வலைஞர் பக்கம்

அஞ்சலி | ஞானக்கூத்தனின் ரசிகை!

செய்திப்பிரிவு

ஞானக்கூத்தனின் மனைவி சரோஜா ரங்கநாதன் தொண்டைப் புற்றுநோயால் காலமானார். 1941-ல் கும்பகோணத்தில் பிறந்த சரோஜா, சென்னையில் பொதுப்பணித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தார். தீவிர வாசகர். தி. ஜானகிராமன், அசோகமித்திரன், அம்பை ஆகியோரின் புனைவுகள், பொன்னியின் செல்வன் ஆகியவற்றை அவர் விரும்பிப் பல முறை படித்தார். ராஜம் கிருஷ்ணனும் லக்ஷ்மியும்கூட அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள். அரிதாகச் சிறுகதைகள் எழுதுவார். ஞானக்கூத்தன் அவரை எழுதச் சொல்வார். அவர் எழுதிய ஒரு குறுநாவல், கலைமகள் பத்திரிகை நடத்திய குறுநாவல் போட்டி ஒன்றில் பரிசு பெற்றது. ஆனால், எழுதுவதைவிட வாசிப்பதிலேயே அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.

ஞானக்கூத்தனின் பெரும்பாலான கவிதைகளுக்கு அவர்தான் தமது அழகிய கையெழுத்தால் 'fair copy' தயாரித்தார். சரோஜா புனைவுகளையே விரும்பினார் என்றாலும், வாசிப்பில் இருந்த ஆர்வத்தாலும் அன்பின் வெளிப்பாடாகவும் தம் கணவரின் கவிதைகளைத் தவறாமல் வாசித்தார். கடந்த பல ஆண்டுகளில் ஞானக்கூத்தனின் கையெழுத்தைப் புரிந்துகொண்ட மிகச் சிலரில் ஒருவர் என்றும் சொல்ல வேண்டும்.

கடந்த ஓராண்டு காலமாக சென்னையில் மூத்த மகன் வீட்டில் இருந்தார். சென்ற ஆண்டின் இறுதியில் அவருக்குத் தீவிரமான நுரையீரல் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மீண்டும் அதே இடத்தில் புற்றுநோய் ஏற்பட்டுக் குணப்படுத்த முடியாத நிலையில் மருத்துவக் கவனிப்பைப் பெற்றுவந்தார். கடந்த இரு மாதங்களாக அவர் மருத்துவமனையில்தான் இருந்தார். நோய்களின் விளைவுகள் கடுமையடைந்து மரணமடைந்தார்.

கும்பகோணத்தில் கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து, நிறைய உடன்பிறப்புகளுடன் வளர்ந்தது முதல் வேலை, மூத்த மகள் என்ற முறையில் பொறுப்புகள், மண வாழ்க்கை, அலுவலகப் பணிகளுக்கிடையில் மகன்களை வளர்த்தது, நீண்டகால அரசுப் பணி, நோய், கணவரின் மரணம் என்று பலவித அனுபவங்களோடு அசாதாரணமான, விரிவாக எழுதத்தக்க வாழ்க்கையை வாழ்ந்தார்.

- ஞானக்கூத்தன் குடும்பத்தினர் எழுதிய ஃபேஸ்புக் பதிவிலிருந்து..

SCROLL FOR NEXT