கள் என்பதுதான். இதில் எங்கே ஆணவம் வந்தது? ஒடுக்கப்பட்ட மக்களுடைய சாதி இழிவுகளை துடைப்பதற்காகவும் அவர்களுடைய மேம்பாட்டுக்காகவும் திராவிட இயக்கம் நடத்திய போராட்டங்களையும், பெற்றுத்தந்த கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளையும் யாராலும் மறுக்க முடியாது. நீதிக் கட்சியின் ஆட்சியில் தொடங்கி இந்த மண்ணில் எண்ணற்ற சீர்திருத்தங்கள் நடந்திருக்கின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களைத் திராவிட இயக்கத்தினருக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க முயல்வது ஒரு அரசியல் சதி. ஆனால், இந்த வெற்றுப்பிரச்சாரம் ஒடுக்கப்பட்ட மக்களிடம் எடுபடவில்லை. இன்றும் அவர்கள் பெருமளவில் இரு திராவிட கட்சிகளுக்கே வாக்களிக்கிறாகள் என்றால், திராவிட இயக்கம் உருவாக்கிய சமூகநீதிக் கோட்பாடுகளின் வழியே அந்தச் சமூகங்கள் மேலெழுந்துவந்ததால்தான். பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் ஒடுக்கபட்ட சாதிகளுக்கும் இடையே உள்ள மோதல்களும் சாதிக் கொடுமைகள் இன்னும் இந்த மண்ணில் தொடருவதும் சாதியை வெறுக்கும் எல்லோருமே சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய சவால்கள். தொடர் போராட்டங்கள் வழியாகவே இவற்றை நாம் கடந்த செல்ல முடியும். ஆனால், ஐம்பதாண்டுகளுக்கு முந்தையை சாதிய இறுக்கம் இன்று இங்கு கிடையாது. எவ்வளவோ நல்ல மாற்றங்களும் நடந்திருக்கின்றன.
ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல பாசாங்கு செய்பவர்களைப் பற்றி பேச ஒன்றுமில்லை. ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். திராவிட இயக்கம் தனது நூற்றாண்டைக் கடந்திருக்கும் சூழலில், இந்த நூறு வருடங்களில் அது தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக ஆற்றிய பங்கை மறைக்க விரும்புகிறவர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இங்கே பாஜக போன்ற மதவாத இயக்கங்கள் வளர்வதற்கான களத்தையே உருவாக்குகிறார்கள்.
தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு இயக்கங்கள் போராடியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்திற்கு, திமுகவிற்கு அதற்கான உரிமையைக் கோருவதற்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன!