வலைஞர் பக்கம்

மணி கிருஷ்ணஸ்வாமி 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

பிரபல கர்னாடக இசைக் கலைஞர்

சிறந்த கர்னாடக இசைக் கலைஞரும், பக்தி இசையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவருமான மணி கிருஷ்ணஸ்வாமி (Mani Krishnaswami) பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வேலூரில் (1930) பிறந்தவர். இயற்பெயர் மணி பெருந்தேவி. குடும்பமே இசைக் குடும்பம். அப்பா, வேலூர் சங்கீத சபா செயலாளர். 6 வயது சிறுமியாக இருந்தபோது, தாய் மூலமாக இவரது இசைப்பயணம் தொடங்கி யது. அம்மா வயலின் கற்றுத் தந்தார்.

* குடும்ப நண்பர் கோபாலாச்சாரியார், கண்டனூர் பங்காரய்யா, ஜலதரங்கம் ராமணய்யா செட்டி உள்ளிட்ட வித்வான்களிடம் சங்கீதம் கற்றார். அசாதாரண இசைஞானம் படைத்த இவர், இளம் வயதிலேயே சுமார் 500 பாடல்களைக் கற்றுக்கொண்டார். இதற்கிடையில், வேலூரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

* தாயை இழந்த, 12 குழந்தைகள் உள்ள வீட்டின் மூத்த மகளான இவருக்கு இளம் வயதில் நிறைய வீட்டு வேலைகளும், பொறுப்புகளும் இருந்தன. அவற்றையும் சமாளித்து, இசையைக் கற்றார். வீட்டில் தம்பி, தங்கைகளிடம் கட்டுப்பாடு, ஒழுக்கத்தை வளர்த்தார்.

* அறிவுக்கூர்மைமிக்க இவர், மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால், இசை ஆர்வமும் திறனும் இவரை இசையுலகுக்கு மடைமாற்றி விட்டது. சென்னை அடையாறு கலாஷேத்ராவில் சேர்ந்து, சங்கீத சிரோமணி பட்டம் பெற்றார். அங்கு பயிலும்போது மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, டைகர் வரதாச்சாரி, டி.கே.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், பாபாநாசம் சிவன் உள்ளிட்ட சங்கீத ஜாம்பவான்களிடம் இசை கற்கும் வாய்ப்பு பெற்றார்.

* தனித்துவம் வாய்ந்த இவரது குரல் அனைவரையும் கவர்ந்தது. பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றார். தொடர்ந்து, முடிகொண்டான் வெங்கடராம ஐயரிடம் இசை பயின்றார்.

* மத்திய அரசின் உதவித்தொகை பெற்று, டெல்லியில் ஓராண்டு காலம் தங்கியிருந்து இசையில் மேல்படிப்பு பயின்றார். மீண்டும் சென்னை திரும்பியவர், முசிறி சுப்பிரமணிய ஐயரிடம் இசை கற்றார். எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் மிக விரைவாக அதை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பெற்றிருந்தார்.

* தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார். ஏராளமான இசை விழாக்களில் பங்கேற்றார். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளின் இசை விழாக்களுக்கு இந்தியப் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டார்.

* அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். புகழ்பெற்ற இசை ஞானிகளின் பாடல்களைப் பாடி இசைத்தட்டுகள் வெளியிட்டார். பக்தி இசையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆதிசங்கரரின் சவுந்தர்ய லஹரி, தேசிகாச்சாரியாரின் அச்சுத சதகம், தயாசதகம் மற்றும் கோடா ஸ்ருதி, நாராயண கவசம் உள்ளிட்ட பல பாடல்களின் இசைத்தட்டுகளை வெளிட்டுள்ளார்.

* பத்மஸ்ரீ கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத வித்யா சரஸ்வதி, திவ்யகான ப்ரவீணா, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத சூடாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது இசைப் பயணத்தில் கணவர் கிருஷ்ணஸ்வாமியின் பங்கு முக்கியமானது.

* திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. திருப்பதி திருமலை தேவஸ்தானம் இவருக்கு ஆஸ்தான வித்வான் பட்டம் வழங்கியது. தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இசைக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த மணி கிருஷ்ணஸ்வாமி 72-வது வயதில் (2002) மறைந்தார்.

SCROLL FOR NEXT