மராத்தி கவிஞர், நாவலாசிரியர்
பிரபல மராத்தி எழுத்தாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர் என பன்முகப் பரிமாணம் கொண்ட விஷ்ணு வாமன ஷிர்வாட்கர் (Vishnu Vaman Shirwadkar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மகாராஷ்டிர மாநிலம் புனேயில் (1912) பிறந்தவர். தந்தை விவசாயி. இயற்பெயர் கஜானன் ரங்கநாத் ஷிர்வாட்கர். வேறொருவருக்கு தத்து கொடுக்கப்பட்ட பிறகு, ‘விஷ்ணு வாமன ஷிர்வாட்கர்’ ஆனார். பிம்பள்கான், நாசிக்கில் படித்த பிறகு, மும்பை பல்கலைக்கழகத்தில் மெட்ரிக் தேர்ச்சி பெற்றார்.
* நாசிக் ஹெச்பிடி கல்லூரியில் பயின்ற போது கவிதைகள் எழுத ஆரம்பித்தார். ‘குஸுமாக்ரஜ்’ என்ற புனைப்பெயரில் எழுதினார். இவரது கவிதைகள் ‘தர்னாகர்’ என்ற இதழில் வெளிவந்தன. ‘நவா மனூ’ என்ற நாளிதழில் தொடர்ந்து எழுதினார். இவரது 20-வது வயதில் ‘ஜீவன் லஹரி’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது.
* நாசிக்கில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்றார். மராத்தி, ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். ‘கோதாவரி சினிடோன்’ என்ற நிறுவனத்தில் இணைந்து ‘சதி சுலோசனா’ என்ற திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதி, நடித்தார். அப்படத்துக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்காததால், மீண்டும் பத்திரிகை, எழுத்துப் பணிகளைத் தொடர்ந்தார்.
* பல இதழ்களில் எழுதினார். இவரது ‘விஷாகா’ என்ற கவிதைத் தொகுப்பு, மக்களிடம் சுதந்திர வேட்கையைத் தூண்டியது. இது நாடு முழுவதும் பிரபலமானதோடு, இந்திய இலக்கியத்தின் முக்கியப் படைப்பாகவும் போற்றப்பட்டது. இவரது தேசபக்திப் பாடல்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஏராளமான இளைஞர்களைச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வைத்தன.
* நாவல்கள், நாடகங்களும் எழுதத் தொடங்கினார். 1946-ல் ‘வைஷ்ணவ்’ என்ற முதல் நாவல் வெளிவந்தது. இவரது நாடகங்கள் மராத்திய நாடகத் துறைக்குப் புத்துயிரூட்டின. ஷேக்ஸ்பியர், ஆஸ்கர் ஒயில்ட் உள்ளிட்டவர்களின் படைப்புகளைத் தழுவியும் நாடகங்கள் எழுதினார். ‘தூர்ச்சே திவே’ என்ற இவரது முதல் நாடகம் 1948-ல் வெளிவந்தது.
* ‘ஸ்வதேஷ்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். மனிதநேயம் மிக்கவர். ‘லோகஹிதவாதி மண்டல்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காகவும், அவர்களது சமூக உரிமைக்காகவும் போராடினார். 1960-களில் மராத்திய திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
* இலக்கியத்தின் அத்தனை களங்களிலும் முத்திரை பதித்தார். மூன்று நாவல்கள், 16 கவிதைத் தொகுப்புகள், 8 தொகுதிகளாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், 18 நாடகங்கள், 6 ஓரங்க நாடகங்கள், ஏராளமான தேசபக்திப் பாடல்கள் படைத்துள்ளார்.
* இவரது படைப்புகள் அனைத்துமே மராத்தி மொழிக்கு மட்டுமல் லாமல் இந்திய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன. அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத் தலைவராகவும் செயல்பட்டவர்.
* இலக்கியத்துக்கான மாநில அரசு விருதை பலமுறை பெற்றுள்ளார். மராத்திய மொழியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான ‘நடசாம்ராட்’ நாடகத்துக்காக 1974-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். இலக்கியப் பங்களிப்புக்காக 1987-ல் ஞானபீட விருது பெற்றார். 1991-ல் பத்மபூஷண் பெற்றார்.
* அரை நூற்றாண்டுக்கு மேல் மராட்டிய இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவரும், சமூகநீதிக்காகப் போராடியவருமான விஷ்ணு வாமன ஷிர்வாட்கர் 87-வது வயதில் (1999) மறைந்தார். இவரது பிறந்தநாள் ‘மராட்டி பாஷா தினம்’ எனக் கொண்டாடப்பட்டு வருகிறது.