மெட்றாஸ் பட்டணத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களை நிறுவிய, நிறுவன உறுப்பினர் அல்லது நிர்வாகி என்ற பெருமை வெங்கட்ராம கிருஷ்ணசுவாமி ஐயரைச் சேரும். வி.கே. ஐயர் என்று சுருக்கமாக அவரை அழைப்பர். பிரிட்டிஷ்காரர்களின் அர்பத் நாட் நிதி நிறுவனம் நொடித்த பிறகு சுதேசி மக்களின் நிதித் தேவைக்காகவும் சேமிப்புகளைப் பாதுகாக்கவும் சொந்த மாக வங்கி தேவை என்று உணர்ந்து இந்தியன் வங்கி தொடங்கப்பட ரங்க சுவாமி சீனிவாசனைப் போல முயற்சி களை மேற்கொண்டவர் வி.கே. ஐயர்.
1907-ல் இந்தியன் வங்கி மக்களுக்கான சேவையைத் தொடங்கியது. ரானடே நூலகம், தென்னிந்திய சங்கம், தொழில் நிறுவன சங்கம், குழந்தைகளுக்கான ராமகிருஷ்ண இல்லம், இந்திய ஊழி யர்கள் சங்கம், மயிலாப்பூர் ஆயுர் வேதக் கல்லூரி மருந்தகம் ஆகி யவை தொடங்கப்படுவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார். ‘மெட்றாஸ் சான்ஸ்கிரிட் காலேஜ்’ என்று புகழ் பெற்ற சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு அவருடையது. 1905 இறுதியில் கல்லூரி தொடங்கும் யோசனையை அவர் தெரிவித்தார். 1906 பிப்ரவரி 1-ம் நாள் கல்லூரி தொடங்கப்பட்டது.
இக்கல்லூரி தொடர்பாக அவருக்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லி உதவியவர்கள் ஏ.கிருஷ்ண சுவாமி ஐயர், அவருடைய அண்ணன் சுவாமிநாத ஐயர். அவருடைய பெய ரைக் கொண்டே ‘சுவாமிநாத சாஸ்திரி வேதாந்த பாடசாலை’ என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது. 1880-ல் பிரசி டென்ஸி கல்லூரியில் படித்தபோது வி.கே.ஐயருக்கு கிருஷ்ணசுவாமி ஐயரும் அவருடைய அண்ணன் சுவாமி | நாத ஐயரும் நண்பர்கள் ஆனார்கள். சென்னை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ. தேர்வில் ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய இரு பாடங்களிலும் வி.கே. ஐயர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
ஆனால் அப்போதிருந்த சூழ்நிலை காரணமாக அவருக்கு கிளார்க் வேலை தான் கிடைத்தது. போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெனரல் அலுவலகத்தில் சேர்ந்த அவர் உழைப்பு, திறமை காரணமாக முதல் இந்திய போலீஸ் உதவி கமிஷனரா கப் பதவி உயர்வு பெற்றார். கல்விப் பணி யில் நாட்டம் இருந்ததால் முன்கூட்டியே பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஏ.கே. ஐயர் 1937-ல் மறைந்தார். மயிலாப்பூர் வீதியில் ஏ.கே. ஐயர் நடந்துசெல்வ தையே வேடிக்கை பார்த்து ரசித்ததை வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியார் இரங்கல் குறிப்பில் பதிவிட்டிருக்கிறார்.
“புழுதி நிறைந்த மயிலை சாலையில் கையில் குடை இல்லாமல், காலுக்கு பூட்ஸ் அணியாமல் சட்டைகள் சுருங்கி, தலையை ஒரு பக்கம் சாய்வாக வைத் துக் கொண்டு நடப்பார். அங்கவஸ்திரமும் சால்வையும் இடது தோளில் தொங்கிக் கொண்டிருக்கும். வலது கை விரல்களோ காற்றில் எதையோ எழுதிக்கொண்டே இருக்கும்” என்று கவித்துவமாக வர்ணித்திருக்கிறார்.
சம்ஸ்கிருதக் கல்லூரி மாணவர் களுக்கு ஆங்கிலமும் கற்றுத்தரப்பட வேண்டும் என்று வி.கே.ஐயருக்கு ஏ.கே.ஐயர் ஆலோசனை வழங்கியிருந்தார். ஆங்கிலத்தில் படித்த சம்ஸ்கிருத அறிஞர்கள் கல்லூரியில் பாடம் நடத்து வதுடன் மாணவர்களுக்கு ஆராய்ச்சி யில் வழிகாட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஐரோப்பிய ஆராய்ச்சி யாளர்கள் கீழ்த்திசை மொழிகளை எப்படி ஆராய்ந்தனரோ, அந்த ஆய்வு முறைகள் சம்ஸ்கிருத மாணவர்களுக்கும் கற்றுத் தரப்பட வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார்.
தொன்மையான மொழியைக் கற்கும் மாணவன் அதை நவீனக் கல்வி யாளர்களின் விமர்சனக் கோணத்திலும் ஆராய்ந்து தெளிந்திட வேண்டும் என்று கல்லூரியை நிறுவியவர்கள் விரும்பினார்கள். இதனால்தான் மைசூர், திருவாங்கூர் சமஸ்தானங்களில் இருந்த சம்ஸ்கிருதக் கல்லூரிகளில் இருந்து மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியை அந்நாளில் வேறுபடுத்திக் காட்டியது. கல்லூரியின் பட்ட வகுப்புக்கு இந்தப் பாடமுறை பின்பற்றப்பட்டது. கீழ்த் திசை கல்விப் பட்டங்களுக்கு பாரம் பரிய சம்ஸ்கிருதக் கல்வி முறை பின்பற்றப்பட்டது.
வி.கே. ஐயரும் அவருடைய சகோதர ரும், சட்டத்தில் பட்டம் பெற்ற 25 வயது இளைஞரை மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரிக்கு முதல் முதல்வராக நியமித்த னர். அவர்தான் எஸ். குப்புஸ்வாமி சாஸ்திரி. தொன்மையான சம்ஸ்கிருத மொழியில் நல்ல பாண்டித்தியமும் நவீன ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் கொண்டிருந்தார் சாஸ்திரி. 1911-ல் பிரசிடென்ஸி கல்லூரியில் சம்ஸ்கிருதப் பேராசிரியர் பதவியை ஏற்றார் சாஸ்திரி. பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ்த்திசை நூலகத்தில் கையெழுத்துச் சுவடிகளின் காப்பாளராகவும் பதவி வகித்தார்.
குப்புஸ்வாமி சாஸ்திரி முதல்வராகப் பதவியேற்றபோது மயிலாப்பூர் பலாத் தோப்பில் சர் பாஷ்யம் ஐயங்காருக்குச் சொந்தமான வீட்டில் தொடங்கப்பட்டது. அது வாடகை வீடாகும். 1910-ல் அந்தக் கல்லூரி இப்போது அப்பர் சாமி கோயில் தெருவில் உள்ள இடத்துக்கு இடம் பெயர்ந்தது. 1911-ல் விடுதியும் கட்டப்பட்டு நிறுவனரின் மனைவியார் பாலாம்பாள் பெயர் சூட்டப் பட்டது. 1912-ல் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்டது. இந்தக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் நாட்டின் எல்லா ஊர்களிலும் இருந்த கல்லூரி களிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றினர்.
இந்த சாதனைகளை யெல்லாம் காண வி.கே. ஐயர் நீண்ட நாட்கள் உயிர் வாழவில்லை. தனக்கு 48 வயதானபோது 1911-லேயே அவர் மரணமடைந்தார். மிகச் சிறிது காலமே வாழ்ந்திருந்தாலும் சம்ஸ்கிருத கல்லூரி யின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்ற அவர் சிறந்த வழக்கறிஞராகவும் புகழ் பெற்றார். சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் அவரிடம் தொழில் பழகினார். வி.கே. ஐயர் சென்னையில் மிதவாத காங்கிரஸ்காரர்களின் மாநாட்டையும் நடத்தியிருக்கிறார். அவருடைய தலைமையையும் திறமையும் அந் நாளைய தீவிர காங்கிரஸ்காரர்கள் பாராட்டியுள்ளனர். சுப்பிரமணிய பாரதி யின் பாடல்கள் அந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன.
தன்னுடைய சகோ தரர், மனைவி ஆகியோரின் மரணங் கள் அரசுக்கு எதிராகப் போராடும் அவருடைய தீவிரத்தைக் குறைத்தன. எனவே 1909-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிப் பதவியை ஏற்றார் ஐயர். குடிவாரதாரர் சட்டத்தை மேம் படுத்தியதில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.
- சரித்திரம் பேசும்…