வலைஞர் பக்கம்

லைக்ஸ் டூ ஃபேக்ஸ்: ஃபேஸ்புக் நண்பர்களுக்கு 10 ஆலோசனை

செய்திப்பிரிவு

அண்மைக்காலமாக சமூக வலைதளத்தை பின்னணியாகக் கொண்ட குற்ற நிகழ்வுகள் இளம் தலைமுறையினரை வெகுவாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது.

நம் நட்பு வட்டத்தில் உள்ள பெண்களில் பலரும் தங்கள் உண்மையான முகத்தை மறைத்து மீண்டும் பூ, இயற்கைக் காட்சிகளின் படங்களை புரொஃபைல் பிக்சராக வைக்கத் தொடங்கிவிட்டத்தையும் கவனிக்க முடிகிறது.

ஒரு பக்கம் உலகத்தை நமக்குச் சொல்லித் தரவல்ல ஊடகமாக திகழும் ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்கள், மறுபக்கம் மனத்தை உலுக்கும் தளமாகவும் மாறும் சூழல் நிலவுகிறது.

இந்த வேளையில், ஃபேஸ்புக்கில் இளம் தலைமுறையினர் தன்னையறியாது மூழ்குவது குறித்து கூறும்போது, "முகம் தெரியாதவர்களிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டு மனம் விட்டு எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்வதற்கு முகநூலைப் பயன்படுத்துபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். வீட்டில் பெற்றோர்களின் அருகாமை இல்லாததும் இதற்கு முக்கிய காரணம்.

தாய், தந்தை இருவருமே வேலைக்கு செல்வதால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வரும் பிள்ளைகளிடம் பேசுவதற்கு வீட்டில் யாரும் இருப்பதில்லை. முன்பு போல் தாத்தா பாட்டியுடன் சேர்ந்திருக்கும் கூட்டுக் குடும்ப அமைப்பும் தற்போது இல்லை. சில வீடுகளில் அம்மா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாலும் பிள்ளைகள் வீட்டுக்கு வந்தவுடன் டியூஷன், ஸ்பெஷல் க்ளாஸ் என்று எங்காவது அனுப்பி வைத்து விடுகின்றனர்.

பிள்ளைகளுக்கு தேவையான பொருட்கள் வீடியோ கேம்ஸ், லேப்டாப், மொபைல் ஃபோன் போன்ற நவீன பொருட்களை வாங்கி தந்து விட்டால் போதும் என்று நினைக்கிறார்களே தவிர தன் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது எவ்வளவு முக்கியம் என்று உண்ர்வதில்லை. பிள்ளைகளின் நெருங்கிய நண்பர்களாக முதலில் இருக்க வேண்டியது பெற்றோர்களே. அப்படி இருந்தால் பிள்ளைகள் தன்னை சுற்றி நடப்பதையும் அவர்கள் மனதில் இருப்பதை பெற்றவர்களிடமே மனம் திறந்து பகிர்ந்துகொள்வார்கள்.

ஆனால், இங்கு பல பெற்றோர்கள் குறிப்பாக அப்பாக்கள் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்து வைத்திருப்பதில்லை. இப்படிபட்ட சூழலே பிள்ளைகள் முகம் தெரியாதவர்களிடமும் நட்பு ஏற்படுத்திக்கொள்ள காரணமாக அமைகிறது. அதனால் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணர வேண்டும்" என்றார் மனநல ஆலோசகர் ராஜமீனாட்சி.

ஃபேஸ்புக்கில் வலம் வரும் இளம் தலைமுறையினர் - குறிப்பாக இளம்பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய அம்சங்கள் என அவர் பட்டியலிட்ட 10 அம்சங்கள்:

* தூங்குவது, சாப்பிடுவதற்கு என நேரம் ஒதுக்குவது போல சமூக வலைதளங்களில் இயங்குவதற்கு என்றும் தனியாக ஒரு நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அந்த நேரத்துக்கு மேல் சமூக வலைதளங்களில் இருக்க கூடாது. இதை கடைப்பிடித்தால் ஃபேஸ்புக்குக்கு அடிமையாவதை தடுக்கலாம். மேலும் ஃபேஸ்புக்கிலேயே பல மணி நேரம் வீணாவதையும் தடுக்கலாம்.

* ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் தேவையில்லாமல் நேரம் செலவழிப்பதுடன் பாதிக்கப்படுவது நமது உடல் நிலை, மனநிலையும்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

* சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குடும்பத்துடன் அல்லது நண்பர்களோடு செலவழித்தால் அதிக மகிழ்ச்சியும் உறவுகளுடனான நெருக்கமும் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்கு ஃபேஸ்புக்கில் கிடைக்கும் லைக்குகளை விட குடும்பத்தில் கிடைக்கும் கமெண்ட்ஸ் உங்களை வளர்க்க உதவும். இதன் மூலம் வீட்டில் உங்களுக்கு மதிப்பும் கூடும்.

* நேரடியாகத் தெரிந்தவர்களிடம் மட்டும் சாட்டிங் செய்யுங்கள். குடும்ப விஷயங்களைப் பகிர்வது உங்கள் தனிப்பட்ட விஷயங்களை சாட்டிங்கில் திறந்த புத்தகம் போல பகிர வேண்டாம்.

* நட்பு பட்டியலில் அதிமானவர்களை காட்ட வேண்டும், அதிக லைக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக அறிமுகம் இல்லாதவர்களுக்கு ரெக்வெஸ்ட் கொடுக்கவும் வேண்டாம்; அக்செப்ட் பண்ணவும் வேண்டாம். ஃபேக் ஐடி என்று தெரிந்தால் அதை தவிர்த்து விட வேண்டும்.

* ஃபேஸ்புக்கில் பெண்கள் நட்பு வட்டத்தில் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்வதை தவிருங்கள்.

* வாழ்க்கை முழுவதும் உடன் வரும் துணையை ஃபேஸ்புக்கில் தேட வேண்டும் என முயற்சிக்க வேண்டாம். அப்படி அமைந்தாலும் நேரில் பார்த்து பேசி பழகி முடிவெடுங்கள்.

* ஒரு கருத்தை பதிவிடுவதற்கு முன் பலமுறை பல நோக்கில் யோசிக்கவும். அதிக லைக் வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் எதிர்மறை விளைவுகளை யோசிக்காமல் புகைப்படங்களை பகிர வேண்டாம்.

* சமூக வலைதளங்கள் என்பது நமது முன்னேற்றத்துக்கு தேவைப்படும் ஒரு தொழில்நுட்பமாகவும், தகவல் பரிமாற்ற தளமாகவும் மட்டுமே பார்ப்போம். அது வாழ்க்கையில் ஒரு பங்குதான். அதுவே வாழ்க்கை இல்லை.

* தெரியாமல் அல்லது தெரிந்து செய்த தவறுகள் என்று வருந்த முடியாது. விளைவுகளை உடனே கொண்டு வரும் ஆபத்து நிறைந்தது இணையதளம். ஆனால் எது நடந்தாலும் வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு செல்லாமல் மீண்டு வருவதிலும் கவனம் தேவை.

மனநல ஆலோசகர் ராஜமீனாட்சி

SCROLL FOR NEXT