பெண்கள் குறித்த பாரதியாரின் பார்வையில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர்; இந்திய சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்த வெளி நாட்டினர்களில் முக்கியமானவர்; விவேகானந்தரின் முக்கியமான சீடர்: சகோதரி நிவேதிதா.
அயர்லாந்தின் டைரோன் கவுன்ட்டியில் உள்ள டங்கனான் நகரில் 1867-ல் இதே நாளில் பிறந்தவர் நிவேதிதா. இவருடைய இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவரின் தந்தை மத குருவாக இருந்தவர். எலிசபெத்துக்கு இயல்பாகவே கடவுள் பக்தியும் சேவை மனப்பான்மையும் இருந்தது.
ஆசிரியையாகப் பணிபுரிந்த அவர், பின்னர் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார்.
1895-ல் சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்தபோது, அவரைச் சந்தித்து ஆன்மிகம் குறித்து நிறைய சந்தேகங்களைக் கேட்டு அவரது கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் விவேகானந்தருடன் கொல்கத்தா நகருக்கு வந்தார். ராமகிருஷ்ணரின் மனைவியும் ராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவருமான அன்னை சாரதா தேவியுடனான சந்திப்பு அவரது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவியது. அதுவரை எலிசபெத் என்று அறியப்பட்ட அவர் ‘சகோதரி நிவேதிதா ’என்று அழைக்கப் பட்டார்.
கொல்கத்தாவில் பெண்கள் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அந்நகரில்
1899-ல் பிளேக் நோய் தாக்கியபோது, ஏழை மக் களுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சேவை
களைச் செய்தார். தெருக்களைச் சுத்தம் செய்யும் பணியில் உள்ளூர் இளைஞர்களையும் ஈடுபடுத்தினார்.
ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திரபோஸ், அரவிந்தர் உள்ளிட்டவர்களுடன் நட்பு ஏற்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தேவையானது என்று ஆரம்பத்தில் கருதி வந்த நிவேதிதா, பிரிட்டிஷாரின் அடக்கு முறையை உணர்ந்ததும் இந்தியாவின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.