வலைஞர் பக்கம்

இணைய களம்: விவசாயிகள் பேச வேண்டும்!

சரவணன் சந்திரன்

கையில் பணமிருந்தால் விவசாயத்தை லாபகரமாக நடத்தி விட முடியும். ஆட்கள் வேலைக்குக் கிடைப்பதில்லை என்பது பொதுவான சிக்கல். இப்போதைய பெருஞ் சிக்கல் நிலத்தடி நீர்மட்டம் குறைவு என்பதுதான். அதலபாதாளத்துக்குப் போன போர்வெல்களைக்கூட மேம்படுத்த முடியும். எல்லாவற்றுக்கும் பணம் தேவை. அதை உடனடியாகப் புரட்ட முடியவில்லை என்பதுதான் விவசாயிகளின் பொதுவான பிரச்சினை. வட்டிக்கு வாங்குகிறார்கள். அது விரைவிலேயே குட்டி போட்டு விடுகிறது.

அந்த வகையில் 7% வட்டியில் ரூ. 3 லட்சம் வரை உடனடிக் கடன்களை அளிக்கப்போவதாக இந்த பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே. தவிர, நபார்ட் வங்கிக்கு சுமார் ரூ.40,000 கோடி ஒதுக்கியிருப்பதும் சந்தோஷத்தை அளிக்கிறது. ஏனெனில், நபார்ட் வழியாக சொட்டு நீர்ப் பாசனம் உள்ளிட்ட சில வேலைகளுக்கு மானியத்துடன் கடனுதவி வாங்க முடியும். வாய்க்கால் பாசன மனநிலையிலிருந்து விவசாயிகள் மெல்ல மேலேறினால், சில அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றுதான் தோன்றுகிறது. இந்த மாதிரியான அடிப்படை புரிதல்களைத் தமிழக அரசு கணக்கில் கொள்ளுமானால், அது உண்மையிலேயே விவசாயிகளுக்கு நல்விளைவுகளை ஏற்படுத்தும்.

பணம் இல்லாத விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது எப்படி என்பது குறித்துச் சிந்திக்க வேண்டிய தேவையில்தான் இருக்கிறோம். இப்போதைய உடனடிப் பிரச்சினை, தமிழகம் முழுக்க நிலத்தடி நீர் குறைந்துவிட்டது என்பதுதான். கடந்த வாரம் பரவலாகப் பெய்த மழை ஒரு வகையில் உபயோகமானதாக இருந்திருக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்கப்போகிறது என்கிற அச்சத்தைத் தாண்டி, இப்போது அந்தப் பிராந்தியத்தில் இருப்பவர்களுக்குப் பிரச்சினைகள் குறைவுதான். மழையை எதிர்பார்த்து சோளம், சூரிய காந்தி விதைத்தவர்கள் கடுமையான அடி வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். போர்வெல் போட வசதியில்லாத விவசாயிகள் அவர்கள்.

குளங்கள் வெட்டப்போகிறோம் என பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். அதைப் போல விவசாயிகள் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் இலவசமாக போர்வெல் போட்டுத் தரலாம். உண்மையில், அது அவர்களுக்கு உபயோகமானதாக இருக்கும். எது தேவையோ அதைச் செய்து தராமல் வருடா வருடம் வறட்சி என்று சொல்லி, சில ஆயிரங்களைக் கொடுத்து கணக்கை செட்டில் செய்வதை நிறுத்துவது நலம். எல்லா விவசாயிகளும் தங்களுக்கு என்ன தேவை என்பதை வெளிப்படையாகப் பேசினாலும் நலம்!

SCROLL FOR NEXT