ஹென்றி டேவிட் தோரோ - அமெரிக்க எழுத்தாளர்
அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மெய்யியலாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஹென்றி டேவிட் தோரோ (Henry David Thoreau) பிறந்த தினம் இன்று (ஜூலை 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் கன்கார்ட் நகரில் (1817) பிறந்தார். தந்தை வர்த்தகர். அறிவுக்கூர்மைமிக்க தோரா, அதே ஊரில் பள்ளிக் கல்வியை முடித்தார். சிறுவயது முதலே பல நூல்களைப் படித்தார். எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
* ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளுடன் இலக்கணம், கட்டுரை எழுதும் நுட்பம், கணிதம், ஆங்கிலம், வரலாறு, தத்துவம் ஆகியவற்றைக் கற்றார். சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அண்ணனுடன் இணைந்து உயர்கல்வி மையம் தொடங்கி அங்கும் கற்பித்தார்.
* எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது கனவு. நாட்குறிப்பில் கவிதை, கட்டுரைகள் எழுதி வந்தார். ஒருசில காரணங்களால் பள்ளியை மூட நேர்ந்ததால், குடும்பத் தொழிலான பென்சில் தயாரிப்பில் இறங்கினார். அதில் பல புதுமைகளைப் புகுத்தினார். எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். இவரது படைப்புகள் 'தி டயல்' என்ற இதழில் வெளிவந்தன.
* நண்பரான ரால்ஃப் வால்டோ எமர்சனின் ஆலோசனையால், இயற்கை சார்ந்து வாழவும், படைப்பின் அற்புதங்களை தனிமையில் ஆராய்ந்து உணரவும் விரும்பினார். ஒரு கட்டத்தில் சக மனிதர்களின் தொடர்பில் இருந்து தன்னை துண்டித்துக்கொண்டார். ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரையில் 2 ஆண்டுகள் வாழ்ந்தார்.
* தனிமையில் பல நூல்களைப் படித்தார். ஏராளமாக எழுதினார். அங்கு தான் பெற்ற அனுபவங்களை 'வால்டன் ஆர் லைஃப் இன் தி வுட்ஸ்' என்ற நூலாகப் படைத்தார். இது மகத்தான வரவேற்பைப் பெற்று உலக இலக்கிய வரலாற்றில் தனி இடம் பிடித்தது. 1846-ல் வெளிவந்த 'மெய்னி வுட்ஸ்' நூலும் உலகப் புகழ்பெற்றது.
* வாக்குரிமைக்கான வரியைக் கட்ட மறுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அனுபவத்தை 'சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்' என்ற உலகப் புகழ்பெற்ற கட்டுரையாக வடித்தார். மனசாட்சிக்கு விரோதமான சட்டங்களை மக்கள் ஒருபோதும் ஏற்கக் கூடாது என்பதே இதன் சாராம்சம்.
* இது பிற்காலத்தில் மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங் ஆகியோருக்கும் உத்வேக சக்தியாக அமைந்தது. காந்தியடிகள் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கம் தொடங்குவதற்கான வழிகாட்டியாகவும் இருந்தது.
* வாழ்நாளின் பெரும்பகுதியை புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலுமே செலவிட வேண்டும் என்று விரும்பியவர். 'உன்னதமான நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும்' என்பார்.
* வாழ்நாள் முழுவதும் அடிமை ஒழிப்புக்கு ஆதரவாக மக்களிடையே உரையாற்றி வந்தார். மிகவும் எளிமையாக வாழ்ந்தார். குறுகிய காலத்தில், ஏராளமான உன்னத படைப்புகளைப் படைத்த ஹென்றி டேவிட் தோரோ, காசநோயால் பாதிக்கப்பட்டு 45-வது வயதில் (1862) மறைந்தார்.
* மறைவுக்குப் பிறகு, இவரது ஏராளமான நூல்கள், கட்டுரைகள், பத்திரிகை செய்திகள், கவிதைகள் அடங்கிய படைப்புகள் தொகுக்கப்பட்டு 20 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களால் இவை இன்றளவும் போற்றப்படுகின்றன.