தைப் புரட்சி/ மெரினா புரட்சி அல்லது மாணவர்/ இளைஞர் போராட்டக் கொண்டாட்டம், தீர்மானமான 'அரசியல் நிலைப்பாடுகள்' கொண்டவர்களையும் கள நடவடிக்கையாளர்களையும் வெகுவாகக் குழப்பிவிட்டிருக்கிறது. அதற்கான எதிர்வினைகள் பெரும் பாராட்டுகள், கொண்டாடுதல்கள் தொடங்கி அவநம்பிக்கை, நிராகரிப்பு வரை நீண்டபடி இருக்கிறது. இன்னும் சொல்லப்படுவதற்கு நிறைய உண்டு.
தற்போதைய பதிவுகள் நேரெதிர் நிலைகளில் மட்டுமே இயக்கம் கொள்வதாக அவதானிக்க முடிகிறது. மாற்றுப் பார்வைகள், உரையாடல் சாத்தியங்கள் கடுமையான நிராகரிப்புக்கும் சந்தேகத்துக்கும் ஆளாகிவிடுகின்றன. இதுவரை பல்தள ஆய்வுச் சாத்தியங்கள் கொண்டிருந்த கருத்து நிலைப்பாடுகள் கூட தமது இடைப்புள்ளிகளின் அர்த்தத் தளங்கள் மறுக்கப்படுவதை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. அடிப்படை அரசியல் கருத்துருக்கள் புதிய வடிவில் 'மறுவாசிப்பு' செய்யப்படுவதை மெளனமாகவே கடப்பதாகிறது.
இந்த நிகழ்வினை இன்னும் 'செரிக்க'விட்டு 'வாசிப்பது' அதன் 'உள் ஒழுங்கு'களை வெளிப்படுத்த ஏதுவாகலாம். இப்போதைக்கு ஒன்று மட்டும் ராஜன் குறை பரிந்துரைப்பதுபோல் அதன் 'ஆன்மா' வாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு என்பது ஒரு 'உள்ளீடற்ற குறியீடு' (empty/hollow signifier) என்ற அவதானத்திலிருந்து தொடங்குவது உதவலாம்.
*
ஜல்லிக்கட்டு எழுச்சியினைப் புரிந்துகொள்வதில் உள்ள அடிப்படைப் பிரச்சினையே அது குறித்த உரையாடல்களைக் குழப்புகிறது என்று பார்க்கலாம். அரசியல் போராட்டம் என்பது உள்ளடக்கரீதியானது; அதற்கு இலக்கு அது சார்ந்த தொகுதி நலன் எல்லாம் உண்டு; அரசியல் எழுச்சி என்பது ஒரு வெளிப்பாடு. அதற்கு இலக்கு என்பது இருப்பதுபோலத் தோன்றினாலும் அந்த இலக்கு முக்கியமானதல்ல; அது உருவாக்கிய வெளிப்பாடு என்பதே முக்கியமானது. 'உள்ளடக்க வடிவம்'(Form of Content), 'வெளிப்பாட்டு வடிவம்'(Form of Expression) என்று தெல்யூஸ், கொத்தாரி செய்யும் வகைப்பாட்டின் மூலமும் இதைப் புரிந்துகொள்ளலாம்.
ஜல்லிக்கட்டு எழுச்சியை ஒரு வெளிப்பாடு என்று கொள்ளும்போது, அதன் உள்ளடக்கத்தை அது இனிமேல்தான் உருவாக்கிக்கொள்ளும் என்பதையும் புரிந்துகொள்ளலாம். இந்த வெளிப்பாடு அதனளவில் ஜல்லிக்கட்டை மறுவரையறை செய்துவிட்டது என்பதை உணராததால் வெளிப்படும் குழப்பம் இது.