ஒருவர்செய்யும் உதவி உயிர் உள்ளளவும் நினைக்கவைப்பதாக ஒன்று இருக்குமெனில் அது உறுப்புதானமாகத்தான் இருக்கமுடியும்.அது வெறும் செய்தியாக மட்டும் அதைச் சொல்லாமல் இதில் நடித்துள்ளவர்களும் உறுப்புதானத்தை முறைப்படி பதிவு செய்துள்ளனர் என்பதுதான் உருகும் மெழுகின் பளிச்.
ஒரு படைப்பாக்கம் என்றவகையில் சாலை விபத்திலிருந்து தொடங்கும் காட்சிகள், மருத்துமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நகர்கிறது. அங்குவரும் உறவினர்கள், நண்பர்கள் தெரிந்தவர்கள் என பலரின் உரையாடல்களை நம்மை முகம் சுளிக்க வைக்கிறது.
எந்த நேரத்தில் எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என்பதே பல மனிதர்(?)களுக்கு தெரிவதில்லை என்பதுதான் இன்றைய நாகரிக உலகின் மோசமான நிலை. மனித உயிர் பிரச்சனையிலும்கூட மதத்தைப் பற்றிய விவாதங்களை கொண்டுவரும் மனிதர்களை கிழித்துத் தொங்கவிட்டுள்ளார் இயக்குநர்.
குறும்படம் ஆரம்பத்தில் எதிர்பாராமல் நேர்ந்த சாலை விபத்து, மனிதர்களின் இன்றைய ஸ்மார்ட்மோன் மோகத்தினாலும் நிகழ்வதாக வருகிறது. படம் அதைத் தாண்டிச் செல்லும்போது நெடுஞ்சாலையில் செல்லும் வாகனத்தின் வேகத்தைவிட அதிவேகம்.
அந்த ஸ்மார்ட்போனைக் கடந்து சமூகப் பிரச்சனைளைத் தொட்டுச் செல்லும் வேகம் மிகப் பயனுள்ள திசையைநோக்கி செல்கிறது.கதைத்தளத்தின் போக்கை உணர்ந்து நடித்துள்ள அத்தனை கலைஞர்களும் போற்றத்தக்க வகையில் தங்கள் பங்களிப்பை நிறைவேற்றியுள்ளனர். மனைவி மற்றும் குழந்தையாக நடித்தவர்களின் பங்களிப்பு அபாரம்.
குறும்படம் ஒரு கட்டத்தில் வெறும் வசனங்களால் நிறைந்துவழிகிறது. ஆனால் நாடகத்தனம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதில் இருந்தும் லாவகமாக காட்சியாக்கப்பட்டுள்ளது. ஈரானிய செப்ரேஷன் திரைப்படம்போன்ற பரபரப்பும் நெருக்கடியும் நம்மை ஒரு தீயைப் போல பற்றிக்கொள்ள வைத்த இயக்குநர் தஸ்லீம்கான் பாராட்டுக்குரியவர். எதிர்பாராத விபத்தில் சிக்கியவர் மெழுகாவது நல்லதுதான். ஆனால் அது கிளைமாக்ஸில் பார்வையாளனுக்கு இன்னும் தெளிவாகக் கடத்தியிருக்கலாம்.
என்றாலும், உதவும் மனம் படைத்தால் எல்லோரும் மெழுகுதான் என்பதை நிலைநாட்டிய இக்குறும்படத்தை நீங்களும் பார்க்கலாமே?
குறும்படத்தைக் காண
</p>