நெடுந்தொடர்களைப் பார்த்து வீடுகளில் மாமியார் – மருமகள் சண்டைகள் உற்பத்தியாவது சமீப காலமாக சாதாரண நிகழ்வாகிவிட்டது. ‘என்னம்மா இப்பிடி பண்றீங்களேம்மா?’ என்று ‘குடும்ப நடுவர்கள்’ பஞ்சாயத்து பண்ணும் அளவுக்குச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. 76 ஆண்டுகளுக்கு முன் ஒலிபரப்பான வானொலி நிகழ்ச்சி ஒன்று, அமெரிக்காவில் பெரும் பீதியை உருவாக்கியது. உண்மையில், ஹெச். ஜி. வெல்ஸ் எழுதிய ‘வார் ஆஃப் வேர்ல்ட்ஸ்’ என்ற நாவலை தத்ரூபமாக வாசித்துக் காட்டினார் ஆர்ஸன் வெல்ஸ் என்ற அறிவிப்பாளர்.
1938-ல் இதே நாளில் இரவு 8 மணிக்கு ‘தி கொலம்பியா பிராட்காஸ்டிங் சிஸ்டம்’ என்ற வானொலி நிலையம் இதை ஒலிபரப்பியது. ‘நாவலின் ஒலிவடிவம்’ என்ற அறிமுகத்துடன்தான் நிகழ்ச்சி தொடங்கியது. ஆனால், அன்று வேறொரு நிகழ்ச்சியைக் கேட்டு விட்டு, 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் இதைக் கேட்டனர் நேயர்கள். அப்போது செவ்வாய் கிரகவாசிகள் வந்து இறங்கிய இடத்திலிருந்து அறிவிப்பாளர் ஒருவர் தகவல் சொல்லும் பகுதி ஓடிக்கொண்டிருந்தது.
“அய்யஹோ… ஆங்காங்கே தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள்” என்று அவர் அலறியதைக் கேட்ட பலர் வீடுகளிலிருந்து புயல்போல் ஓடிவந்து சாலையை நிறைத்தனர். எங்கும் போக்குவரத்து நெரிசல். பலர் பயத்தில் இறந்தே போனதாகவும் தகவல் உண்டு. ஆனால், எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஒரு வழியாக இது ஒரு ‘நிகழ்ச்சி’தான் என்று மக்களை சமாதானப்படுத்தினார்கள் வானொலி நிலையத்தினர். ‘இத்தோடு தொலைந்தோம்’ என்று பயந்தார் ஆர்ஸன் வெல்ஸ். ஆனால் அப்படி ஒன்றும் ஆகிவிடவில்லை. பின்னாளில் ‘சிட்டிசன் கேன்’ உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கினார் ஆர்ஸன்.