மகாராஷ்டிரத்தின் சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், சிந்தனையாளர் கோபால் கணேஷ் அகர்கர் (Gopal Ganesh Agarkar) பிறந்த தினம் இன்று (ஜூலை 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மகாராஷ்டிர மாநிலம் சாதாரா மாவட்டத்தின் கராட் தாலுக்காவில் டேம்பூ என்ற கிராமத்தில் பிறந்தார் (1856). பள்ளிக் கல்வியை கராட்டில் பயின்றார். சிறுவயதிலேயே சமூக மேம்பாட்டு சிந்தனை மேலோங்கியிருந்தது. 1878-ல் இளங்கலை பட்டமும், 1880-ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.
* படித்த முடித்த உடனேயே சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார். பெரும்பாலான சமூகப் பிரச்சினைகளுக்கு கல்வி தீர்வாக முடியும் என்று நம்பினார். எல்லா வகையிலும் ஒருவர் முன்னேற்றம் பெறுவதற்கான அறிவை கல்வி வழங்க வேண்டும் என்றும் கூறுவார்.
* அதற்கான முனைப்புகளில் இறங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர்களும் சமூக சீர்திருத்தவாதிகளுமான திலகர், விஷ்ணுசாஸ்திரி, சிப்லூன்கர், மகாதேவ் வல்லால் நாம்ஜோஷி உள்ளிட்டோரின் உதவி யுடன் பல கல்வி நிறுவனங்களை முன்னின்று தொடங்கினார். முதலில் 1880-ல் புனேயில் ஆங்கிலப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.
* லோகமான்ய திலகர் தொடங்கிய 'கேசரி' என்ற மராத்தி இதழின் முதல் ஆசிரியராகப் பணியாற்றினார். கோலாப்பூர் திவானின் சில தவறான வணிக செயல்பாடுகள் குறித்து பத்திரிகையில் வெளியா னதால். அவர் இவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். திலகருக்கும் அகர்கருக்கும் தீர்ப்பு பாதகமாக அமைந்து, இருவரும் 101 நாட்கள் பம்பாய் டோங்கரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
* சிறையில் இருந்தபோது ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லட்' நாடகத்தை மராத்தியில் மொழிபெயர்த்தார். மேலும் விடுதலைக்குப் பிறகு சிறை யில் தனது அனுபவங்களை 'டோங்கரி கே ஜேல் மே கே ஹமாரே 101 தின்' என்ற சிறிய புத்தகத்தை வெளியிட்டார். 'அலங்கார் மீமாம்சா' என்ற இவரது நூல் மிகவும் பிரசித்தம். திலகருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் கேசரியிலிருந்து வெளியேறினார்.
* சொந்தமாக 'சுதாரக்' என்ற வாராந்திர இதழைத் தொடங்கினார். அதில் சமூக அநீதிகள், தீண்டாமை, ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்டார். வெறும் பிரச்சாரம் செய்வதோடு மட்டுமல்லாமல் தான் கூறும் ஒழுக்க நெறிகளை வாழ்வில் பின்பற்றி வந்தார்.
* பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. வாக்கிய அமைப்புகளைக் குறித்து மராத்திய இலக்கண நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். விதவை மறுமணத்தைத் தீவிரமாக ஆதரித்தார்.
* குழந்தைத் திருமணம், விதவைகளின் தலைமழித்தல், இனப்பாகு பாடு, தீண்டாமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகிய அவலங்களைத் தீவிரமாக எதிர்த்தார். நண்பர்களுடன் இணைந்து 1884-ல் 'டெக்கான் எஜுகேஷன் சொசைட்டி' என்ற கல்வி அமைப்பையும் 1885-ல் 'ஃபர்கூசன்' கல்லூரியையும் தொடங்கினார்.
* 1891-ல் ஃபர்கூசன் கல்லூரியில் தலைமைப் பொறுப்பை ஏற்று இறுதிவரை செயல்பட்டார். நலிவுற்ற மக்கள் சிறந்த கல்வி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தார்.
* குறுகிய காலத்துக்குள் மகாராஷ்டிராவில் சமூக சீர்திருத்தம் மற்றும் கல்வித் துறைகளுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். 19-ம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் கல்வியாளர்களுள் ஒருவருமான கோபால் கணேஷ் அகர்கர், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 1895-ம் ஆண்டு 39-வது வயதில் மறைந்தார்.