இந்தியாவின் வேதாந்தக் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிய சுவாமி ராம தீர்த்தரின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து…
# பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் முராரிவாலா என்ற கிராமத்தில் பிறந்தவர். சில நாட்களில் தாயை இழந்ததால் அண்ணன் பராமரிப்பில் வளர்ந்தார்.
# சிறு வயதிலேயே ஆன்மிக கதை களைக் கேட்பதில் அளவுகடந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆன்மிக உரையாற்றும் பெரியவர்களிடம் கேள்விகள் கேட்பதுடன் பல சந்தர்ப்பங்களில் உரிய விளக்கமும் அளிப்பார்.
# இறை பக்தியும், ஆன்மிக நாட்டமும் அவரிடம் ஆழமாக குடிகொண்டிருந்ததைக் கண்ட தந்தை, மகன் துறவியாகிவிடப் போகிறானே என்ற பயத்தில் 10 வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிட்டார்.
# பள்ளியில் பாரசீக மொழி கற்றுத் தந்த மவுல்விக்கு தட்சணை கொடுக்க பணம் இல்லை. ஒரே ஒரு கறவை எருமை மாட்டின் உதவியுடன்தான் அவர்கள் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்பாவை சம்மதிக்கவைத்து, அந்த கறவை மாட்டையும் குருவுக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டார்.
# பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பும், லாகூர் அரசு கிறிஸ்தவ கல்லூரியில் கணிதத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். கல்லூரிப் பருவத்தில் கீதையை ஆழ்ந்து படித்ததால் கிருஷ்ண பக்தராக மாறினார்.
# கல்லூரி விடுதிக்கு மாத வாடகை 4 ரூபாய் கொடுக்கமுடியாததால் ஒரு ரூபாய் வாடகையில் பாழடைந்த அறையில் தங்கினார். 2 நண்பர்களுடன் தங்கியிருப்பதாக சக மாணவர்களிடம் கூறியிருந்தார். ஒருநாள் மாணவர் ஒருவர் இவரது அறைக்கு வந்தார். கூரைகூட இல்லாமல் இருந்த இடத்தைப் பார்த்து திடுக்கிட்டார். உங்களுடன் தங்கியிருக்கும் 2 நண்பர்கள் எங்கே என்று கேட்டபோது, அந்த அறையின் பொந்தில் இருந்த 2 பாம்புகளைக் காட்டினார் ராம தீர்த்தர்.
# அதே கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற் றினார். அப்போது லாகூரில் விவேகானந்தரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு இவரைத் துறவியாக மாற்றியது. இமய மலைக்குச் சென்று தவம் செய்தார். வேதாந்தக் கருத்துகளை மக்களிடம் பரப்பினார்.
# சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக குரல் கொடுத்தார். பெண்கள், ஏழைக் குழந்தைகள் கல்வி பெறுவதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்தார். படித்த இளைஞர்கள் இந்தியாவுக்குத் தேவை என்பதை வலியுறுத்தினார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்களின் நலனுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி உதவித் தொகை வழங்கினார்.
# ஜப்பானில் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்து வேதாந்த கோட்பாடுகள் குறித்து உரையாற்றினார். அமெரிக்காவில் ஒன்றரை ஆண்டு காலம் சுற்றுப்பயணம் செய்து, இந்து தர்ம சிறப்புகளை விவரித்தார். அமெரிக்கப் பத்திரிகைகள் இவரைப் பாராட்டி செய்திகள் வெளியிட்டன. இந்தியா திரும்பும் வழியில், எகிப்தில் கெய்ரோ நகர மக்களின் அழைப்பை ஏற்று அங்கு பாரசீக மொழியில் உரையாற்றினார்.
# 33-வது வயதில் சுவாமி ராம தீர்த்தர் உயிர் நீத்தார். தீபாவளித் திருநாளில் இவர் பிறந்தார். சந்நியாசம் ஏற்றது, உயிர் துறந்ததும் தீபாவளி நாளில்தான்.